இன்னைக்கு எந்த மண்டபத்தில் கலியாணம்?

Spread the love

பொறியியல் படிக்கும் தினேஷ் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தான். அவன் வீட்டிற்கு சென்றுவர ரூபாய் 600 ஆகும். 10 மணி நேர பயணமும் கூட. எனவே அவன் விடுதியில் தங்கவேண்டியதாயிற்று. முதல் வருடம் நல்லதாக முடிந்து விட்டது. விடுமுறை முடிந்து மீண்டும் விடுதிக்கு திரும்பினான் தினேஷ். அந்த ஆண்டு யாருக்கு எந்த அறை என்பதை தகவல் பலகையில் தெரிந்துகொண்டு தன் அறைக்குச் சென்றான். ஒவ்வொரு அறையிலும் சென்ற வருடம் போலவே நான்கு பேர். ஆனால், அந்த வருடம் அனைவர் மேலும் ஒரு பாறாங்கல்லைத் தூக்கிப்போட்டது விடுதி நிர்வாகம்.

சென்ற வருடம்போல் ஒரு அறையை ஒரே பிரிவு மாணவர்களுக்கு ஒதுக்காமல், வெவ்வேறு பிரிவு மாணவர்களை ஒன்றாக கலந்து அறை ஒதுக்கியிருந்தார்கள். அவர்களது நோக்கம் என்னவெனில், ஒரே பிரிவு மாணவர்களுக்கு அறை ஒதுக்கினால், மாணவர்கள் மற்ற பிரிவு மாணவர்களுடன் கலப்பதில்லை; அவரவர்கள் ஒரு குழுபோன்று செயல்படுகிறார்கள்; இதனால் அவர்களுக்கிடையில் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது; இப்படி வெவ்வேறு பிரிவு மாணவர்களைக் கலந்து போட்டாலாவது அவர்களுக்குள் ஒரு புரிதல் ஏற்படாதா என்பதுதான்.

விடுதி நிர்வாகம் நினைத்தது நடந்தது. ஆனால், மாணவர்களுக்கு ஒரு புதிய பிரச்சினை ஏற்பட்டது; பாடங்களில் சந்தேகம் ஏற்பட்டால் அதை தீர்த்துக்கொள்ள, தங்கள் பிரிவு மாணவர்களைத் தேடி அலையவேண்டியதாயிற்று. தினேஷுக்கும் அப்படித்தான். அவன் பிரிவு மாணவர்கள் முக்கால்வாசிப்பேர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார்கள். எனவே இவனுக்கும் அடுத்த வருடம் எப்படியாவது தன் சக நண்பர்களுடன் வெளியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கவேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் உண்டாயிற்று.

அவன் வெளியில் தங்கவேண்டும் என்று ஆசைப்பட்டதற்கு வேறு ஒரு காரணமும் உள்ளது. ஒருநாள், விடுதி காப்பாளர் அவனது பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு அன்று outing சென்ற தினேஷ் இரவு பத்து மணி ஆகியும் வரவில்லை எனவும் அவன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் கூறினார். அவனது அப்பா, பயந்துபோய் அவனைத் தொடர்புகொண்டபோது, தான் விடுதிக்கு வந்துவிட்டதாகவும், வருகைப்பதிவில் கையெழுத்துப்போட மறந்து அறைக்கு வந்து அசந்து தூங்கிவிட்டதாகவும் கூறினான், தினேஷ். அப்போதுதான் அவருக்கு உயிரே வந்தது. அவனைத் திட்டிவிட்டு, பின் விடுதி காப்பாளரிடமும் கூறினார்.

மாணவர்கள் வரவில்லையென்றால், அவர்களை தொடர்புகொண்டு கேட்காமல், வெகுதொலைவில் இருக்கும் பெற்றோரை பதைக்க வைக்கும் இதைப்போன்ற ஒரு விடுதியில் தன் மகன் இருக்கவேண்டாம் என்று எண்ணினார் தினேஷின் தந்தை. அதனால் அடுத்தவருடம் வெளியே வந்துவிடுமாறு கூறினார்.

