தமிழ் நண்பர்கள் இதனைப் படிக்கவும்

Spread the love

தமிழ் நண்பர்கள் மற்றும் பதிவர்கள் அனைவருக்கும் என் அன்பார்ந்த வணக்கங்கள். இணையத்தில் தமிழ் தளம் வைத்திருப்பவர்களுக்கும் சமூக வலைத்தளங்களில் தமிழைப் பயன்படுத்துபவர்களுக்கும் வேண்டுகோள் ஒன்றை விடுக்க இந்த இடுகையை பதிவிடுகிறேன்.

அறிவிப்பு

இன்றைய நிலையில் தமிழ் இணையத்தில் வளர்ந்துகொண்டிருக்கிறது. ஒரு இரண்டு வருடங்களுக்குமுன் இருந்ததைவிட இன்று வெகுவாக உயர்ந்துவருகிறது. இணையத்தில் தமிழில் எளிதாக எழுதவும் இலவசமாக இணையம் தொடங்கவும் பல புதிய மென்பொருட்களும் சேவைகளும் வந்துள்ளதால் தமிழ் மக்கள் பலர் தங்களுக்கென்று ஒரு இணையதளம் தொடங்கி தமிழை வளர்க்க முயற்சிக்கின்றனர்.

பலர் தங்கள் அனுபவங்களையோ, ஆராய்ச்சிக் கட்டுரைகளையோ வலைத்தளங்களில் இட்டு நல்ல தமிழைப் பரப்புகின்றனர்.

சிலர் தங்கள் படைப்புகளான கவிதைகள் மற்றும் சிறுகதைகள் ஆகியவைகளை தமிழ்மீது உள்ள பற்றால் வினைக்கெட்டு எழுதி பதிவிடுகின்றனர்.

சிலர், அறிவியல் மற்றும் தெரிந்துகொள்ளவேண்டிய பயனுள்ள தகவல்களை தருகின்றனர்.

மேலும் சிலர், செய்திகளை உலகிற்கு உடனுக்குடன் தெரியப்படுத்துகிறார்கள்.

இன்னும் சிலர், சமூக அக்கறையுடன் சமுதாய விழிப்புணர்வுக் கருத்துக்களைப் பரப்புகிறார்கள்.

இவைகள் எல்லாம் வரவேற்கப்பட வேண்டியவை. ஆனால் சில விஷயங்கள் வரவேற்கத்தக்கதாக இல்லை. சிலர் சமுதாயத்திற்கு பத்து பைசாவுக்கு புண்ணியம் இல்லாத வேலைகளையும் பலருக்குக் கெடுதல் விளைவிக்கும் செயல்களையும் தமிழை வைத்து செய்துகொண்டு இருக்கின்றனர். அவைகளில் சில கீழே விவரிக்கப்பட்டுள்ளன.

தவறான செய்திகளைப் பரப்புதல்

ஒரு சிலர் சிரமப்பட்டு தகவல்களை சேகரித்து தங்கள் தளங்களில் கட்டுரை எழுதும்போது, சிலர் தங்களது கற்பனை வளங்களால் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர்.

உதாரணமாக ஒரு செய்தி சமூக இணைய தளங்களிலும், தனிநபர் இணையதளங்களிலும் வேகமாகப் பரவி வருகிறது. அது என்னவெனில், UNESCO நிறுவனம் இந்திய தேசிய கீதத்தை உலகின் தலைசிறந்த தேசிய கீதமாக அறிவித்துள்ளது என்பதுதான். ஒரு இந்தியனாக இந்த செய்தி உண்மையாக இருந்திருந்தால் மிகவும் சந்தோசப்படுவேன். ஆனால், இது முற்றிலும் பொய்யான தகவல். இப்படிப் பொய்யான தகவல்களைப் பரப்புபவர்கள் நம் நாட்டுப் பற்றை வைத்துக்கூட விளையாடுகிறார்களே என்பதை நினைக்கும்போது வேதனையாகத்தான் உள்ளது.

