பேய் வீடு

இருபது வருடங்களுக்கு முன்பு….
பாரி கல்லூரியில் சேர்ந்து ஒரு வருடம் ஆகிவிட்டது. விடுதியில் தங்கி படித்து வருகிறான். இந்த ஒரு வருடத்தில் ஒரு முறை கூட வீட்டிற்கு செல்லவில்லை. அவன் குடும்பம் ஏழ்மையான குடும்பம் என்பதால் வீட்டிற்கு செல்ல ஆகும் பணத்தை மிச்சப் படுத்த ஆறு மாதத்திற்கு முன்பு கிடைத்த விடுமுறைக்குக் கூட வீட்டிற்கு செல்லவில்லை. நான்கைந்து முறை வீட்டிற்கு கடிதம் போட்டிருக்கிறான். அவ்வளவுதான். ஆனால், வரும் விடுமுறையில் கண்டிப்பாக வருமாறு அவனது அம்மாவும் அப்பாவும் அவனுக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர்.
மேலும், இது ஒரு மாத விடுமுறையென்பதால் இவனும் விடுதியிலேயே இருக்க முடியாது. எனவே விடுமுறை வந்ததும் வீட்டிற்கு கிளம்பி வந்துவிட்டான். தனது ஊரில் வந்து இறங்கினான். அவன் அங்கிருந்து காட்டுக்கொட்டாயிலுள்ள தனது வீட்டிற்கு நடந்து வந்தான். ( காட்டுக்கொட்டாய் என்பது விவசாய நிலங்களில் உள்ள வீடுகளின் குழுமம். அவரவர்கள் தங்களுக்குச் சொந்தமான நிலங்களின் வீடு கட்டி வாழ்வார்கள்.) வரும் வழியில் தனது கொல்லைக்கு அருகிலுள்ள பண்ணையார் வீட்டை ஆவலோடு பார்த்தான்.
 பேய் வீடு
அந்த மரத்தில் பழங்கள் பழுத்துத் தொங்கிக்கொண்டிருந்தன. அதன் அழகோ அழகு. அவனுக்கு அந்த மரத்தின் மீது ஒரு கண். சிறு வயதிலிருந்தே அந்த மரத்தின் பழத்தை பறித்து சாப்பிடவேண்டும் என்ற ஆசை அவனுக்கு. அது ஏதோ வெளிநாட்டு பழ மரமாம். பல வருடம் கழித்துக் காய்க்குமாம். பழம் மிகுந்த சுவையாக இருக்குமாம். இவ்வாறாக கூறி பண்ணையார் இந்த மரத்தை நட்டார். அந்த மரம் வளர வளர அதன் அழகு அதிகமானது. இதனால்தான் எப்படியாவது மரத்தின் பழத்தைச் சாப்பிடவேண்டும் என்ற ஆசை அவனுக்குள் வந்தது. அவனும் பத்து வருடங்கள் பார்த்துக்கொண்டிருந்தான். ஆனால், அது காய்த்த பாடில்லை. ஆனால், அவன் கல்லூரி சென்றுவிட்ட இந்த ஒரு வருடத்தில் அது காய்க்க ஆரம்பித்துவிட்டது.
அவனுக்கு ஒரே மகிழ்ச்சி. அவன் அந்த வீட்டைப் பார்த்தான். ஆனால், அங்கு யாரும் இருப்பதுபோன்று தெரியவில்லை. வீடே பாழடைந்து கிடந்தது. பழம் பறிக்க செல்லலாம் என்று நினைத்தான். ஆனால், ஏதோ தவறாக இருப்பதை உணர்ந்த அவன் அந்த வீட்டைக் கடந்து தனது வீட்டிற்கு வந்தான். பின் என்ன? ஒரே பாச நெகிழ்ச்சிதான். தனது சொந்தக்காரர்கள் அனைவரையும் பார்த்துவிட்டு வரவே அவனுக்கு இரண்டு நாள் பிடித்தது.
