ஆன மேல போறவன் அந்துகாலன், குதிர மேல போறவன் குந்துகாலன்

elephant-horse-riding

இந்த சமுதாயத்தில் மனிதர்களுக்கு பட்டப் பெயர் வைப்பது இயல்பான ஒரு விஷயம். மனிதர்கள் தங்கள் திறமைகள் அல்லது சாதனைகளுக்கு ஏற்ப புனைப்பெயர் வைத்து மக்களால் அழைக்கப்படுகின்றனர். ஆனால் எதையும் கிழிக்காமல் தங்களுக்குத் தாங்களாகவே புனைப்பெயர் வைத்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். வேடிக்கை மற்றும் அடையாளத்திற்காக நாம் சிலரை பட்டப்பெயர் வைத்து அழைப்பதுண்டு. மற்றவர்களை பட்டப்பெயர் வைத்தே அழைக்கும் அலாதிப் பிரியர்களும் உண்டு.

அப்படி வைக்கும் சில பட்டப்பெயர்கள் வினோதமாகவும் இருக்கும். அதனைப் பற்றிதான் இந்த பழமொழி கூறுகிறது. அதாவது ஒருவன் யானை மேல் சென்றால் அவன் அந்துகாலனாம், குதிரை மேல் சென்றால் குந்துகாலனாம். அதாவது மக்களுக்கு எது பளிச்சென்று தெரிகிறதோ அதை வைத்து பட்டப்பெயர் வைத்துவிடுவார்கள். மக்கள் எந்த அளவுக்கு வினோதமான பட்டப்பெயர் வைக்கிறார்கள் என்பதை பழமொழி விளக்கம் பகுதி ஒன்றில் கூறியிருந்தேன்.

இன்று இந்த பதிவில் சில பட்டப்பெயர்களைப் பற்றி விவாதிப்போம். இந்த பதிவு ஒரு வேடிக்கைக்காக எழுதப்பட்டதே தவிர யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதல்ல. இங்கு குறிப்பிட்டுள்ள பட்டப்பெயர்கள் எங்கள் ஊர் சுற்றுவட்டத்தில் கூறப்படுபவை.

பொதுவானவை

வெள்ளையன் – வெள்ளையாக இருப்பவர்களுக்கான பொதுவான பட்டப்பெயர்.

கருப்பால்டி / பொக்கு / பிளாக்கி – கருப்பாக இருப்பவர்களுக்கு இடுகிறார்கள்.

டொக்கு – உடல் பலவீனமாக இருப்பவர்கள்.

முட்டக் கண்ணன் – பெரிய கண் இருப்பவர்கள்.

புட்டன் – முகத்தில் சந்தோசமே இல்லாமல் சோகத்தையே எப்போதும் வெளிக்காட்டுபவர்கள்.

நெட்டையன் – உயரமாக இருப்பவர்கள்.

குட்டையன் – குள்ளமாக இருப்பவர்கள்.

கட்டையன் – உருவத்தில் சிறியவர்கள்.

சுருட்ட – சுருள் முடி கொண்டவர்கள்.

அரிச்சந்திரன் – எப்போது பார்த்தாலும் பொய்யே பேசுபவனைக் குறிக்க.

வெட்டெலும்பன் – எலும்பும் தோலுமாக இருப்பவன்.

சேட்டையன் – சேட்டை செய்பவர்களைக் குறிக்க.

உடல் குறைபாடுகளை வைத்து கூறும் பட்டப்பெயர்கள்

பட்டப் பெயர் வைப்பது பல சமயங்களில் அடுத்தவர்களைப் புண்படுத்துவதாக அமைந்துவிடுகிறது. ஏனெனில் பெரும்பாலும் ஒருவரின் உடல் குறைகளை வைத்தே பட்டப்பெயர் வைக்கப்படுகிறது. அவைகளில் சிலவற்றைக் குறிப்பிடுகிறேன்.

தொந்தி மாமா – தொப்பை வைத்துள்ளவர்கள்.

பனங்காத்தலையன் – தலை பெரிதாக இருப்பவர்கள்.

போண்டா வாயன் – வாய் பெரிதாக இருப்பவர்களைக் குறிக்க.

புண்டி வவுத்தன் – பெரிய தொப்பை வைத்திருப்பவர்கள்.

இழுப்புக் காலன் – ஊனமுற்றவர்கள்.

கொரங்கன் / கொரங்கி – அழகாக இல்லாதவர்கள்.

தொளுக்கையன் – உடல் அமைப்பு சரியாக இல்லாமல் பருத்த உடலுடன் இருப்பவர்கள்.

