தமிழைப் பற்றி சில விவாதங்கள்

வணக்கம் நண்பர்களே! இன்று இணையத்தில் ஒரு குறிப்பிட்ட சமுகத்தையோ, மாநிலத்தவர்களையோ அல்லது மொழி பேசுபவர்களையோ தரக்குறைவாக பதிவிடும் பழக்கம் அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதில் தமிழ் மொழியும் தப்பிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், தமிழ்தான் இந்த மாதிரியான விவாதங்களில் அதிகமாக அடிபடுவது. பல தளங்களில் விவாதங்களைப் படிக்கும்போது மனம் வெம்புகிறது.

இவ்வகை விவாதங்களில் ஈடுபடுபவர்கள் ஒரு சில கேள்விகளை எழுப்பி, தமிழின் தரத்தை தவறாக மதிப்பிடுகிறார்கள் மற்றும் அவர்கள் மொழியை உயர்வாக கூறுகிறார்கள். இதற்கு பதில் தெரியாத தமிழர்களும் அவர்கள் சொல்வது உண்மைதான் என்று எண்ணிக்கொண்டு இவர்களும் அவர்களுக்கு ஒத்து ஓதுகிறார்கள். சிலர் தமிழை விட்டுக்கொடுக்காமல் அவர்களோடு சண்டைக்கு செல்கின்றனர். இதனால் பல தளங்களில் ஒரு மொழிப்போரே நடக்கிறது.

எனவே, அவர்கள் எழுப்பும் கேள்விகளிக்கு இந்த பதிவில் பதில் அளிக்க விரும்புகிறேன். எனக்கு தெரிந்த வரையில் எழுதுகிறேன். மாற்றுக் கருத்துக்கள் இருப்பின் தெரிவிக்கவும். மொழிபற்று குறைந்து தன் தாய் மொழியை குறையுள்ள மொழி என்று கருதும் தமிழர்கள் சிலருக்கும், தமிழ் மொழியை மற்றும் பண்பாட்டை குறை கூறும் பிறமொழி நண்பர்களுக்கு தமிழ் நண்பர்கள் மூலம் உண்மையை எடுத்துக்கூறவும் எழுதப்பட்ட பதிவுதான் இது. வேறு எந்த மொழியையும் குறைகூறவோ அல்லது யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல. சரி, விவாதத்திற்கு வருவோம். விவாதத்திற்கு எழுப்பப்பட்ட கேள்விகள் சிவப்பு நிறத்திலும் என்னுடைய பதில் கறுப்பு நிறத்திலும் உள்ளன.

தமிழில் 247 எழுத்துக்கள் இருக்கின்றன. ஆனால், உலகில் சாதாரணமாக பயன்படுத்தப்படும் ஸ,ஷ,ஹ போன்ற உச்சரிப்புகள் இல்லை. “பாம்பு உஸ் என்று கத்தியது” என்பதில் “உஸ்” என்பதை தமிழில் எப்படி கூறுவது? ஆனால், வெறும் இருபத்தாறு எழுத்துக்களை கொண்ட ஆங்கிலம் உலகில் உள்ள அனைத்து மொழி வார்த்தைகளையும் எழுத தகுந்ததாக இருக்கிறது. தமிழ் மொழியோ வடமொழியிலிருந்து கடன் வாங்குகிறது. இதுவா சிறந்த மொழி? அதற்கு எனக்கு ஆங்கிலமே போதுமே?

முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட கணிப்பொறி ஒரு வீட்டை விடப் பெரியதாக இருந்ததாம். அதனை கீழுள்ள படத்தில் பார்க்கவும்.