இரண்டாவது வருடமும் வெற்றிகரமாக தேர்ச்சி பெற்றான் தினேஷ். இந்த மூன்றாவது வருடத்தில் அவன் நினைத்தது போலவே தன் நண்பர்களுடன் சேர்ந்து பூந்தமல்லியில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்தான். மணி, ராஜா இவர்களுடன் அவனையும் சேர்த்து மொத்தம் மூன்று பேர். எப்படியும் ஒரு மாதத்திற்க்கு 4000 ஆகிவிடும் வாடகைக்கு. இது இல்லாது சாப்பாடு செலவு தனி. காலை அருகில் உள்ள தள்ளுவண்டிக் கடையில் இட்லி சாப்பிடுவார்கள்; மதியம் கல்லூரியிலேயே சாப்பாடு 25 ரூபாய்க்கு; இரவு பாய் கடை சப்பாத்தி என ஒவ்வொரு நாளும் நன்றாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால், எந்த கடையிலும் உணவு சுவையாக இல்லை.

இவர்கள் அல்லாது இன்னும் மூன்று வீடுகளில் இவர்களின் வகுப்புத் தோழர்கள் தங்கியிருந்தார்கள். இவர்கள் தங்கியிருக்கும் வீட்டிலிருந்து மற்றவர்களின் வீடும் சிறிது தூரத்தில் தான் இருந்தது. எனவே அவ்வப்போது அங்கே சென்று அரட்டை அடிப்பது வழக்கம்.

இவ்வாறாக ஒவ்வொரு நாளும் சென்றுகொண்டிருக்க ஒரு நாள் இரவு தினேஷ் நண்பன் டிஜோ வின் கால் வந்தது. “மச்சி இன்னும் அரமணி நேரத்துக்குள்ள எங்க ரூமுக்கு எல்லாரும் வாங்கடா. ஃப்ரெண்ட் கல்யாணத்துக்கு போறோம். சீக்கரமா வந்திடுங்க!” என்றான் டிஜோ.

தினேஷும் அவனின் நண்பர்களும் டிஜோ வின் அறைக்குச்சென்றனர். அங்கு மொத்தம் 6 பேர். நல்ல வசதியான வீடு. அவர்கள் கலியாணத்திற்கு செல்வதற்காக ஆயத்தமாகிக்கொண்டிருந்தார்கள்.

“டிஜோ கல்யாணம் எங்கடா?” என்று கேட்டான் தினேஷ்.

“அப்படியே கொஞ்சம் அந்த ஜன்னல் வழியா பாரு. அந்த மண்டபத்தில தான் கல்யாணம்” என்றான் டிஜோ.

“யாருடா அந்த ஃபிரண்டு? அதுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கறான்?”

“எந்த மண்டபத்தில கல்யாணம் நடந்தாலும் மாப்பிளை நம்ம ஃப்ரெண்டுதான்டா!”

தினேஷுக்கு ஒன்றும் புரியவில்லை.

“ஓசி சாப்பாட்டத்தான் அப்படி சொல்றான்” என்றான் அமர்.

அமர், டிஜோ, வினோத், நிர்மல், அஜின், நித்தியானந்தா என அந்த அறையில் தங்கியிருந்த அனைவரும் சென்ற வருடம் முழுவதும் இதையேதான் வாடிக்கையாக வைத்திருந்தனராம். இதனால் அந்த மண்டபத்தின் காண்ட்ராக்ட்காரர் சுந்தருடன் நட்பு ஏற்பட்ட விசயத்தையும் சொன்னான் வினோத்.

“இதெல்லாம் எப்படிடா?” என்று ஆச்சர்யமாக கேட்டான் தினேஷ்.

“அது, நாங்க போன வருஷம் முதன் முதலில் அங்கு போன போது சுந்தர் எங்களை தினமும் நோட்டம் போட்டுகிட்டு இருந்தாரு. திடீர்னு ஒரு நாள் டிஜோட்ட போயி ‘தம்பி நீங்க மாப்ள வீடா? பொண்ணு வீடா?’ அப்படீன்னு கேட்டுபுட்டாறு. அதுக்கு டிஜோ, ‘அப்படியே பின்னாடி திரும்பி பாருங்க! அந்த வெள்ள பெயிண்ட் அடிச்ச வீடுதான்’ அப்படீன்னான்.”.

“ஹா! ஹா! ஹா! ஒரே தமாஷா இருந்திருக்குமே? அப்புறம்?”

“ஆமாம்டா. அவருக்கு இவன ரொம்ப பிடிச்சுபோயிடுச்சி. நாங்களும் ஓசி சாப்பாடுதான் சாப்பிட வருகிறோம்னும் அவருக்கு நல்லா தெரியும். அதனால எங்கள பார்க்கும்போது மட்டும் சிரிப்பாரு. ஒன்னும் சொல்ல மாட்டாரு.”