மேலும், அந்த கந்துவட்டி கந்தன் பிரச்சினை வேறு. அவனிடம்தான் பாரியின் அப்பா ராசு வட்டிக்கு பணம் வாங்கி பாரியை படிக்கவைக்கிறார். அதற்கு வட்டி கட்டவே முடியவில்லை. அதனால், அவன் வீட்டிற்ககே வந்துவிட்டான். பாரி ஒரு வருடமாக மிகுந்த சிக்கனமாக இருந்து அப்பா அனுப்பி வைக்கும் பணத்தை மிச்சப்படுத்தி ஒரு தொகை சேர்த்துவைத்திருந்தான். அதனைக் கொடுத்து மீதி பணத்தை பின் தருவதாக கூறி அவனை அனுப்பி வைத்தான்.
பின், பாரிக்கு அந்த பழ மரம் ஞாபகம் வந்தது. அவன் அண்ணன் குமாரிடம் கேட்டான்.
“அண்ணா! ஏன்னா அந்த பண்ணையார் வீடு பாழடஞ்சி போயிருக்கு? யாரும் வசிக்கிற மாதிரியும் தெரியலையே!”
“டேய்! நீ ஊர்ல இல்லாதப்ப என்னென்னமோ நடந்திடுச்சிடா. பண்ணையார பேய் கொன்னுடுச்சி.”
“என்ன சொல்ற? பேயா?”
“ஆமாண்டா. அந்த வீட்ல பேய பாத்ததா வீட்ல வேல பாத்தவங்க சொன்னாங்க. பண்ணையாரு அத நம்பல. ஆனா, வேலை செய்தவர்கள் பயத்தில் வேலையைவிட்டே நின்றுவிட்டார்கள். ஊரே அவர்களது வீட்டைப் பார்த்து பயந்தது. எனவே, யாருமே வீட்டிற்கு வேலை செய்ய முன்வரவில்லை. கொல்லையில் மட்டுமே வேலை செய்தார்கள். எவ்வளவு பணம் இருந்து என்ன புண்ணியம். பண்ணையாரும் அவரது மனைவியும் வீட்டில் யாருடைய உதவியும் இன்றி வீட்டு வேலைகளை செய்யவேண்டியிருந்தது.”
“அப்புறம்?”
“அப்புறம் ஒருநாள் பண்ணையாரும் அவரது மனைவியும் இறந்து கிடந்தார்கள். பேய்தான் கொன்றுவிட்டதாக அனைவரும் கூறினர். ஏனென்றால், என்னதான் அவர்கள் பேய்க்கு பயப்படாதவர்களைப் போன்று வெளியில் காட்டிக்கொண்டாலும், பேய்க்கு பயந்துதான் அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்திருக்கிறார்கள்.”
“எத வச்சி சொல்ற?”
“ஏனென்றால், அவர்களது கைகளில் தாயத்து கட்டியிருந்தார்கள். அது அவர்களது குடும்ப சாமியார் கொடுத்ததாம். மேலும், அவர் பேயை விரட்ட எத்தனையோ சிறப்பு பூஜைகள் செய்ததாகவும் கூறினார். இருந்தாலும் அது மிகவும் சக்தி வாய்ந்த பேய். இவரால் ஒன்றும் செய்யமுடியவில்லையாம்.”
“என்ன, பெரிய கதையா இருக்கு? ஆமாம். அந்த பேய் எதுக்காக கொன்னுதாம்?”

“பண்ணையார் யாரோ ஒருவரது நிலத்தை அபகரித்து இந்த வீட்டைக் கட்டியிருக்கிறார். அவர்தான் இறந்தபிறகு அந்த வீட்டில் யாரையும் வசிக்க விடாமல் செய்கிறார் என்று சாமியார் கூறினார். அதனால் அந்த வீட்டில் யாரும் வசிக்காமல் இருந்தால் நல்லது என்று மக்களை எச்சரித்தார்.”
“என்ன, யாரையும் வசிக்க விடாமல் செய்கிறதா? அதன் பிறகு யாராவது வசித்தார்களா?”
“ஆமாண்டா! அதுக்கப்புறம் அவரோட தம்பி மூர்த்தி தனி ஆளா பயப்படமா தங்கியிருந்தார். அவரும் ஒருநாள் தூக்கு மாட்டி இறந்தார். அதற்கு காரணமும் பேய்தான் என்றும் இதற்குமேலும் இங்கு யாராவது குடி வந்தால் அவர்களையும் அது கொன்றுவிடும் என்றும் சாமியார் கூறினார். அதிலிருந்து அந்த வீடு பூட்டிதான் இருக்கு. அதனாலதான் அது பாழடஞ்சி இருக்கு.”
