பார்வைகள் பல விதம்

பார்வைகள்பார்வைகளில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு மனுதனுக்கும் ஏற்றாற்போன்று அவை வேறுபடுகின்றன. உதாரணத்திற்கு, ஒரு ஓட்டுநருக்கு பின்வரும் பார்வைகள் மிக அவசியம். நேர் பார்வை, பக்கப் பார்வை, தூரப் பார்வை, கிட்டப் பார்வை மற்றும் பின்னால் வரும் வாகனங்களை அறிய குவியாடிப் பார்வை. அப்போதுதான் விபத்தைத் தவிர்க்கலாம்.

கண் குறைபாடு உள்ளவர்களுக்கு கிட்டப் பார்வை அல்லது தூரப் பார்வை இருக்கும். சிலர் பார்க்கவே முடியாமல் குருடர்களாய் உள்ளனர்.

ஒரு மனிதன் கண் மருத்துவரிடம் சென்று, “ஐயா, எனது கண்களுக்கு ஆண்களே தெரிவதில்லை, பெண்கள் மட்டும்தான் தெரிகின்றனர். இது கிட்டப் பார்வையா ? அல்லது தூரப் பார்வையா ?” என்று கேட்டான். அதற்கு அவர், “கிட்டப் பார்வையுமில்ல, தூரப் பார்வையுமில்ல. அது, உன் கெட்டப் பார்வை” என்றார்.

ஆம். நம் அனைவருக்கும் இரு கண்கள்தான் என்றாலும் ஒவ்வொருவரின் குணத்திற்கு ஏற்றார் போன்று நாம் பார்க்கும் பார்வையும் வேறுபடுகின்றது. ஒரு கல்லை எடுத்துக் கொண்டால் அனைவருக்கும் அது கல் போன்றுதான் தெரிகிறது. ஆனால் ஒரு சிற்பிக்கு மட்டும்தான் அதனுள் இருக்கும் சிலை தெரிகிறது.

அதுபோலத்தான், நாம் வாழ்கையில் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி பார்க்கிறோம், எவ்வாறு எடுத்துக் கொள்கிறோம் என்பதில்தான் நமது மகிழ்ச்சி அடங்கியிருக்கிறது.

இரண்டு சிறைக் கைதிகள் எப்போதும் தாங்கள் அடைக்கப்பட்டிருக்கும் அறையிலிருந்து ஜன்னல் வழியாக வெளிப்புறத்தை பார்த்துக் கொண்டே இருப்பார்கள். இதனை தினமும் கவனித்துக் கொண்டிருந்த காவலர் ஒருவர் அவர்களிடம் இவ்வாறாக கேட்டார்.

“நீங்கள் இருவரும் எப்போது பார்த்தாலும் வெளியே பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள். அப்படி என்னதான் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள் ?”

அதற்கு ஒருவன், “ஐயா ! நான் வானத்தையும், அதன் அழகையும், விண்மீண்கள், நிலவு மற்றும் சூரியனைப் பார்த்துக்கொண்டு இருப்பேன். அவற்றின் அழகை பார்க்கும்போது, எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்றான்.

மற்றொருவன், “ஐயா ! நான் பூமியையும், அதில் உள்ள பாறைகள், கற்கள் மற்றும் மண் இவற்றைப் பார்த்துக் கொண்டிருப்பேன். இவற்றைப் பார்த்துப் பார்த்து எனது மனமும் கல் போன்று மாறிவிட்டது. எனது மனம் சந்தோஷமற்றுத் தவிக்கின்றது” என்றான்.

ஆம், நாம் பார்க்கும் பார்வை வேறுபடுவதால் நமது சந்தோஷமும் வேறுபடுகிறது.

சிலர் கண் இருந்தும் குருடர்களாக தங்களது கண் முன்னே இருப்பதைக் கூட சரிவர பார்க்கும் பழக்கம் இல்லாமல் இருக்கின்றனர்.

ஒரு முறை, ஒருவர், ஒரு மனநல மருத்துவரிடம் சென்றார்.

“ஐயா, நான் மிகவும் மன உளைச்சலில் உள்ளேன்”

“ஏங்க, என்ன விஷயம். எதற்காக உங்களுக்கு மன உளைச்சல் ?”

“என்னை, தினமும் ஒரு கனவு தொந்தரவு செய்கிறது. ஒரே கனவுதான் தினமும் வருகிறது. அந்த கனவுதான் என்னை மனவுளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது.”

“பதட்டப்படாதீங்க. பொறுமையா சொல்லுங்க. என்ன கனவு அது?”

“கனவுல நான் ஒரு அறையில அடைக்கப்பட்டிருக்கிறேன். அங்கிருந்து தப்பிக்க கதவை திறக்க எண்ணி, கதவை தள்ளுகிறேன் தள்ளுகிறேன் அதை திறக்கவே முடியவில்லை. உடனே விழித்து எழுந்துவிடுகிறேன். அதனை திறக்க முடியவில்லையே என்று எனக்கு ஒரே மனவுளைச்சலாகிவிடுகிறது.”