“யாரும் ஒன்னும் சொல்லமாட்றாங்க என்பதால, இது இல்லாம இந்த ஊருல இருக்கும் எல்லா மண்டபத்திற்கும் போக ஆரம்பிச்சிட்டோம். ஒவ்வொரு மண்டபத்திற்கும் பக்கத்துல நம்ம ஃபிரண்ட்ஸ் யாராவது தங்கியிருப்பாங்க. அவங்க என்னிக்கு எந்த மண்டபத்துல கலியாணம்னு சொல்லிடுவாங்க. விதவிதமான சாப்பாடு வேணும்னா சுந்தர், சாப்பாடு குழம்பு வேணும்னா ராணி. பிரியாணி வேணும்னா சுபம், ராமக்கிருஷ்ணா. போதாதத்துக்கு பஸ் பிடிச்சி கரையாஞ்சாவடி போய் அங்க இருக்கற மண்டபங்கல்ல வேற சாப்பிடுவோம். இப்படி ஒவ்வொரு நாளும் விதவிதமான சாப்பாட்ட சாப்பிடறோம்” என்றான், அஜின்.

“ஹாய் மச்சான், இங்க என்ன பண்ற?” என்று ராஜாவைப் பார்த்து கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார்கள் நவினும், பாலாவும்.

“அவர்களும் நம்மள மாதிரிதான். நம்மளோட கலாச்சாரத்த கத்துக்குடுக்க போறோம்.” என்றான் நித்யானந்தா.

நவீன், பாலா இருவரும் கரையாஞ்சாவடியில் வீடு எடுத்து தங்கியிருக்கிறார்கள்.

ஒரு வழியாக அனைவரும் தயாராகிவிட்டனர். ஏதோ சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு கூப்பிட்ட மாதிரியே ஒரு படையாக கிளம்பி சென்றார்கள். மண்டபத்தின் உள்ளே சென்றவுடன் சக மரியாதைகளும் அவர்களுக்கு கிடைத்தது. அனைத்து வகையான உணவுகளும் உள்ளே பரிமாறப்பட்டது. அங்கு பந்தியில் அவர்களைப் போலவே பல மாணவர்கள் அமர்ந்திருந்தனர்.

அமர், தினேஷைப் பார்த்து, “இங்க, உட்கார்ந்து இருக்கிற எல்லாரும் நம்மளப் போல் ஸ்டூடண்ட்ஸ்தான்.” என்றான். புதிதாக வந்த தினேஷ், ராஜா, மணி இவர்கள் ஒரு ஆச்சர்யத்துடனேயே இருந்தார்கள். சாப்பிட்டு விட்டு வெளியில் வரும்போது ஃப்ரூட் சாலட் உம் ஐ‌ஸ்கிரீமும் தந்தார்கள். போதாதற்க்கு தாம்பூலம் வேறு. எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு வந்தார்கள்.

கலியாண மண்டபம் நுழைவு

“டேய்! யாரும் நம்மள பத்திரிக்கை கேக்கவே இல்ல. உள்ள விட்டுட்டாங்க?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டான் தினேஷ்.

“டேய்! இதெல்லாம் சாதாரண கலியாண மண்டபம். இங்க அவ்வளவு கண்டிப்பா யாரும் நடந்துக்க மாட்டாங்க. அந்த நசரேத்பேட்டை யில் இருக்கு பாரு, அந்த கலியாண மண்டபத்தில்தான் பத்திரிக்க இருந்தாதான் உள்ள விடுவாங்க. அப்படி இல்லன்னா பைக் வச்சியிருக்கணும். அப்பதான் நம்மள பெரிய status ல இருக்கிறவங்க அப்படீன்னு நினச்சி எதையும் கேட்க மாட்டாங்க. நம்ம ஃபிரண்ட்ஸ் நிறைய பேர் பைக் கடன் வாங்கி போயி அந்த மண்டபத்துல சாப்பிடுவாங்க.” என்று கூறினான் நிர்மல்.

“ஆமாம் மச்சி, மொய் எங்க எழுதுவாங்க? நாம மொய் கூட எழுதல. ஆனா, தாம்பூலம் கொடுத்து அனுப்புறாங்க?”

“டேய்! இங்க சென்னையில மொய் எழுதுற பழக்கம்லாம் பாதி மண்டபத்துல கெடையாதுடா! எல்லாமே gift தான். ஒரு சில மண்டபத்துல மாப்பிள்ளை பக்கதிலேயே மொய் எழுதணும். ஆனா, ஒரு சில மண்டபதுல வாசல்ல இல்லன்னா சாப்பிடும் இடத்திற்கு பக்கத்திலேயே வச்சிடுவாங்க. அங்கெல்லாம் போகக்கூடாது.” என்றான் பாலா.