“இதெல்லாம் முட்டாள்தனமா இல்ல? பேயாவது! பிசாசாவது! நான் நம்ப மாட்டேன். நீ இத நம்பிறிய?”
“நான் நம்பறேன். ஏன்னா, ஊர் மக்கள் பலதடவ அந்த வீட்டில் பேயைப் பார்த்ததாக சொன்னாங்க. மேலும், நானே பல தடவ பயங்கரமான சத்தம் கேட்டிருக்கேன்.”
“டேய்! முட்டாள்! ஒன்னைய திருத்த முடியாதுடா! பயந்தாங்கொள்ளி!”
“ஒன்ன மாதிரிதான்டா ஒருத்தன் ‘பேயாவது! பிசாசாவது! நான் நம்ப மாட்டேன்’ அப்படீன்னு சொல்லிக்கிட்டு இருந்தான். அவன் கதி என்ன ஆச்சி தெரியுமா?”
“என்ன ஆச்சி?” என்று பாரி கேட்டதும் குமார் அந்த கதையைக் கூறினான். மேலும் அக்கம் பக்கத்து ஊர்களில் நடந்த பல பேய் மற்றும் ஆவி கதைகளைக் கூறினான்.
“நீ சொல்ற கதையெல்லாம் நல்லா சுவாரசியமா இருக்கு. அதுக்காக இதெயெல்லாம் நம்பமாட்டேன்.”
“நீ எப்படியோ போ. ஆனா, அந்த பண்ணையார் வீட்டுப்பக்கம் மட்டும் போகாத.”
“அது எப்படி போகாம இருக்க முடியும். அந்த பழத்த பறிச்சி சாப்பிட்டே ஆகணும்.” என்று மனதிற்குள் நினைத்தவன் பொய்யாக தனது அண்ணனிடம் சரி என்றான்.
அடுத்தநாள் காலையில் அந்த பழத்தை பறிக்க செல்லலாம் என்று எண்ணினான். ஆனால், பகலில் சென்றால் யாராவது பார்த்தால் வீட்டில் வந்து கூறிவிடுவார்கள் என்று இரவில் செல்ல திட்டமிட்டான்.
எனவே பகலில் காட்டில் உள்ள பழங்களைப் பறித்துச் சாப்பிடலாம் என்று காட்டிற்கு சென்றுகொண்டிருந்தான். போகும் வழியில் ஒரு கிழவி வந்துகொண்டிருந்தார். அவர் பாரியிடம் கேட்டார்.
“ஏம்பா, நீ ராசு மகன்தானே? எங்கப்பா இந்த நேரத்துல தனியா போற?”
“அது ஒன்னும் இல்ல பாட்டி! காட்டுல ஈச்சம் பழம் கொடுக்காளி காய் எல்லாம் காய்த்து தொங்கும். அத பறிக்கத்தான் போறேன்.”
“அதுக்காக தனியாவா போவ? ஊரே பேய் பயத்துல காட்டுக்கு போவதில்லை. நீ என்னன்னா பயமே இல்லாம இருக்க?”
“காட்டுல பேயா? பண்ணையார் வீட்லதான் பேய் இருக்குன்னு சொன்னாங்க. இப்ப கட்டுலையுமா? ஏன் பாட்டி, இந்த பேய்களுக்கு வேற வேலையே இல்லையா? மனிதர்கள பயமுறுத்துவதுதான் வேலையா? ஆமாம், காட்டுல என்ன கத ஓடுது?”
“காட்டுல தங்கக்கொடி ஓடுது, அத பேய்கள்தான் பாதுகாக்குது. கொஞ்ச மாதம் முன்னாடிதான் காட்டில் தங்கக்கொடி ஓடுதுன்னு எல்லாரும் பேசிக்கிட்டாங்க. அதனால பலர் அத எடுக்க முயற்சி செய்தாங்க. ஆனால், எல்லாரும் இறந்துவிட்டார்கள்.”
“அந்த தங்கக்கொடி எங்க ஓடுது பாட்டி?”
“அது ‘இருளர் கல்லு’ என்ற ஒரு பாறையின் அருகில் ஓடுவதா சொல்றாங்க. அங்கதான் பேய்கள் காவ காப்பதா சொல்றாங்க.”
“அந்த பாறை எங்க இருக்கு?”