மிகவும் பருமனாக இருப்பவர்களை யானை, டைனோசர், பொதப்பன்னி, Bigshow அல்லது பப்ளிமாஸ் என்று அழைக்கிறார்கள்.

அம்மிகல் தலையன் – சொட்டைத் தலை உள்ளவர்களை குறிக்க.

பொக்க வாயன் – பல் இல்லாதவர்கள் அல்லது பற்கள் சிலவற்றை இழந்தவர்கள்.

Battery – கண் பார்வை குறைபாடு உள்ளவர்கள்.

எங்கள் ஊரில் கூறப்படுபவை

எங்கள் ஊரில் புழக்கதில் உள்ள சில பட்டப்பெயர்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.

பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர்களின் பெயர்களை பயன்படுத்தாமல் அவர்கள் எடுக்கும் பாடத்தை வைத்து சொல்லுவதுண்டு. உதாரணமாக தமிழ் ஐயா, English Teacher போன்றவை. நாங்கள் துவக்கப் பள்ளி படிக்கும்போது ஒரு ஆசிரியைக்கு கூந்தல் இடுப்பிற்கு கீழ்வரை இருக்கும். அதனால் அவரை நீட்டு முடி teacher என்று அழைப்போம். இன்றுவரை அவர் பேரே எனக்குத் தெரியாது. என் பள்ளி நண்பர்களுக்கும் அப்படித்தான். எப்போதாவது நண்பர்களை பார்த்தால்கூட “டேய்! நீட்டு முடி teacherஅ நேத்து பார்த்தேன். பாதி முடியக் காணோம்.” என்றுதான் கூறுவார்கள்.

அதேபோன்று வேறு ஒரு ஆசிரியை, அவர்கள் தினமும் வெவ்வேறு விதமாக கூந்தலைப் பின்னி வருவார்கள். அதனால் அவர்களின் பெயர் ஜடை டீச்சர். பத்தாவது படிக்கும்போது அறிவியல் வாத்தியார் மிகவும் கண்டிப்பானவர். அதனால் அவர்மீது மாணவர்களுக்கு எப்போதும் வெறுப்புதான். அவரது முகத்தில் முகப்பருக்கள் உடைந்ததன் அடையாளம் இருக்கும். அதனால் அவரை கொத்து பரோட்டா என்று அழைப்போம். பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு செல்லும்போதுதான் அவரது கண்டிப்பு எங்களின் நன்மைக்கென்று புரிந்தது. அவரை அப்படி பட்டப்பெயர் வைத்து அழைத்ததற்கு நாங்கள் ஒரு சிலர் மிகவும் வருந்தினோம்.

படிக்கும்போது நண்பர்களைத்தான் அதிகமாக பட்டப்பெயர் வைத்து அழைப்போம். ஒருவனுக்கு பட்டப்பெயர் கைஞ்சான். ஏன் அந்த பேர் வந்தது என்றால், ஒருநாள் வீட்டுப்பாடம் செய்யவில்லையென்று கணக்கு வாத்தியார் அடித்த அடியில் வகுப்பறையிலேயே மலம் கழிந்துவிட்டான். அதனால்தான் அவன் பெயர் கைஞ்சான்.

படிப்ஸ் – நன்றாக படிக்கக்கூடிய நண்பர்களை இவ்வாறு அழைப்போம்.

சிறு வயதில் எனக்கு இருந்த பட்டப்பெயர் ரீகல் – ரீகன் என்பது எனது பெயர். பலருக்கு அது சொன்னாலும் புரியாது. அந்த நேரத்தில் ரீகல் சொட்டு நீலம் மிகவும் பிரபலம். அதனால் அனைவரும் அதையே எனது பெயராக அழைத்தார்கள். பல நேரங்களில் “சொட்டு நீலம் டோய்! ரீகல் சொட்டு நீலம் டோய்!” என்று ஓட்டித்தள்ளிவிடுவார்கள்.

பள்ளியில் எனக்கு இருந்த பட்டப்பெயர் சின்னக் கவுண்டர் – எனது தலை முடியின் பாணி விஜயகாந்த் அவர்களின் முடி போன்று இருக்கும். அதனால் எனக்கு அந்த பெயர் வைத்து அழைத்தார்கள்.

கல்லூரி படிக்கும்போது எனக்கு கார்த்திக் என்னும் பெயரில் மூன்று நண்பர்கள் இருந்தார்கள். ஒருவன் Library கார்த்திக் – விடுமுறை நாட்களில் எப்போது பார்த்தாலும் நூலகத்திலேயே இருப்பான். இன்னொருவன் slow கார்த்திக் – எந்த வேலையையும் தாமதமாக செய்து முடிப்பான். வேறொருவன் காண்டு கார்த்திக் – திடீர் திடீரென்று கோபப்படுவான்.