இவ்வாறாக சுவாரசியமாக பேசிக்கொண்டு வந்தார்கள். அன்று நடந்ததை பற்றி மறுநாள் கல்லூரியில் சென்று பேசிக்கொண்டிருந்தார்கள்.

இதே போன்று கல்யாணம் இருக்கும் போதெல்லாம் தங்களையும் அழைக்குமாறு டிஜோ விடம் கூறினான் தினேஷ். அவன் எதிர்பார்த்தது போன்றே மறுநாள் இரவு சுபம் திருமண மண்டபத்தில் கல்யாணம். அன்று போலவே இன்றும் ஒரு திரளாக சென்றனர். ஆனால், அமர் அந்த குழுவில் இல்லை.

“டேய்! அமர் எங்கடா?” என்று கேட்டான் மணி.

“பொறுடா மச்சி. உங்க மூனு பேருக்கும் ஒரு அதிர்ச்சி காத்திருக்கு. வாங்க, இப்போதைக்கு மண்டபம் போவோம்.” என்றான், நித்தியானந்தா.

தினேஷ், மணி மற்றும் ராஜா ஒரு ஆச்சர்யத்துடன் மண்டபத்திற்குள் சென்றனர். ஆட்டுக்கறி பிரியாணி வாசனை மூக்கைத் துளைத்தது.

பந்தியில் உட்கார்ந்தனர். ஒருவர் பிரியாணி பரிமாறினார். அவர் தினேஷுக்கு பரிமாறும்போது, “டேய்! போதுமாடா தினேஷ்?” என்று கேட்டார். தன் பெயர் எப்படி உணவு பரிமாறுபவருக்குத் தெரிந்தது என்ற ஆச்சர்யத்துடன் நிமிர்ந்து பார்த்தான் தினேஷ். அது வேறு யாரும் இல்லை; அமர் தான்.

“டேய்! என்னடா! நீ சாப்பாடு பரிமாறுற?” என்று கேட்டான் மணி.

“நான் இங்க part time வேல பாக்க வந்திருக்கேன்டா!”

“டேய்! என்னடா சொல்ற?”

“ஆமாம்டா. சாயங்காலம் ஆறு மணியில இருந்து இரவு பத்து மணி வரை வேலை. நூற்று ஐம்பது ரூபாய் சம்பளம். சாப்பாடும் சாப்பிட்டுக்கலாம். இந்த மாதிரி வேல செஞ்சு காசு சேத்து வச்சா நம்ம கை செலவுக்காவது ஆகுமில்ல! அதான், அப்ப அப்ப இப்படி…”

அவர்கள் மூவரும் ஆச்சர்யத்துடன் பார்த்தார்கள்.

“டேய்! நீங்க மூனு பேரும் புதுசு. அதனால உங்களுக்குத் தெரியல. இங்க சென்னையில மண்டபத்தில வேல பார்க்கிறவங்கல்ல முக்கால்வாசி பேர் காலேஜ் பசங்கதான். என்ன பண்ண? காலேஜிலும் நம்மகிட்ட காசு கரக்கதான் பார்க்கிறாங்க. ஹோட்டல்லயும் காசு வாங்கிக்கிறாங்க. ஆனா, சாப்பாடு நல்லா இருக்காது. அதனாலதான் நம்ம நிலமை இப்படி ஆகிடுச்சி!” என்று வருத்தப்பட்டான் டிஜோ.

“கவலப்படாதீங்க! சாப்பிடுங்கடா!” என்றான் அமர். அன்று அனைவரும் பிரியாணியை ஒரு காட்டு காட்டினர்.

சாப்பிட்டு விட்டு வெளியில் வரும்போது மழை பிடிக்கத்தொடங்கியது. அவர்கள் குடை கூட கொண்டு வரவில்லை. எனவே, அங்கேயே இரவு பத்து மணி வரை காத்திருக்க வேண்டியதாயிற்று. அந்த நேரத்தில் நவீன், தினேஷ், மணி மற்றும் ராஜா தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர்.

“மச்சி, நம்ம பசங்க நிறைய பேர் லீவு நாள்ள 5 star hotel ல கூட வேலை பார்க்கிறாங்க. ஒரு நாளைக்கு மூனு வேள சப்பாட்டோட முன்னூறு ரூபாய் சம்பளம்.” என்றான் நவீன்.