“அது இந்த கட்டுக்குள்ளதான் இருக்குதே தவிர அதன் வழி யாருக்கும் தெரியாது. அந்த பாறையை கண்டுபிடித்து சென்றால் கூட வரும் வழி குழப்பமாக இருக்கும். அப்படியே வரும் வழியை கண்டுபிடித்து வீட்டிற்கு வந்துவிட்டால் கூட மறுபடியும் அந்த வழியை கண்டுபிடிக்க முடியாது. காட்டின் அமைப்பு அந்த மாதிரி!”
“எப்படி இவ்வளவு தெளிவா சொல்றீங்க?”
“ஏன்னா, நான் கூட ஒரு தடவ மாடு மேய்க்கப் போகும்போது வழி தவறி சென்றுவிட்டேன். வழியைத் தேடிக்கிட்டு இருந்தேன். ஆனா இருட்டாயிடுச்சி. என்ன பண்றதுன்னு தெரியல. அப்பதான் அங்க ஒரு பாறைக்குப் பக்கத்துல சத்தம் கேட்டுது. போய் பார்த்தப்பதான் பயந்துபோயிட்டேன்.”
“என்ன பாட்டி, என்ன ஆச்சி?”
“அங்க பேய்கள் சந்தோஷமாக நடனம் ஆடிக்கொண்டிருந்தன.”
“என்ன, பேய்களா?”
“ஆமாம்பா! எல்லாம் அகோர உருவத்துல இருந்துதுங்க. நான் பயத்துல ஓட்டம் பிடிச்சேன். என் வீட்டிற்கு செல்லும் வழி எதுன்னே தெரியல. தெரிஞ்ச வழியில ஓடினேன். நல்ல வேள, பக்கத்து ஊருக்கு போயிட்டேன். அங்கிருந்து சாலை வழியா நம்ம ஊருக்கு வந்துட்டேன்.”
“சரி பாட்டி, எப்படிதான் அந்த பாறைக்குப் போறது?”
“அந்த காலத்துல சொல்லிக்குவாங்க. நம்ம ஊர்ல எங்கோ ஒரு இடத்துல ஒரு சுரங்கப் பாதை இருக்கு. அது நேரா அந்த பாறைக்குதான் போகுது. சரிப்பா, என் வீடு வந்துடுச்சி. நீ காட்டுக்கு ஏதரவா போயிட்டுவா!”
“பாட்டி, நீங்க சொன்ன கத ரொம்ப நல்லா இருந்துது. ஆனால், இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்.”
“டேய்! கத இல்லடா. உண்மை.”
“சரி சரி நான் கிளம்பறேன்.” என்று கூறிய பாரி காட்டிற்கு சென்றான். நண்பகலில் பல வித்தியாசமான சத்தங்கள் கேட்டாலும் அவன் பயப்படவில்லை. பழங்களை பறித்துவிட்டு வீட்டிற்கு வந்தான். அனைவரும் அவனைத் திட்டினர். இனிமேல் காட்டிற்கு போகக்கூடாது என்று எச்சரித்தனர்.
அவன் தான் பறித்துவந்த பழங்களை அண்ணனிடம் பகிர்ந்து சாப்பிட்டான். அவர்களுக்குள் பழங்களுக்காக சண்டை கூட நடந்தது. பெரியவர்களானாலும் இன்னும் சிறுபிள்ளைத்தனமாகவே இருக்கிறார்களே என்று அவர்களது பெற்றோர்கள் அவர்களை ரசித்தனர்.
இரவு ஆனது.
எப்படியாவது அந்த பழத்தை சாப்பிடவேண்டும் என்று எண்ணிய அவன் பண்ணையார் வீட்டிற்கு சென்றான். அந்த மரத்தின் மீது ஏறி பழத்தைப் பறிக்க ஆரம்பித்தான். சாப்பிட்டுப்பார்த்தான்.
“ஆஹா! என்ன ஒரு சுவை! இந்த பழத்தைச் சாப்பிட பண்ணையாருக்கு குடுத்து வைக்கலையே!” என்று எண்ணிய அவன் முடிந்தவரை பறித்துச் சாப்பிட்டான். வீட்டிற்கு எடுத்துச் சென்றால் பண்ணையார் வீட்டிற்கு வந்ததற்கு திட்டுவார்கள் என்று தன் அண்ணனுக்கு மட்டும் ஒரு சில பழங்கள் பறித்துவிட்டு மரத்திலிருந்து இறங்கினான்.
