பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி-17

பழமொழிகள்பழமொழிகள் பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16.

1.ஆறிய புண்ணிலும் அசடு நிற்கும்.

நமக்கு காயம் பட்டால், அது சரியான பின்பும் அதன் வடு சிலநாள் இருக்கும். சில நேரங்களில் ஊன் வளரும். மீண்டும் சினைத்து புண்ணாகி இம்சை கொடுக்கும். அதனால், புண் நன்றாக ஆறும்வரை அதனை கவனிக்கவேண்டும்.

அதுபோல, எந்தவொரு பிரச்சினையையும் வேரறுத்து விடவேண்டும். அதுதான் பிறர்க்கும் நமக்கும் நல்லது.

2.அன்னைக்கு உரிச்ச தோலு அன்னைக்கே காயும் – ஐப்பசி மாசத்து வெயில்.

ஒரு சிறு கதை. இந்த பழமொழி இந்த கதையால்தான் தோன்றியதாகக் கூறப்படுகிறது. முன்பொரு காலத்தில் பிராமணர்கள் ஒரு மாபெரும் வேள்வி நடத்த எண்ணினர். அதற்கு ஆயிரம் பிராமணர்கள் தேவை. 999 பிராமணர்கள் கிடைத்துவிட்டனர். எங்கு தேடியும் ஒரு பிராமணர் கிடைக்கவில்லை. தலைமை பிராமணர் ஆயிரம் பிராமணர்களைத் திரட்டும் பணியையும் மேற்பார்வை செய்யும் பணியையும் தங்களது சீடர்களிடம் கொடுத்திருந்தார்.

சீடர்கள் ஒரு தில்லுமுல்லு செய்தனர். பிராமணர் போலவே உள்ள ஒரு வேற்று சாதி மனிதரை சேர்த்துக்கொண்டனர். மாட்டுக்கறி விற்பதுதான் அவரது தொழில். அவரை மந்திரம் ஓதுவது போன்று பாவனை செய்தால் போதும் என்று கூறி அழைத்துச் சென்றனர். வேள்வியும் நடந்துகொண்டிருந்தது. ஆனால் இடையில் ஒருவர் வந்து “நம்மிடையே ஒரு கருப்பு ஆடு இருக்கிறது, இதில் ஒருவர் பிராமணர் இல்லை.” என்று கூறினார். அந்த மனிதரின் தொழில் மற்றும் ஜாதியையும் குறிப்பிட்டார்.

தலைமை பிராமணர், பிராமணர் அல்லாதவரைக் கண்டுபிடிக்க அனைத்து பிராமணர்களையும் அழைத்து ஒரு கேள்வி கேட்டார். “எந்த மாதத்தில் வெயில் அதிகம்?”. அனைவரும் வெவ்வேறு விதமான பதில்களைக் கூறினர். ஆனால், அந்த பிராமணர் அல்லாதவர், “சாமி, அன்னைக்கு உரிச்ச தோலு அன்னைக்கே காயும் – ஐப்பசி மாசத்து வெயில்.” என்று பதில் கூறினார். அதனால் தலைமை பிராமணர் அவரை அந்த இடத்தைவிட்டு வெளியே அனுப்பியதாகவும், அன்றிலிருந்து இந்த பழமொழி வழக்கில் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

3.எல்லாரும் அம்மணக் கட்டையா போற எடத்துல கோமணம் கட்டிட்டு போறவன் முட்டாள்.

ஒத்த பழமொழி: அம்மணாண்டி ஊர்ல கோமணாண்டி பைத்தியக்காரன். (அ) கோமணம் கட்றவன் ஊர்ல வேட்டி கட்றவன் முட்டாள்.

இந்த பழமொழியைச் சொல்லிச் சொல்லியே அநியாயம் செய்பவர்கள் மத்தியில் உள்ள நேர்மையானவர்களை முட்டாள்கள் என்று சிலர் கூறுகிறார்கள். இந்த நிலைமை என்று மாறுமோ?

4.சுடு வெல்லத்தை நாய் பார்ப்பதுபோல.