“இது நல்லா இருக்கே!” என்றான், மணி.

“ஆனா, அங்க போக டிப் டாப்பா டிரஸ் பண்ணியிருக்கணும். English ல பேசணும்.”

“அதுதான் நமக்கு வராதே!” என்றான், ராஜா.

“அதனாலதான் நாங்ககூட அங்க போகல. நேரம் கிடைக்கும்போது மண்டபங்களிலேயே வேலை பார்ப்போம்.”

“சரி மச்சி. இனிமே நாங்களும் உங்க கூட வறோம்.” என்றான், தினேஷ்.

மழை நின்றபிறகு அமரும் அவர்களுடன் சேர்ந்துகொண்டான். அனைவரும் அவரவர்கள் வீடு திரும்பினார்.

ஒருநாள், கரையாஞ்சாவடியில் உள்ள யாதவ திருமண மண்டபத்தில் கிறிஸ்துவ திருமணம் இருப்பதாக தெரியவந்தது. தினேஷ், டிஜோ மற்றும் அமர் மட்டும் சென்றிருந்தார்கள். அன்று கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள் போலும். ஒரே ஆடல் பாடல் தான். பின்பு வகை வகையான அசைவ உணவுகள் பரிமாறப்பட்டன.

இவ்வாறாக பூந்தமல்லியை சுற்றி உள்ள ஏழு மண்டபத்திலும் இவர்கள் செல்லாத நாளே இல்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட மண்டபத்திற்கு மட்டும் யாரும் செல்ல மாட்டார்கள். ஏனெனில் அது ஒரு பழங்காலத்து மண்டபம். மொய் வச்சாத்தான் உள்ளேயே விடுவார்கள். எனவே அங்கு சென்றால் மாட்டிக் கொள்வோம் எனத்தெறிந்து இவர்கள் செல்வது கிடையாது. மற்றபடி அனைத்து கல்யாணமும் அவர்களுக்கு ‘நம்ம வீட்டுக்கல்யாணம்’ தான்.

பின், ஒருநாள் தினேஷ் தனது நண்பர்களுடம் ஊர் சுற்ற சென்றபோது, காலையில் சாப்பிடாமலே சென்றுவிட்டார்கள். ஒரு பெரிய shopping mall க்கு செல்ல அதன் அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார்கள். நடந்து செல்லும் வழியில் ஒரு மண்டபத்தில் கலியாணம் இருப்பது தெரிந்தது.

“டேய்! வாங்கடா, இங்க சாப்பிட்டுப்போலாம். பசிக்குது.” என்றான் மணி.

“இது, நமக்கு பழக்கம் இல்லாத மண்டபம். மாட்டிக்குவோம்.” என்றான் தினேஷ்.

“அதெல்லாம், ஒன்னும் ஆகாது. எனக்கும் பசிக்குது. வா போலாம்.” என்று கூறி ராஜா இருவரையும் அழைத்துச்சென்றான்.

இட்லி, வடை, பொங்கல் என சுவையான உணவு வகைகளை சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், அங்கு ஒருவர் வந்து, அவர்களை எழச்செய்து, “யாருப்பா நீங்க? ஓசி சாப்பாடா? எங்க இருந்துதான் கிளம்பி வராங்களோ தெரியல. பெரிய பெரிய ஆளுங்களெல்லாம் உட்கார்ந்து சாப்பிடும்போது, இப்படி அசிங்கமா நீங்க வந்து உட்கார்ந்து இருக்கீங்க? வெக்கமா இல்ல உங்களுக்கு?” என்று வசைபாடினார்.

மூவரும் செய்வதறியாது தலை குனிந்து நின்றனர். ஆனால், அவர் தன் வசைமொழியைத் தொடர்ந்தார்.

ஏதோ, பிரச்சினை நடந்துகொண்டிருப்பதை அறிந்த கலியாண மாப்பிள்ளை, அங்கு வந்து திட்டிக்கொண்டிருந்தவரிடம் நடந்த விவரத்தை அறிந்தார்.

“யோவ்! உனக்கு அறிவில்ல? கலியாணத்துக்கு வந்தவங்கள இப்படி திட்டுற? கலியாணம் எதுக்காக மண்டபத்துல வக்கிறோம்? நாலு பேரு வந்து சாப்பிட்டுவிட்டு, மணமக்கள வாழ்தணும்னுதானே! இப்ப இவங்கள இப்படி அசிங்கப்படுத்தினா, இவங்க என்னைய சபிச்சிட்டுதாண்டா போவாங்க! இனிமே யாரையும் இந்த மாதிரி திட்டாத.” என்று மாப்பிள்ளை அவரைத் கடிந்தார். அவரும் தலை குனிந்துகொண்டே சென்றார்.