இறங்கும்போது அவன் காலில் ஏதோ அகப்பட்டது. வித்தியாசமான வடிவத்தில் மஞ்சள் நிறத்தில் மிகவும் பளபளப்பாக இருந்தது. அது அவனை ஈர்த்தது. எனவே அதை எடுத்து தனது கைலியில் மறைத்து வைத்து கட்டினான். பின் வீட்டிற்கு வந்தான். கொல்லையிலிருந்து வருவதுபோல வந்து சாப்பிட்டுவிட்டு தூங்கிவிட்டான்.
பின் காலையில் குமாரிடம் அந்த பழங்களைக் கொடுத்தான். பாரி பண்ணையார் வீட்டிற்கு சென்றதை அறிந்த குமார் முதலில் கோபப்பட்டு அவனைத் திட்டினான். இருந்தாலும் அந்த பழத்தின் அழகைப் பார்த்து அதனை வாங்கி சாப்பிட்டான். அவன் வாழ்நாளில் அப்படி ஒரு சுவையுள்ள பழத்தைச் சாப்பிட்டிருக்கமாட்டான். ஆனால், அதனை காட்டிக்கொள்ளாமல் “ம்ம்… பரவாயில்ல, சுமாரா இருக்கு!” என்று கூறினான்.
“டேய்! அங்க பேய் ஏதாவது பார்த்தியா?”
“டேய்! அங்க ஒரு பேயும் இல்லடா! யாரோ கட்டுக்கத விட்டிருக்கிறார்கள். அந்த இடம் எவ்வளவு அமைதியாக இருக்குத் தெரியுமா?”
“ஒருவேள பேய்கள் ஒன்ன பாத்திருக்காது. மறுபடியும் போற வேல வச்சிக்காத”
“போடா, நான் எதுக்கும் துணிஞ்சவன்டா!”
“டேய்! எதையும் விளையாட்டா எடுத்துக்காதடா.”
“சரி, சரி பாத்துக்கலாம்.”
அன்று மதியம் குமார் கடைக்குச் செல்ல பண்ணையார் வீட்டு வழியே சென்றான். அப்போது அந்த மரத்தில் இருந்த பழங்கள் அவன் கண்ணை உறுத்தியது ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடவேண்டும் என்ற எண்ணத்தை தூண்டும் பழம் அது. அவனுக்கு மறுபடியும் அந்த பழத்தைச் சாப்பிடவேண்டும் என்று தோன்றியது.
“உள்ளே செல்லலாமா? பேய் இருக்குமா? பகல் பன்னிரெண்டு ஆயிடுச்சே! நேற்று ராத்திரியே பாரி போயிட்டு வந்தான். பேய் எதுவும் இருக்காதுன்னு நினைக்கிறேன். கட்டுக்கதையாகத்தான் இருக்கும். தோ, இங்க நுழைவு வாயில் பக்கத்திலேயே இருக்கு. நாலு பழம் பறிச்சிட்டு வந்திடுவோம்!” என்று எண்ணிய அவன் உள்ளே சென்றான்.
என்னதான் அவன் தைரியமாக உள்ளே வந்தாலும் ஒரு பயம் இருந்துகொண்டேதான் இருந்தது. மரத்தில் ஏறி பழம் பறித்தான் ஒரு பழத்தை எடுத்து வாயில் வைக்கும்போது ஒரு சத்தம் கேட்டது. அது சாதாரண சத்தம் இல்லை. புலி உறுமுவதுபோல் ஒரு கோர சத்தம். காற்றில் மரம் ஆடியது. பேய் காத்து அடித்தது. குமாருக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது.
மரத்திலிருந்து இறங்க முற்பட்டான். அப்போது ஒரு குரல்,
“டேய்!”
திரும்பிப் பார்த்தான். யாரும் இல்லை. அந்த குரல் மனிதர்கள் குரல் போன்று இல்லை. புலி உறுமுவதுபோல கரகரத்த குரலில் இருந்தது.
“டேய்! எங்க வீட்டுக்கே வந்துட்டியா? எத்தன பேர கொன்னோம். அப்படியிருந்தும் ஒனக்கு பயம் இல்லையா? இன்னைக்கு நீயும் சாகப்போற!”