திரைப்படங்களின் தாக்கத்தினாலும் பட்டப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. உதாரணமாக சுமார் மூஞ்சி குமார், இந்தியன் தாத்தா போன்றவை.

எங்கள் ஊரில் ஒருவருக்கு பட்டப் பெயர் சரிதான் வாத்தியார். ஏனெனில் அவர் யார் எதைக் கூறினாலும் ‘சரிதாம்பா’ என்று கூறுவர். அவரது உரையாடலில் அதிகமாக இடம்பெறும் வார்த்தையும் அதுதான். அதனால்தான் அவருக்கு சரிதான் வாத்தியார் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.

இன்னொருவருக்கு அஜீஸ் பாய் என்று பட்டப்பெயர் – ஏதாவது பிரச்சினை என்றால் அதற்கு என்ன தீர்வு என்று சொல்லமாட்டார், “அதெல்லாம் Adjust பண்ணிக்கலாம்” என்றுதான் கூறுவார். அதனால் Adjust Boy என்று அழைக்கப்பட்டு பின் அது மருவி அஜீஸ் பாய் என்றாகிவிட்டது.

ஒருவருக்கு பவளக்கொடி என்று பட்டப்பெயர். அவர் மிகவும் கருப்பு. அதனால் அதற்கு எதிர்மறையாக இந்த பெயரை பட்டப்பெயராக வைத்துவிட்டார்கள்.

வேறொருவர் கோணத் தாலிச்சி – கழுத்து சிறிது கோணையாக இருக்கும்.

ஒருவருக்கு தந்தி என்ற பட்டப்பெயர் – அதாவது ஊரில் நடக்கும் எந்த சம்பவமாக இருந்தாலும் இவருக்கு விரைவிலேயே தெரிந்துவிடும். எந்த செய்தியாக இருந்தாலும், புரளியாக இருந்தாலும் கூட அது தந்தி போன்று அவரை சென்றடையும்.

செத்த பொணம் – இவர் தனது சக ஊழியரை “செத்த பொணம் போல தூங்குறியே?” என்று கேட்டாராம். அதற்கு அவர், செத்தால்தான் பொணம். அது என்ன செத்த பொணம்? என்று கேட்டார், பின்னாளில் அதையே அவருக்குப் பட்டப்பெயராகவும் வைத்துவிட்டார்.

பீலாச்சலம் – இவர் பெயர் வெங்கடாச்சலம். ஆனால் பேசுவதெல்லாம் பொய், அதாவது பீலா. எனவே பீலா வெங்கடாச்சலம் என்பது சுருங்கி பீலாச்சலம் ஆகிவிட்டது.

மண்ணுப்புட்டி – “மண்ணுப்புட்டின்னா? மங்குனியா?” நீங்க கேக்கறது தெரியுதுங்க. சரியா சொன்னீங்க.

மாங்கல்யம் – என்ன? இப்படியும் ஒரு பேரா? என்று அதன் காரணத்தை விசாரித்தபோது, அந்த பெண் தன் கணவன் இறந்த பிறகும் தாலியை அணிந்துகொண்டே இருக்கின்றாராம். மாங்கல்யத்தின் மீது அவருக்கு இருக்கும் பற்று இந்த பட்டப்பெயரை அவருக்கு வாங்கித்தந்திருக்கிறது. வேதனை சோதனை நிறைந்த ஆனாலும் நகைச்சுவை ஊட்டும் ஒரு பட்டப்பெயர்.

குட்டி புஸ்கு – என் சித்தப்பா அவனது செல்ல மகனை இப்படித்தான் அழைக்கிறார்.

மெட்டி ஒலி குடும்பம் – இந்த குடும்பத்தில் மொத்தம் ஐந்து பெண் குழந்தைகள்.

புள்ளக் குட்டிக் காரன் – அறுபது வயது ஆகியும் அவருக்கு ஒரு குழந்தையும் இல்லை.

டக்கு பேபி (Duck Baby) – பிறந்து மூன்று வருடம் ஆகியும் நான்கு காலால் மட்டுமே நடக்கும் குழந்தை.

மும்மூர்திகள் – எங்கள் ஊரில் மூன்று சில்லறைத் திருடர்கள் இருக்கிறார்கள். வெளியூரிலெல்லாம் திருடுவதில்லை. உள்ளூரிலேயே அண்டா குண்டா போன்றவைகளைத் திருடுவார்கள். ஆனால் அவர்களுக்கென்று ஒரு தொழில் தர்மம் இருக்கிறது. எந்த வீட்டையும் பூட்டை உடைத்து திருடமாட்டார்கள். திறந்திருக்கும் வீட்டில்தான் திருடுவார்கள். அவர்களைக் குறிக்க இந்த பட்டப்பெயர் கூறப்படுகிறது.