ஆச்சர்யப்பட்ட மருத்துவர், கனவுகளைப் பற்றிய விவரங்களை கேட்டு தெரிந்துகொண்டார். பின் நோயாளியிடம்,

“இப்போது நீங்கள் அந்த கனவிலே இருப்பதுபோன்று நினைத்துக்கொள்ளுங்கள். சரி, அந்த கதவு எப்படி இருக்கிறது?”

“மிகப் பெரிய கதவு, ஐயா !”

“அந்த கதவை தள்ளுகிறீர்கள், ஆனால் திறக்க முடியவில்லை. அதானே ?”

“ஆமாம், என் பலம் கொண்ட மட்டும் தள்ளுகிறேன். ஆனால் திறக்க முடியவில்லை.”

“அந்த கதவின் மீது ஏதாவது எழுதியிருக்கிறதா?”

“ஆம், ஏதோ எழுதியிருக்கிறது.”

“என்ன, எழுதியிருக்கிறது?”

‘இழு’ என்று எழுதியிருக்கிறது.”

“கதவை திறக்க கதவின் மேல் ‘இழு’ என்று எழுதியிருக்கிறார்கள். ஆனால் நீங்களோ தள்ளிக்கொண்டிருக்கிறீர்கள். எப்படி திறக்க முடியும் ?”

அப்போதுதான் அந்த மனிதருக்கு தன்னுடைய முட்டாள்தனம் புரிந்தது. ஆம், நாம் கூட சில நேரங்களில் இப்படித்தான் முட்டாள்தனமாக நடந்துகொள்கிறோம். நம் கண் முன்னாள் நடக்கும் நிகழ்வுகளைக் கூட சரிவர பார்க்காமல் பார்வை இருந்து குருடர்களாக இருக்கிறோம்.

இன்று சமுதாயத்தில் பல விதமான பார்வைகள் உலவுகின்றன.

· இவன் எப்படியாவது நாசமாகிவிடக்கூடாதா எனப் பார்க்கும் நாசப்பார்வை.

· தான், தன் சொந்தம் மட்டும் நன்றாக இருக்கவேண்டும் என பார்க்கும் சுயநலப்பார்வை.

· மற்றவர்களை எரிச்சலோடே பார்க்கும் மனித நேயமற்ற கோபப்பார்வை.

· பிறருடைய முன்னேற்றத்தைக் கண்டு பொறுமித் தள்ளும் பொறாமைப்பார்வை.

· இவர்கள் பார்வை பட்டாலே அடுத்தவர்கள் வீணாய்ப் போகும் சூனியப்பார்வை.

· தான்தான் எல்லாம், தனக்கு மிஞ்சியவர் யாரும் இல்லை என நினைக்கும் அகங்காரப்பார்வை.

· பிறர் படும் துன்பங்களைக் கண்டு வருத்தப்படாமல் தான் சுகபோகமாய் இருப்பதை நினைத்து பெருமிதப்படும் செருக்குப்பார்வை.

· உறவாடிக் கெடுக்கும் வஞ்சகப்பார்வை.

· எல்லா பார்வைகளையும் மிஞ்சிவிடும் எதிர்மறை எண்ணங்கள் கொண்ட எதிர்மறைப்பார்வை.

மேற்கண்ட பார்வைகளை தவிர்த்து கீழ் வரும் பார்வைகளை பழக்கப்படுத்திக் கொண்டால், நமக்கும் நல்லது, சமுதாயத்திற்கும் நல்லது.

· மனித நேயம் கொண்ட அன்புப்பார்வை.

· தன்னைப் போல் பிறரையும் நேசிக்கும் நேசப்பார்வை.

· பிறரை புரிந்துகொள்ளும் பாசப்பார்வை.

· முயன்றால் முடியும் என நினைக்கும் நேர்மறைப்பார்வை.

· தனக்கும் பிறர்க்கும் பயன்படும் நல்ல செயல்களைச் செய்யும் தொலைநோக்குப்பார்வை.

· தீய எண்ணங்களும் திருட்டு புத்திகளும் இல்லாத தூயப்பார்வை.

இத்தகைய பார்வைகளுடன் நாமும் வாழ்வோம் பிறரையும் வாழவிடுவோம்.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
திண்டுக்கல் தனபாலன்
நவம்பர் 27, 2012 3:07 காலை

உள்மனதைப் பொறுத்து பார்வைகள் மாறும்…

நல்லதொரு பார்வைக்கு நன்றி…

திண்டுக்கல் தனபாலன்
நவம்பர் 27, 2012 3:08 காலை

சின்ன வேண்டுகோள் : Comment Approval (Comment Moderation) வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்… இந்த Word verification-யை எடுத்து விடுங்கள்… வயதானவர்கள் கருத்திட சிரமப்படுவார்கள்… பல பேர் விரும்புவதும் இல்லை… வாசகர்கள் வருவதும் குறைந்து விடும்… (Word verification image-இரண்டு அல்லது மூன்று முறை முயற்சித்து பிறகு தான் கருத்துரை Publish செய்ய முடிந்தது…)

(Settings—>Posts and Comments—>Show Word Verification—> select 'No')

தவறாயின் மன்னிக்கவும்… நன்றி…

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.