Eniac-the-first-computer

பின் அறிவியல் வளர்ச்சியால் அதன் அளவு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து இப்பொழுது ஒரு சிறிய பேனாவில் கூட பொருத்திக்கொள்ளும் அளவிருக்கு வந்துவிட்டது. அதைப்போன்றுதான் மொழியும்; முதலில் கண்டுபிடித்த மொழி அதிக எழுத்துக்களையும் அவற்றின் வழிதோன்றல் மொழிகள் அதனைவிட குறைவான எழுத்துக்களையும் கொண்டுள்ளன. உலகில் உள்ள அனைத்து மொழிகளின் கலவையான ஆங்கிலம் சில எழுத்துக்களை மட்டும் கொண்டிருப்பதற்கு இதுதான் காரணம். முதலில் கண்டுபிடித்த கணினியை யாரும் பயன்படுத்துவதில்லை. ஆனால், மொழியை அப்படி விட்டுவிட முடியாது. ஏனெனில் அது சமுதாயத்தோடும் பண்பாட்டோடும் தொடர்புடையது.

அடுத்தது, உச்சரிப்பை பொறுத்தவரையில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. மனிதர்கள் வாழும் சூழ்நிலையைப் பொறுத்தே உச்சரிப்புகள் உருவாகின்றன. எனவே ஒரு மொழியில் இருக்கும் உச்சரிப்புகள் மற்ற மொழிகளிலும் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. தமிழில் உள்ள ‘ழ்’ என்னும் உச்சரிப்பு ஆங்கிலத்தில் இருக்கிறதா? இல்லையே. தமிழை ஆங்கிலத்தில் தமில் என்றுதானே எழுதமுடியும்? மாட்டு வண்டி ஓட்டுபவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? அவர்கள் மாட்டை அடித்து விரட்டும்போது, நாக்கை சுழற்றி ஒரு சத்தம் போட்டு விரட்டுவார்கள் (ஹைய் க்ட்… போப்….தமிழில் எழுத முடியல). அதை எந்த மொழியிலாவது எழுத முடியுமா?

பாம்பு சீறியது என்று எழுதவேண்டுமே தவிர உஸ் உஸ்ன்னு கத்துச்சு என்று எழுதக்கூடாது. தமிழில் தவறாக உச்சரிக்கப்படும் வார்த்தைகளை எடுத்துக்கொள்வோம். உதாரணமாக இன்று தமிழ் நாட்டில் பல இடங்களில் ‘சீனி’யை ‘ஜீனி’ என்று அழைக்கிறார்கள். ஆக, தமிழைப் பொறுத்தவரை ஒரு உச்சரிப்பு மருவி வருவதால் தோன்றும் உச்சரிப்புகள்தான் ஜ,ஸ,ஷ போன்றவைகளே தவிர உண்மையான உச்சரிப்புகள் அல்ல. இன்னும் சொல்லப்போனால், ஐரோப்பிய மொழிகள் சிலவற்றில் உள்ள எழுத்துக்களுக்கு காரி முழிவது போலவும் வாந்தி எடுப்பது போலவும் உச்சரிப்புகள் உள்ளன. அவைகள் அவர்கள் தகவமைப்பிற்கேற்ப உருவானவை, அவ்வளவுதான்.

தமிழ் என்பது ஒரு மொழிதானே? ஏன் தமிழ் தமிழ் என்று அதற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?

தாயும் ஒரு பெண்தானே? அவளுக்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம்? என்று கேட்பதுபோல் இருக்கிறது. தமிழர்களைப் பொறுத்தவரை தாய் மொழியும் தாயும் சமம். தமிழை நாங்கள் அந்த அளவிற்கு வணங்குகிறோம். எந்த மொழியிலாவது அந்த மொழியையே ஒருவனுக்கு பெயராக சூட்டுவார்களா? யாராவது English, ஹிந்தி, மலையாளம், தெலுங்கு அல்லது ஏதேனும் ஒரு மொழியை பெயராக வைத்திருக்கிறார்களா? தமிழர்களாதான் தமிழ், தமிழ்ச்செல்வன், தமிழ்ச்செல்வி, தமிழரசன் போன்ற பெயர்களை வைத்திருக்கிறார்கள். இதுவே எங்கள் மொழிப்பற்றுக்கு சான்று.

ஆங்கிலம் இல்லாமல் நமக்கு வேலைவாய்பில்லை. எனவே ஆங்கிலம் படிக்கிறோம். தமிழை படித்தால் என்ன, படிக்கவில்லையென்றால் என்ன? அதனால்தான் நமக்கு எந்த பயனும் இல்லையே!