மேலும் சிலர், தங்கள் தளம் பிரபலமடைய வேண்டும் என்பதற்காக, “பாதி மனித உடல், மீதி பாம்பு-அதிசயப் பெண்”, “மனிதனைக் காப்பாற்றிய பேய்”, “அந்த நடிகைக்கும், இந்த நடிகருக்கும்….” என்றெல்லாம் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு படைப்புகளைத் தந்துகொண்டிருக்கிறார்கள்.

இவையெல்லாம் தவறு என்பதை அவர்கள் உணரவேண்டும். எனவே இணையதளம் வைத்திருப்பவர்கள் உண்மையான தகவல்களை மட்டும் தங்கள் தளத்தில் இடவேண்டும்.

ஆங்கிலம் கலந்து எழுதுவது

இது தமிழுக்கு ஒரு பெரிய இழுக்கு. தமிழ் பேசுவது குறைந்து ஆங்கிலம் பேசுவது அதிகரித்துவிட்ட இந்த காலக்கட்டத்தில் நல்ல தமிழை பரப்ப ஒரே வழி இணையம்தான். ஆனால், அதில்கூட ஒருசிலர் தங்கள் தளத்தில், ஆங்கிலம் கலந்து நாம் பேசுவதுபோலவே எழுதுகிறார்கள். இப்படி எழுதுவதால், அதுதான் தமிழ் என்பதுபோன்ற தவறான கருத்து படிப்பவர்களின் மனதில் பதிவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

எனவே, நண்பர்களே! தமிழ் நிலைக்க, இணையத்தில் தூய தமிழையே பயன்படுத்த முயற்சிப்போம். சில ஆங்கில வார்த்தைகளைத் தவிர்க்க முடியாதுதான். ஆனால், முயன்றவரை ஆங்கிலம் கலக்காமல் எழுத முயற்சி செய்வோம்.

பிற இன மதங்களைப் புண்படுத்துதல்

ஒரு குறிப்பிட்ட மதத்திற்கென்றோ, இனத்திற்கென்றோ ஒரு இணயதளம் வைத்திருப்பது என்பது தவறல்ல. ஆனால், அந்த தளத்தில் வேறு ஒரு இனத்தையோ அல்லது மதத்தையோ குறை கூறுவதுபோல எழுதுவதுதான் தவறு.

சிலர் ஒரு குறிப்பிட்ட மதத்தில் உள்ள குறைகளை சாடவும், அந்த மதத்தைப் பின்பற்றுபவர்களின் மனங்களைப் புண்படுத்தவும் தளங்களை வைத்து நடத்திவருகின்றனர். இதனால், அவர்கள் தங்கள் மதம்தான் பெரிது என்று மார்தட்டிக்கொள்கின்றனர்.

குறைகள் இல்லாத மதம் எதுவும் இல்லை. எந்த மதம் உண்மையான மதம் என்று கூறவும் நம்மிடம் ஆதாரம் இல்லை. அது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. எனக்கு ஒன்று மட்டும்தான் தோன்றுகிறது. கடவுள் வெவ்வேறு மதங்களில் நம்மைப் படைத்துவிட்டு வானுலகில் அமர்ந்துகொண்டு, நாம் நம்மிடையே சண்டையிட்டுக்கொள்வதை ஒரு நெடுந்தொடர் போன்று பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறான் என்றுதான் நினைக்கிறேன்.

தங்களது மதத்தை உயர்வாகக் கருதிகிறவர்கள், அதை தங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளவேண்டும். பிற மதத்தவரைப் புண்படுத்த இணையத்தைப் பயன்படுத்தக் கூடாது.