பின் மாப்பிள்ளை அந்த மூவரையும் பார்த்து, “நீங்க, சாப்பிடுங்க. எதையும் மனசுல வச்சிக்காதீங்க. அவருக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.” என்று கூறினார்.

மூவரும் சற்று திகைத்துப்போயினர். பின் சாப்பிடும் வேலையைத் தொடர்ந்தனர்.

மாப்பிள்ளை யாரோ ஒருவரை அழைத்து, “அவங்க என்னோட ஃபிரண்ட்ஸ். அவங்கள நல்லா கவனிங்க!” என்று சொல்லிவிட்டு சென்றார். அதனால் அவர்களுக்கு ராஜ மரியாதைதான்.

அன்று, அவர்கள் வீடு திரும்பும்போது அந்த ‘வானத்தைப்போல மனம் படைச்ச மன்னவனை’ நினைத்துக்கொண்டே வந்தனர். அவன் நீடு வாழ்க என்று மனதிற்குள் வாழ்த்தினர்.

அன்று நடந்த அவமானத்தை நினைக்கும்போது, இனிமேல் மண்டபத்தில் போயி சாப்பிடக்கூடாது என்றுதான் நினைத்தார்கள். ஆனால், என்ன செய்வது? உணவகத்தில் ஐம்பது ரூபாய் கொடுத்து சாப்பிட்டாலும் கால் வயிருக்குப் பத்தாது. உணவும் தரமற்றதாக இருக்கும். அதனால், தினேஷ், அவனது அறை நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் தங்கியிருக்கும் நண்பர்கள் அனைவரும் இந்த கலாச்சாரத்தைத் தொடர்ந்தார்கள். எத்தனையோ அவமானங்கள். ஆனால், சாப்பிட்ட பிறகு அதெல்லாம் மறைந்துவிடும்.

இப்படியாக மூன்று மாதங்கள் ஓடின.

புரட்டாசி மாதம் துவங்கியது இன்னும் ஒரு மாதத்திற்கு முகூர்த்தநாள் எதுவும் இல்லை. மீண்டும் பாய் கடை சப்பாத்தி சாப்பட வேண்டிய நிலைமை.

ஐப்பசி மாதத்தில் ஒருநாள், தினேஷ் நாள்காட்டியைக் கிழிக்கும்போது அன்று மூகூர்த்தநாள் என்று தெரியவந்தது. அவன் தனது நண்பர்களைப் பார்த்து, “இன்னைக்கு எந்த மண்டபத்தில் கலியாணம்?” என்று கேட்டான்.

-முற்றும்.

 

அதாவது, கிராமத்தில் இருந்து படிப்பின் நிமித்தம் சென்னையில் தஞ்சம் புகும் ஏழை மற்றும் நடுத்தரவர்க மாணவர்களின் நிலைதான் இது. இது ஒரு உண்மைக்கதை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.


Spread the love

6
Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
avatar
4 Comment threads
2 Thread replies
1 Followers
 
Most reacted comment
Hottest comment thread
2 Comment authors
மரிய ரீகன் ஜோன்ஸ்chandraas sureshராஜிRamani S Recent comment authors
  Subscribe  
Notify of
Ramani S
Guest
Ramani S

அருமையான கதை
இது கற்பனை கதையாய் இருந்தால்
இத்தனை அழகாக சுவாரஸ்யமாக
சொல்லி இருக்க முடியாது
தலை சிறந்த எழுத்தாளராக தாங்கள்
நிச்சயம் விளங்குவீர்கள் எனும் உறுதியை
உறுதி செய்து போகிறது தாங்கள்
சொல்லிச் சென்றவிதம்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

ராஜி
Guest
ராஜி

எங்க சொந்தக்காரங்க பிள்ளை கூட சென்னைல படிக்குறப்போ இப்படி கல்யாண பந்தி பரிமாறப் போனதுண்டுன்னு சொல்லி இருக்கார்.

s suresh
Guest
s suresh

உண்மைக் கதை அருமை! நிஜங்களே கதைகளாகின்றன! வாழ்த்துக்கள்!

natchander
Member
natchander

this narration touches your heart and soul pray the almighty that these college boys occupy a good position soon and feed the poor…..

Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.