இடி முழக்கங்களைப் போன்று விழுந்த அந்த குரலைக் கேட்டு குமார் நடு நடுங்கிப்போனான். பண்ணையார் வீட்டு கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பட பட வென ஆடின. காற்று மேலும் பயங்கரமாக வீசியது. அவன் ஓட்டம் பிடித்தான். எப்படியோ பண்ணையார் வீட்டைத்தாண்டி வந்துவிட்டான். ஆனாலும் மிக பயந்தவனாய் சாமியார் வீட்டிற்கு சென்று நடந்தவற்றைக் கூறினான்.
“சாமி, பேய்கள் என்ன கொன்னுடுவேன்னு சொல்லுதுங்க. நீங்கதான் சாமி என்ன காப்பாத்தணும்.”
“பல தடவ நான் சொல்லியிருக்கேன். அந்த பேய்கள் மிக கொடூரமானவை. சரி, ஏதோ தெரியாம போயிட்ட. நான் பரிகாரங்களை செய்கிறேன்.” என்று கூறி ஏதோ மந்திரத்தை ஓதினார். பின் ஒரு தாயத்தை காட்டினார்.
“சரி, போயிட்டு வா”
“நன்றி சாமி.”
குமாரின் பெற்றோர் கடைக்குச் சென்ற அவன் நீண்ட நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் பாரியை அனுப்பி பார்த்து வரச்சொன்னார்கள். அவனும் பல இடங்களில் அலைந்து பார்த்து மிகவும் பதட்டத்துடன் வந்து அவன் கிடைக்கவில்லையென்று கூறினான்.
அதனால் அவனது பெற்றோரும் தேடுவதற்காக சென்றார்கள். போகும் வழியில் பண்ணையார் வீட்டிற்கு அருகில் உள்ள அவரது கொல்லையில் மரத்தின் அடியில் யாரோ அமர்திருப்பது போன்று தெரிந்தது. அது குமார் போன்றும் தெரிந்தது.
“டேய்! இங்க ஏன்டா வந்து உட்காந்திருக்க?” என்று கேட்ட அவர்கள் அவன் அருகில் சென்றனர். சென்றவர்கள் அதிர்ந்தனர். குமார் இறந்துகிடந்தான்.
அவர்களது அழுகையை பார்த்தால் மிகவும் பரிதாபமா இருந்தது. மூத்த பிள்ளையை பறிகொடுத்துவிட்டு அவர்கள் தவிக்கிறார்கள்.
அவனது இறுதி சடங்குகள் நடக்கும்போது காவலர் கணேஷ் மற்றும் பிற காவலர்கள் தடுத்தனர். இது கொலையா தற்கொலையா என்று கணேஷ் விசாரித்தார். அப்போது சாமியார் அங்குவந்து உண்மையைக் கூறினார். அதாவது குமார் அந்த பண்ணையார் வீட்டிற்கு சென்றது, தன்னிடம் வந்தது மற்றும் இவர் தாயத்துக் கொடுத்தது அனைத்தையும் கூறினார்.
“ஐயா, நான் மந்திரிச்சு தாயத்துக் கொடுத்தேன். இருந்தாலும் அந்த பேய்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. இவனைக் கொன்றுவிட்டன.”
“யோவ்! எத்தன நாளைக்குத்தான் இந்த பேய் கத விடுவீங்க? சரி அவன் எப்படி பண்ணையாரோட கொல்லைக்குப் போயிருப்பான்?”
“பண்ணையார் வீட்டு வழியே போனா ஏதாவது ஆபத்து வருமோ என்று பயந்து வயல் வழியாக சென்று அவன் வீட்டிற்கு வந்துவிடலாம் என்று நினைத்திருப்பான்!”
இப்படியாக ஆளுக்கு ஒரு தகவல்களைக் கொடுத்தனர். அனைவரும் கூறியதிலிருந்து குமார் பேய் அடித்துதான் இறந்தான் என்று தெளிவாய்த் தெரிந்தது.
கணேஷ் கூறினார். “அது, பேயோ! பூதாமோ! ஊர்மக்கள் கொஞ்சம் ஏதரவாக இருங்கள்.” என்று எச்சரித்துவிட்டு குமாரின் பிணத்தை பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றார்கள். அது முடிந்ததும் அவன் உடல் வீட்டிற்கு வந்தது. பின் இறுதி சடங்குகள் நடந்தன.