சரி, பழங்கால கோட்டைகள் மற்றும் நினைவுச் சின்னங்களால் நமக்கு என்ன பயன்? அவற்றை ஏன் நாம் பாதுகாக்கவேண்டும்? ஏனெனில் அவை நம் பாரம்பரியத்தை பறைசாற்றுகின்றன. கண்டிப்பாக ஒருநாள் தமிழின் பெருமையை உலகம் அறியும் காலம் வரும். அப்போது நான் தமிழன் என்று அனைவரும் மார்தட்டிக்கொள்ள இன்று அதனை காப்பாற்றுவதுதான் நம் கடமை.

இந்த நேரத்தில் ஏதோ ஒரு திரைப்படத்தில் வந்த உரையாடல் ஞாபகம் வருகிறது. தமிழ் என்பது நம் இரு கண்கள் போன்றது. ஆங்கிலம் என்பது கண் கண்ணாடி போன்றது. அதை தேவையானபோதுதான் அணிந்துகொள்ளவேண்டும். முடிந்தவரை கண்ணிற்கு எந்த பிரச்சினையும் வராமல் பார்த்துக்கொண்டால், கண்ணாடி அணியவேண்டிய அவசியமே இல்லை.

அந்த காலத்தில் தம்பதிகள் பத்து இருபது குழந்தைகள் பெற்றுக்கொள்வார்கள். அதனால், அவர்கள் செய்யும் விவசாய வேலையின் பளுவினால் அவைகளை வளர்க்கவே நேரம் இருக்காது. எனவே சிறிய குழந்தைகளை அவைகளின் அக்கா அல்லது அண்ணன்கள்தான் வளர்ப்பார்கள். அக்காதான் அந்த குழந்தையை வளர்த்தாள் என்பதற்காக அந்த குழந்தை பெரியவன் ஆனதும் அம்மாவை வேண்டாம் என்று மறந்துவிடுமா அல்லது பாசம்தான் காட்டதா? அது எப்படி முடியும்? அதேபோல்தான், ஆங்கிலம் நமது வேலைக்கு உதவுகிறது என்பதற்காக தமிழை படிக்கக்கூடாது என்பது எப்படி சரியாகும்? இன்னும் சொல்லப்போனால் ஒருவன் தன் தாய் மொழியில் படித்தால்தான் மேதையாவான்.

ஆங்கிலம் ஆங்கிலம் என்று பிதற்றுகிறீர்களே! அந்த ஆங்கிலம், தமிழ் இல்லையென்றால் இல்லை என்று நண்பர் ஒருவர் கூறுவதை கீழ்க்காணும் காணொளி மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.

நான் ஒருவன் தமிழ் கற்கவில்லையென்றால், பேசவில்லையென்றால் தமிழ் அழிந்துவிடுமா?

எங்கள் ஊரில் தெலுங்குக்காரர்கள் இருக்கிறார்கள். 250 வருடங்களாக அவர்கள் பேசிய தெலுங்கு இந்த இருபது ஆண்டுகளில் அழிந்துவிட்டது என்று சொன்னால் நம்பமுடிகிறதா? ஆம், உண்மைதான். அவர்கள் தமிழ் நாட்டில் இருந்ததால் வெறும் பேச்சு வழக்கில் மட்டுமே தெலுங்கைப் பயன்படுத்திவந்தனர். கடந்த 20 ஆண்டுகளில் படிப்பறிவு விகிதம் உயர்த்திருக்கிறது. ஆனால், அவர்களுக்கு தெலுங்கில் படிக்க வாய்ப்புக் கிடைக்கவில்லை. தமிழில்தான் படிக்கிறார்கள், எழுதுகிறார்கள். எனவே, படிக்கும் பிள்ளைகள் தமிழிலேயே பேசுகிறார்கள். அதனால், பெற்றோர்களும் பிள்ளைகளுடன் தமிழிலேயே பேசுகிறார்கள். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே எப்போதாவது தெலுங்கில் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றனர். எனவே இந்த தலைமுறையோடு தெலுங்கு எங்கள் ஊரில் அழிந்துவிடும்.