சுட சுட இருக்கும் வெள்ளைத்தைத் தின்றால் நாயின் நாக்கு வெந்துவிடும். ஒரு சில பொருட்கள் நமக்குத் தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்தால் அது நமக்கு விருப்பமாகவே இருந்தாலும்கூட திங்கமுடியாமல் சுடு வெல்லத்தை நாய் பார்ப்பதுபோலத்தான் பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். உதாரணமாக சர்க்கரை நோயாளிகள் தங்களது விருப்பமான இனிப்பு வகைகளை சாப்பிட முடியாமல் அதையே வெறிக்க வெறிக்க பார்த்துக்கொண்டிருத்தல்.

5.நாற்பதுக்குமேல் நா குணம்.

ஒருசிலர் நாற்பதுக்குமேல் நாய் குணம்’ என்று தவறாக பயன்படுத்துகின்றனர். ஆனால், நா குணம் என்பதுதான் சரி. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் வாழ்கையில் பட்டுத் தெளிந்தவர்கள் மற்றும் அனுபவம் உள்ளவர்கள் என்பதால், அவர்கள் கூறுவது மிகச் சரியாக இருக்கும். பொதுவாக இளைஞர்களுக்கு அறிவுரை கூறிக்கொண்டே இருப்பார்கள்.

6.புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதாம்.

பூனைக்கும் புலிக்கும் இடையிலான வித்தியாசம் அவைகளின் உருவ அளவும் புலிக்கு இருக்கும் வரிகளும்தான். தானும் புலியைப் போன்று மாறவேண்டுமென பூனை சூடு போட்டுக்கொண்டால் தழும்புதான் ஏற்படும். இதேபோன்றுதான் வாழ்க்கையும். ஒவ்வொருவரும் அவரவர் நிலையிலேயே முன்னேற முயலவேண்டுமே ஒழிய, அடுத்தவர்களைப் பார்த்து பொறாமையினால் அவர்களைப் போன்று ஆக முயற்சிக்கக்கூடாது. அப்படி செய்தால் நமக்கு வேதனைதான் வரும், உயர்வு வராது.

7.துட்டுக்கு வாங்கினாலும் துளுக்கம்பிள்ளைய வாங்கணும்.

இஸ்லாமியர்கள் தொழில் செய்து முன்னேறுவதில் கெட்டிக்காரர்கள். அவர்கள் பெரும்பாலும் விவசாயம் செய்வதில்லை என்றாலும், வாணிபம், சிறுதொழில் மற்றும் சிறு மூலதனத்தைக் கொண்டு பெரும்பொருள் ஈட்டுவது போன்றவைகளில் முன்னிலையில் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் வாழ்க்கையில் முன்னேறுவதற்குத் தேவையான நுட்பங்களில் கைத்தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் நம் முன்னோர்கள் இந்த பழமொழியைக் கூறிவைத்திருக்கிறார்கள்.

8.காலில் பீய் என்றால் தலையில் பீய் என்பார்கள்.

ஒத்த பழமொழிகள்:

 • இருக்குதுன்னா பறக்குத்தும்பாங்க.
 • ஒன்னுன்னா ஒன்பதா சொல்வாங்க.

இந்த சமுதாயத்தில் கட்டுக்கதைகள் விடுவது, புரளி பேசுவது போன்றவை இருப்பது எதார்த்தம். ஆனால், அவை கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றன. எந்த அளவிற்கு என்றால் மேற்கண்ட பழமொழிகளைப் போன்று கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாமல் அதிகபட்சமாக பொய்களை சேர்த்து அடுத்தவர்களைப் பற்றி புரளி பேசுகிறார்கள்.

9.காசு கொடுத்து காண்டு வாங்குவதுபோல்.

ஒத்த பழமொழிகள்:

 • சொந்த செலவுல சூன்யம் வைப்பதுபோல்.
 • தன் தலையில தானே மண் வாரிப் போடுவதுபோல்.
 • தன் காலுக்குத் தானே முள் தேடுவதுபோல்.
 • தனக்குத் தானே குழி வெட்டுவதுபோல்.

ஒருவன் செய்யும் சில முட்டாள்தனமான செயல்கள் அவனுக்கே மிகுந்த துன்பத்தைக் கொண்டுவரும்போது மேற்கண்ட பழமொழிகளைப் பயன்படுத்துவோம்.

10.வானத்தில் இருக்கும் சனியனை ஏணி வைத்து இறக்கினாளாம்.