பாரிக்கு நடந்தவற்றைப் பார்த்து ஒருவேளை பேய்தான் தனது அண்ணனைக் கொன்றிருக்குமோ என்று சிறிது பயம் ஏற்பட்டது. இருபது நாட்கள் கடந்தன. வீட்டில் எப்போதும் அழுகையாகவே இருந்தது. பாரிக்கு வீட்டில் இருப்பதே மிகவும் சிரமமாக இருந்தது. தனது அண்ணனுடைய நினைப்பே இருந்தது. எனவே கல்லூரிக்கு சென்றுவிடலாம் என்று தனது பெட்டியை அடுக்கினான்.
அப்போது ஒரு வித்தியாசமான பொருள் மிகவும் பளபளத்தது. எடுத்துப் பார்த்தான். அது அந்த பண்ணையார் வீட்டில் அவனுக்கு கிடைத்தது. அதனை எடுத்தவுடன் “நான்தான் அங்கு மொதல்ல போனேன். அப்படின்னா நான்தானே மொதல்ல செத்திருக்கணும். ஏதோ மர்மம் இருக்கு!” என்று எண்ணினான். அந்த பொருளை நன்கு துடைத்தான். பளபளப்பு மேலும் கூடியது. அப்போதுதான் அவனுக்கு தெரிந்தது அது தங்கம் என்று.
“ஆ! தங்கம். பண்ணையார் வீட்டில் தங்கம்.” என்று எண்ணிய அவனுக்கு அன்று ஒரு நாள் காட்டிற்கு செல்லும் வழியில் ஒரு பாட்டி கூறியது (காட்டில் தங்கக்கொடி ஓடுது) நினைவுக்கு வந்தது.
“அப்ப, பண்ணையார் வீட்ல ஏதோ மர்மம் இருக்கு!” என்று நினைத்த அவன் இரவில் அங்கு செல்லவேண்டும் என்று முடிவெடுத்தான். அதன்படியே சென்றான்.
மாடி வழியே உள்ளே இறங்கியவனுக்கு ஒரே ஆச்சர்யம். உள்ளே மனிதர்கள் வாழ்வதுபோன்று தெரிந்தது. வெளியே பாழடைந்த, இருண்ட வீடு போல் தோற்றம். ஆனால், உள்ளே வீடு மிக சுத்தமாக இருந்தது. ஆனால் இருட்டாக இருந்தது. வீட்டின் நடுவில் மேற்கூரை இல்லாததால் நிலவெளிச்சம் வந்தது. பண்ணையார் வீட்டில் ஏதோ தவறாய் நடப்பதை உணர்ந்த அவன் வீடு முழுவதும் தேடினான். வீட்டிற்கு பின் புறம் ஒரு கிடங்கு இருந்தது. அங்கு சென்று பார்த்தான். அங்கு பல மூட்டைகள் இருந்தன.
அவற்றை பார்த்தான். அனைத்தும் தங்கம். அப்போதுதான் அவனுக்கு அந்த தங்கம் எப்படி கிடைத்ததென்று புரிந்தது. இந்த தங்கமெல்லாம் எப்படி இங்கு வந்தது என்று துப்பு தேடினான். அப்போது மூட்டைகளுக்கு நடுவில் வெளிச்சம் வந்ததைப் பார்த்தான். சென்று பார்த்தான். ஒரு பள்ளத்திலிருந்து வெளிச்சம் வந்தது. அந்த பள்ளம் படிக்கட்டுகளை கொண்டிருந்தது. இறங்கி நடந்து சென்றான்.
அது ஒரு சுரங்கப்பாதை. வழி நெடுக்கிலும் மின்விளக்குகள் எரிந்தன. எனவே அவன் சரியாக முன்செல்ல வசதியாக இருந்தது. ஆனால், போகும் வழியில் ஆங்காங்கு மனித கூடுகள் கிடந்தன. அவன் அதற்கெல்லாம் பயப்படவில்லை. மர்மத்தைக் கண்டுபிடிப்பதே அவனது ஒரே குறிக்கோள். கிட்டதட்ட ஒரு மணி நேர கழிச்சி மேல் ஏறுவதற்கான படிக்கட்டுகள் தென்பட்டன. ஏறி சென்றான். அங்கு ஒரு பாறை இருந்தது.