நகல் எடுத்தல்

இதுதான் படைப்பாளிகளுக்கு அவர்களது படைக்கும் திறனை, ஆர்வத்தைக் குறைக்கும் ஒரு பெரிய முட்டுக்கல்லாக இருக்கிறது. ஏனென்றால், ஒருவன் மிகுந்த சிரமப்பட்டு, நேரத்தை ஒதுக்கி ஒரு கட்டுரையைத் தன் தளத்தில் போட்டால், சில சோம்பேறிகள் அதனை அப்படியே நகல் எடுத்து தங்கள் தளங்களில் அவர்கள் எழுதியதுபோன்று போட்டு விடுகிறார்கள். இதனால் உண்மையான படைப்பாளிகளின் மனம் புண்படுகிறது.

சில மாதங்களுக்கு முன்பு ஒரு தளத்தில் என்னுடைய படைப்பு ஒன்றைப் பார்த்து அதிர்ந்தேன். மேலும் தேடியபோது, அந்த தளத்தில் என்னுடைய படைப்புகளில் பல நகல் எடுக்கப்பட்டுள்ளது தெரிந்தது. தள நிர்வாகியைத் தொடர்புகொண்டபோது “அனுமதியில்லாமல் நகல் எடுத்தது தவறுதான். தங்கள் அனுமதியோடு வைத்துக்கொள்ளலாமா?” என்று கேட்டார். சரி, போனால் போகட்டும் என்று விட்டுவிட்டேன்.

பின், பல நாட்கள் ஆராய்ந்ததில் ஏகப்பட்டத் தளங்களால் என்னுடையப் படைப்புகள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. நிறைய தளங்களைத் தொடர்புகொண்டேன். சரியான பதில் இல்லை. எனக்கு வெறுத்துவிட்டது. Blogger மற்றும் Google இவைகளைத் தொடர்புகொண்டு அந்த தளங்களை அழிக்க முயன்றிருக்கலாம். ஆனால், நேரம் இல்லை. எனவே, என் தளத்தில் நகல் எடுப்பதைத் தடுக்க நிரலியை நிறுவினேன். ( நீங்களும் யார் உங்கள் தளத்தை நகல் எடுக்கிறார்கள், நகல் எடுப்பவர்களை என்ன செய்யவேண்டும் மற்றும் எப்படி நகல் எடுப்பதைத் தடுப்பது போன்றவைகளை அறியலாம். )

எதற்காக ஒரு இணையதளம் உருவாக்குகிறோம்? எதற்காக சிரமப்பட்டு இடுகை இடுகிறோம்? நாலு பேர் நம் தளத்திற்கு வந்து படித்துவிட்டு பாராட்டவேண்டும் என்பதற்குத்தானே? உங்கள் தளத்தில், நான் எழுதியதை அப்படியே நகல் எடுத்துப் போட்டால், அனைவரும் உங்கள் தளத்திலேயே அனைத்தையும் ரசித்துவிடுவார்களே! என் தளத்திற்கு வர அவசியமில்லையே!

மேலும், Goolge இல் தமிழில் தேடும்போது சரியான தளங்களை முடிவுகளாகத் தருவதில்லை. உதாரணத்திற்கு “கதை” என்று தேடிப்பாருங்களேன். ஆம், நாம் என்ன நினைத்துத் தேடுகின்றோமோ அது வராது. இதற்கு காரணம் என்ன? இதற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, நாம் எழுதும் கட்டுரைகள் தரமானதாக இல்லை. அதனால் நல்ல தளங்கள், தேடல் முடிவுகளில் முன்னிலையில் வருவதில்லை. எனவே, தமிழ் பதிவர்கள் ஒவ்வொருவரும் இன்னும் மிகுதியாக தங்களது உழைப்பப் போடவேண்டும். மற்றொன்று, நகல் எடுக்கும் பிரச்சினை.

நகல் எடுப்பதற்கும் Google சரியான தேடல் முடிவுகளைக் கட்டாததற்கும் என்ன சம்பந்தம்?