இதே நிலைதான் மற்ற நாடுகளில் தமிழின் நிலையும். ஏற்கனவே மொரிஷியஸ், மாலத்தீவு, தென்னாபிரிக்கா மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளில் உள்ள பெரும்பாலான தமிழர்களுக்கு தமிழே தெரியாதாம். ஏனெனில் அவர்கள் தமிழ் கற்பதில்லை. ஒரு கருத்துக்கணிப்பின்படி அடுத்த நூற்றாண்டில் இந்தியாவில் இந்தி மற்றும் பெங்காலி மட்டுமே இருக்குமாம்; மற்ற மொழிகளின் வேரே இருக்காதாம். இந்த கருத்துக்கணிப்பு பலிக்குமோ பொய்க்குமோ, ஆனால், தமிழ்நாட்டில் உள்ளவர்களே தமிழ் கற்கவில்லையென்றால், சில நூற்றாண்டுகள் கழித்து, Once there was a language called Tamil. It was famous for its traditional and cultural aspects. That language was noted for its literature and grammatical beauty. Now it doesn’t exist. Yet scholars have understood its value and they are doing an intensive research on it” என்று குழந்தைகளுக்கு கதை சொல்லவேண்டிய நிலமை வந்துவிடும்.

ஆமாம், ஆங்கிலம் கலக்காமல் தூய தமிழில் பேசவேண்டும் என்கிறீர்கள். ஆங்கிலத்தை தவிர்த்துவிட்டால் நீங்கள் பேசுவது தூயதமிழா? என்னவோ ஆங்கிலத்தால் மட்டும்தான் தமிழுக்கு பிரச்சினை என்பதுபோல் கூறுகிறீர்கள்?

நீங்கள் கேட்பது நியாயம்தான். தமிழர்கள் ஆங்கிலத்தைத் தவிர்த்து இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளை கலந்து பேசுகிறார்கள். ஆனால், அவைகளால் தமிழுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஏனெனில் அவைகளை பேசும்போது தமிழ் என்று நினைத்துதான் பேசுகின்றனர். ஆனால், ஆங்கிலம் கலந்து பேசும்போதுதான் அவ்வாறு பேசுவது பெருமை என்று நினைத்து பேசுகின்றனர். இந்த வித்தியாசம்தான் மிகவும் ஆபத்தானது.

மேலும் தமிழில் அதிகபட்சமாக கலந்துள்ள வடமொழி, ஆயிரம் ஆண்டுகளாய் உள்ளது. எனவே, அதனை வெகு எளிதில் தவிர்த்துவிட முடியாது. முதலில் நூறு ஆண்டுகளாய் ஆதிக்கம் செலுத்தும் ஆங்கிலத்தை தவிர்க்கவேண்டும். பின் மற்ற மொழிகளை நீக்க முயலலாம்.

தமிழில் உள்ள பல வார்தைகள் சமஸ்கிருத வார்த்தைகள். எனவே, தமிழ் சமஸ்கிருதத்தில் இருந்துதானே வந்திருக்கும்?

நீங்கள் கூறுவது தவறு. இந்திய மொழிகள் அனைத்திலும் ஆங்கிலம் கலந்திருக்கிறது. அதனால், ஆங்கிலத்திலிருந்துதான் அனைத்து இந்திய மொழிகளும் வந்தன என்று கூறமுடியுமா? தமிழில் இருக்கும் சமஸ்கிருத வார்த்தைகள் என்றைக்குமே சமஸ்கிருத வார்த்தைகள்தான், தமிழ் வார்த்தைகள் அல்ல.

தமிழ்தான் முதலில் தோன்றிய மொழியா? தமிழர்கள் சிலர் பிதற்றிக்கொள்கிறார்களே?