வெண்மணி – அவரது முகத்தில் வெண்மை நிற தேம்பல் இருக்கிறது.

நடராஜன் – ஒரு இடத்தில் ஒரு ஐந்து நிமிடம் கூட உட்காரமாட்டார்.

எடிசன் – அறிவியலாளர் எடிசனைப் போன்று இவருக்கும் காது கேட்காது.

சக்கரம் – காலில் சக்கரம் உள்ளதைப்போன்று எப்போது பாரத்தாலும் ஒரு இடத்தில் நிலையாக இருக்கமாட்டார்.

பேய்க்குட்டி – பேய்போன்று ராத்திரியில் திரிந்துகொண்டிருப்பார்.

பொயலகட்ட – அந்த காலத்தில் புகையிலை பயிறுடுவார்கள். இவர் பக்கத்துக் கொல்லையில் புகையிலை திருடி வந்ததால் இவருக்கு இந்த பெயர்.

கு.ககுண்டு கண்ணன் என்பதைத்தான் சுருக்கமாக கு.க என்று கூறுகிறார்கள்.

வெள்ளகாலி – இவரை மண்ணுலிப் பாம்பு காலில் நக்கியதால் கால் வெள்ளையாகிவிட்டது. அதனால் இந்த பெயர் பெற்றார்.

வெகாளம் – இவர் யார் எதைக் கொடுத்தாலும் காணாததைக் கண்டதைப் போன்றும் பத்துநாள் பட்டினியாக இருந்ததைப் போன்றும் தின்பார்.

நாலடியார் – அவர் குள்ளமாக இருப்பார்.

குண்டுமணி – மணி அவர் பெயர், கொஞ்சம் குண்டானவர், அதனால் குண்டுமணி.

செக்கொலக்கை – செக்கில் உள்ள உலக்கைப் போன்று உடல் அமைப்புக் கொண்டவர்.

தக்கடி – அவர் நடை தகிட தகிட என்று தாளம் போடுவதுபோல் இருக்கும்.

செண்டிபுண்டி – அவர் ஊரோ இலங்கையிலுள்ள செண்டி, அவர் வயிரோ கொஞ்சம் புண்டி, அதனால்தான் அவர் பெயர் செண்டிபுண்டி.

வயசுப்பொண்ணு – அவருக்கு வயது 65. ஆனால், 20 வயதுப் பெண்ணைப் போன்று அதிகமாக அலங்காரம் செய்வார்.

பத்துக்கால் பூச்சி – பார்ப்பதற்குத்தான் பூச்சி போன்று இருப்பார். ஆனால் ரொம்ப விஷமத்தனமாக நடந்துகொள்வார்.

கொதலவாயன் – இவர் பேசினால் வாயில் ஏதோ வைத்துக்கொண்டு பேசுவது போலவே இருக்கும்.

படசால் பங்காரு – இவர் நடக்கும்போது கால்களை விரித்து வைத்துக்கொண்டு நடப்பார்.

ரசமட்டம் – ரசமட்டத்தைப் போன்று சரியான அளவில் இருப்பார். சரியான நோக்கத்திற்காக மட்டும் செலவு செய்வார்.

தளுக் புளுக் – அவர் தளுக் புளுக் என்று நடப்பதால் அதுவே அவருக்கு பெயராக அமைந்துவிட்டது.

 

இப்படியாக ஆயிரக்கணக்கான பட்டப் பெயர்கள் இருக்கின்றன. சமுதாயத்தில் இதைப்போன்றேல்லாம் பட்டப் பெயர்கள் வைக்கிறார்கள் என்று அனைவரும் அறிந்துகொள்ளவே அவைகளில் சிலவற்றை இந்த பதிவில் குறிப்பிட்டேன். பட்டப்பெயர் வைத்து அழைப்பதிலும் ஒரு ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் மற்றவர்களின் மனதைப் புண்படுத்தாமல் எதையும் நாம் செய்யவேண்டும். இந்த பதிவை வேடிக்கையாக மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரிந்த வினோதமான பட்டப்பெயர்களையும் குறிப்பிடுங்கள்.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

6 Comments

 1. chandraa June 14, 2015

Leave a Reply

task-accepted.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழில் எழுத இங்கு சொடுக்கவும்.
 

Your email address will not be published. Required fields are marked *

Question  Razz Sad  Evil Exclaim Smile Redface Biggrin Surprised Eek  Confused  Cool LOL  Mad  Twisted Rolleyes  Wink Idea Arrow Neutral Cry  Mr. Green

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.