சம்பந்தம் இருக்கிறது. ஒரு தலைப்பில் இணையத்தில் ஒரே ஒரு கட்டுரை இருக்கும்போது அது தரமான கட்டுரையாக இருந்தால் அதுதான் Google இல் தேடும்போது முதலில் வரும். அதுவே அந்த கட்டுரைக்கு பல பிரதிகள் இருக்கும்போது, அவை அந்த கட்டுரைக்கு Goolge முன்னிலையில் எதிர்மறையான தோற்றத்தைக் கொடுக்கிறது. எனவே அதன் தரம் குறைத்து மதிப்பிடப்படுகிறது. அதனால்தான் நாம் தமிழில் தேடும்போது சரியான முடிவுகள் கிடைப்பதில்லை.

எனவே, நாம் பிறரது பதிவுகளை நகல் எடுப்பதற்கு பதில் நமக்குத் தெரிந்தவற்றை சொந்தமாக எழுதி நம் தளத்தில் இடும்போது மேலும் தமிழ் வளர உதவியாக இருக்கும். மாறாக, நகல் எடுப்பது தமிழை பழுதான மொழியாக்கிவிடும்.

நான் என்ன சொல்கிறேன் என்றால்….

இணையத்தில் தமிழுக்கென்று ஒரு தனித்துவத்தை ஏற்படுத்துவோம். நாம் ஒவ்வொருவரும் நம் அறிவுக்கேற்ப தமிழ் படைப்புகளைத் தருவோம். நம் படைப்புகள் எதுவும்,

  • தவறான செய்திகளைப் பரப்பக் கூடாது.
  • முயன்றவரைத் தமிழிலேயே இருக்கவேண்டும்.
  • பிற மதங்களையோ, இனங்களையோ புண்படுத்துவதாக இருக்கக் கூடாது.
  • நமது சொந்த படைப்புகளாகவே இருக்கவேண்டும்.

இவைகளை மனதில் வைத்துக்கொண்டு, இணையம் என்னும் வருங்காலத்தில் தமிழை நிலைநாட்டப் பாடுபடுவோம். நன்றி.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.


Spread the love

10
Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
avatar
8 Comment threads
2 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
1 Comment authors
மரிய ரீகன் ஜோன்ஸ்Jeevalingam Kasirajalingam2008rupanRajaravisekarசங்கர் ಶಿಪಮೊಗ್ಗ Recent comment authors
  Subscribe  
Notify of
காமக்கிழத்தன்
Guest
காமக்கிழத்தன்

பதிவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய பதிவு.

திண்டுக்கல் தனபாலன்
Guest
திண்டுக்கல் தனபாலன்

ஒவ்வொருத்தரும் உணர்ந்து திருந்த வேண்டிய கருத்துக்கள்…

Ramani S
Guest
Ramani S

நல்ல அறிவுரை
அனைவரும் அவசியம் படிக்கவேண்டிய
கடைப்பிடிக்கவேண்டிய கருத்துடன் கூடிய
பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Ramani S
Guest
Ramani S

tha.ma 3

சங்கர் ಶಿಪಮೊಗ್ಗ
Guest
சங்கர் ಶಿಪಮೊಗ್ಗ

சொன்னாலே திருந்தாத ஜென்மங்கள் தங்களது பதிவை படித்தாவது திருந்துகிறார்களா பார்போம்

Rajaravisekar
Guest
Rajaravisekar

ஆஹா, அருமையான பதிவு… அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியது.

2008rupan
Guest
2008rupan

வணக்கம்
நீங்கள் சொல்வது சரியான தகவல்தான்
எல்லோரும் அறியவேண்டிய விடயம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

நன்றி
அன்புடன்
ரூபன்

Jeevalingam Kasirajalingam
Guest
Jeevalingam Kasirajalingam

தங்கள் சிறந்த மதிப்பீட்டுரையை வரவேற்கிறேன்.
தங்கள் பதிவை எனது yppubs.tk தளத்தில் பகிர அனுமதிக்கவும்.

Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.