ஒத்த பழமொழிகள்:

 • வீதியே போற இட்றத்த விருந்துக்குக் கூப்பிட்டானாம்.
 • வேலியில கடந்த ஓணானை வேட்டியில எடுத்து விட்டுக்கிட்ட கதையாட்டம்.
 • [நவீனமாக] சனியனை தூக்கி பனியனில் போடாதே.

தேவையில்லாத பிரச்சினைகளை தாங்களாகவே வலிய உருவாக்குபவர்களை அல்லது வலிய சென்று மூக்கை நுழைப்பவர்களை இந்த பழமொழிகளை வைத்து குறிப்பிடுவார்கள்.

11.பொண்டாட்டி கட்டிக்கிற உறவு, பொண்ணு வெட்டிக்கிற உறவு.

அதாவது, மனைவி காலம் முழுக்க தொடரும் பிணைத்த உறவு. ஆனால், மகள் உறவு அவளுக்குத் திருமணம் ஆகும்வரைதான்.

12.பீய் கடக்கக் கூட திங்கலாம், பொணம் கடக்கத் திங்கக்கூடாது.

சொந்தங்கள் இறந்தால் அவர்களுக்கு இறுதி சடங்கு முடிக்கும்வரை உண்ணுதல் கூடாது என்பதை வலியுறுத்தத்தான் இந்த பழமொழி.

13.ஆடு பகை; குட்டி உறவு.

சிலபேர் பெரியவர்களைப் பகைத்து அவர்களின் பிள்ளைகளுடன் உறவு கொண்டாடுவதுபோல் நடிப்பார்கள். அவர்களும் அதை உண்மையென நம்பி கடைசியில் பெரிதாக வஞ்சிக்கப்படுவார்கள்.

14.சுத்தி சூர முள்ளு, பக்கமெல்லாம் இண்ட முள்ளு.

ஒருவர் வாழ்க்கையில் தன் சொந்தத்தாலும் அண்டை வீட்டுக்காரர்களாலும் அளவில்லா துன்பத்தை அனுபவிக்கிறார் என்பதை சுட்டிக் காட்டத்தான் இந்த பழமொழி. (சூரை செடி புகைப்படம்)

15.வலைக்கு மின்ன ஏன் கல்ல போடற?

இந்த பழமொழி இருவகைகளில் அர்த்தம் கொள்ளப்படுகிறது. வலையைப் போடுவதற்கு முன் கல் எறிந்தால் அந்த அதிர்வை வைத்து மீன்கள் உஷாராகி நாலாப்பக்கமும் சிதறி சென்றுவிடும். வலையைப் போட்டால் மீன் அகப்பட வாய்ப்பு இல்லை.

அல்லது, வேறு அர்த்தம் – வலையை எப்போதும் நீரோட்டத்தின் போக்கில் போடுவார்கள். அப்போதுதான் நீரோட்டத்தில் செல்லும் மீன்கள் வலையில் அகப்படும். அவ்வாறு கட்டிவிட்டு வலைக்கு பின்புறமாக கொஞ்சம் தூரத்தில் கல் எறிந்தால் பெரும்பாலான மீன்கள் பதட்டத்தில் நீரோட்டத்தின் திசையில் வந்து வலையில் மாட்டிக்கொள்ளும்.

அதுபோல வாழ்க்கையில் – ஒருவர் செய்யும் திருட்டுத்தனங்களை கையும் களவுமாக பிடிக்கவேண்டுமென்றால், வலையைப் போடுவதைப் போன்று அவர்களுடன் இயல்பாகப் பழகி ஆதாரத்தை திரட்டவேண்டும்; சரியான நேரத்தில் கல்லெறிந்து மீன் பிடிப்பதுபோல் அவர்களைப் பிடிக்கவேண்டும். அவர்கள் வலையில் மாட்டும்வரை அவர்களை உஷார் படுத்துவதுபோல் நமது செயல்கள் இருக்கக்கூடாது.

 

தொடரும்….

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

7 Comments

Leave a Reply

task-accepted.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழில் எழுத இங்கு சொடுக்கவும்.
 

Your email address will not be published. Required fields are marked *

Question  Razz Sad  Evil Exclaim Smile Redface Biggrin Surprised Eek  Confused  Cool LOL  Mad  Twisted Rolleyes  Wink Idea Arrow Neutral Cry  Mr. Green

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.