தமிழ்தான் முதலில் தோன்றிய மொழி என்பதற்கு இப்போதைக்கு திட்டவட்டமான ஆதாரம் இல்லை. ஆனால், உலகில் உள்ள பெரும்பாலான ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். ஒரு ஆராய்ச்சியாளர் கூறுவதை பின்வரும் காணொளியில் பாருங்கள்.

உலகில் இருந்த பல முன்னோடியான நாகரீங்கங்கள் தமிழ் நாகரீகங்களாகத்தான் இருந்திருக்கும் என்று பொதுவாக நம்பப்படுகிறது. உதாரணமாக சுமேரியன் நாகரீகம் தமிழ் நாகரீகம்தான் என்பதை இந்த தளத்தில் அறிந்துகொள்ளுங்கள்.

மேலும் பூம்புகாரில் 11500 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் வாழ்ந்ததாக ஒரு ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதனை உறுதிப்படுத்த இந்தியா எந்த முயற்சியும் செய்ததுபோன்று தெரியவில்லை.

இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு தமிழ்தான் முதலில் தோன்றிய மொழி என்று கூறிவிட முடியாது. இருந்தாலும் வாழும் தலைசிறந்த மொழிகளுள் தமிழும் ஒன்று என்று எங்கள் மொழியை பெருமையாக பேச எங்களுக்கு உரிமை இல்லையா?

உங்கள் மொழியை பெருமையாக பேசிக்கொள்ளுங்கள். மற்ற மொழியை ஏன் குறை கூறுகிறீர்கள்?

ஒரு சில தமிழர்கள் மற்ற மொழிகளை குறை கூறுகிறார்கள்தான். அது கண்டிக்கப்பட வேண்டியது. அவர்கள் அவ்வாறு செய்வதை நிறுத்திக்கொள்ளவேண்டும். நீங்களும் தமிழை கொச்சைப் படுத்துவதையும் தமிழர்களிடையே தமிழைப் பற்றி தவறான கருத்துக்களைப் பரப்புவதையும் நிறுத்திக்கொள்ளுங்கள்.

 

இந்த இடத்தில் தமிழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் பதிவிடும்போது ஆங்கிலம் கலந்து எழுதுவதை முயன்றவரை தவிருங்கள். இது ஏற்கனவே தமிழ் நண்பர்கள் இதனைப் படிக்கவும் என்னும் பதிவில் குறிப்பிட்டதுதான். இருந்தாலும் இங்கு அழுத்தம் தந்து கூற விரும்புகிறேன். நாம் பேசும்போதுதான் ஆங்கிலம் கலந்து பேசுகிறோம். எழுதும்போதாவது, அவற்றை தவிர்க்கலாமே. தேவையான இடத்தில் ஆங்கிலம் பயன்படுத்தலாம், ஆனால் அவற்றை ஆங்கிலத்திலேயே பயன்படுத்துங்கள். உதாரணமாக, “முகநூலில் லைக் பண்ணுங்க” என்பதில் ‘லைக்’கை like என்று எழுதுங்கள். அப்போது அது ஆங்கில வார்த்தை என்று படிப்பவர்கள் உணர்வர். இல்லையெனில் அதுதான் தமிழ் என்பதுபோலாகிவிடும். இப்படித்தான் போலீஸ்காரர்கள் போன்ற வார்த்தைகள் தமிழாகவே மாறிவிட்டன.

நீங்களும் ஏதேனும் தவறான விவாதங்களை கண்டிருந்தால் அவைகளுக்கு சரியான விளக்கத்தை இங்கு கொடுக்கலாம். உங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

14 Comments

 1. Krishna moorthy February 7, 2015
 2. Nat Chander February 7, 2015
 3. ராஜா April 22, 2015
 4. chandraa June 14, 2015

Leave a Reply

task-accepted.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழில் எழுத இங்கு சொடுக்கவும்.
 

Your email address will not be published. Required fields are marked *

Question  Razz Sad  Evil Exclaim Smile Redface Biggrin Surprised Eek  Confused  Cool LOL  Mad  Twisted Rolleyes  Wink Idea Arrow Neutral Cry  Mr. Green

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.