இருளர் கல்
“கண்டிப்பா, இதுதான் அந்த பாட்டி சொன்ன இருளர் கல்லு. அவங்க சொன்ன சுரங்கப்பாதை வழியாத்தான் வந்திருக்கோம்.” என்று எண்ணினான்.
அங்கு சிலர் பேசுவதுபோல் குரல் கேட்டது. மேலும் மண்வெட்டி மற்றும் கடப்பாரை சத்தமும் கேட்டது. அந்த பாறையின் பின் புறம் நடப்பதை ஒரு கல்லின் பின்னால் மறைந்து பார்த்தான். அவனுக்கு ஒரே அதிர்ச்சி.
அங்கு மூன்று பேர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் கந்துவட்டி கந்தன், அந்த சாமியார் மற்றும் காவலர் கணேஷ். மேலும் பலர் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தனர். ஏற்கனவே பல பள்ளங்கள் தோண்டப்பட்டிருந்தன. அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்த்தான்.
அவன் நினைத்தது சரிதான். அவர்கள் தங்கம் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தார்கள். அந்த தங்கங்களைத்தான் பண்ணையார் வீட்டில் பதுக்கி வைக்கின்றனர் என்பதை புரிந்துகொண்டான். அந்த மூவருக்குள் உரையாடல் நடந்துகொண்டிருந்தது.
“என்னங்க, வெறும் தங்கம் மட்டும்தான் எடுத்துக்கிட்டு இருக்கோம். இத எப்படி பணமா மாத்தறது? யாருக்கிட்டே இத விக்கறது?” சாமியார் கேட்டார்.
“கவலப் படாதீங்க. வெளி நாட்டுல ஒரு பெரிய புள்ளிய புடுச்சி வச்சிருக்கேன். இன்னும் எடுக்கவேண்டியது கொஞ்சம்தான் மிச்சம் இருக்கு. இன்னும் ஒரு வாரத்துல எல்லாத்தையும் மொத்தமா வித்துடலாம்.” கந்தன் கூறினான்.
“வித்ததும் எனக்கு சேர வேண்டிய பங்க கொடித்திடுங்க!” கணேஷ் கூறினார்.
“ஒனக்கு இல்லாத பங்கா? நீ எவ்வளவு முக்கியம். கிட்டதட்ட இந்த தங்கம் எடுப்பதற்காக இருபது பேர கொன்றிருக்கோம். எல்லாத்தையும் தடையமே கிடைக்காம மூடி மரச்சிட்ட!”
“ஆமாம், எப்படிங்க ஒங்களுக்கு இந்த இடத்துல தங்கம் இருப்பது தெரிஞ்சுது?”
“எல்லாம் நம்ம சாமியார் சொன்னதுதான்.”
“ஒங்களுக்கு எப்படி சாமி தெரிஞ்சுது?”
“அதுவாங்க? எங்க வீட்ல பல ஓலைச்சுவடிகள் இருக்கு. ஒருநாள் எல்லாத்தையும் புரட்டி பார்த்தேன். அதுலதான் இதபத்தி போட்டிருந்தது. மன்னர் காலத்துல போரின்போது அவங்க கருவூலத்தில் இருந்த தங்கங்களை பாதுகாக்க இங்க பொதச்சி வச்சாங்க. மேலும் இதற்கு பாதுகாப்பாக காட்டின் அமைப்பையே மாத்திட்டங்க. யாருமே கண்டுபிடிக்கமுடியாது. யாராவது இங்க வந்தாலும் வீடு போயி சேர முடியாது. இந்த சுரங்கம் வழியே செல்வதுதான் ஒரே வழி.”
“ஆமாம், இந்த சுரங்கம் பண்ணையார் வீட்டில்தான் இருக்கிறது என்று எப்படி கண்டுபிடிச்சிங்க?”
“அந்த ஓலைச்சுவடியில் குறிப்பிட்ட அடையாளத்தில் பண்ணையார் வீட்டு பிள்ளையார் கோயில் இருந்தது. அது மிக பழமையான கோவில். அத பண்ணையார் குடும்பம்தான் பராமரிச்சிக்கிட்டு வந்தது. அதுக்கு பக்கத்திலதான் இப்ப பண்ணையார் புதுசா வீடு கட்டினாரு. கண்டிப்பாக சுரங்கம் அங்குதான் இருக்கும் என்று நெனச்சி அவங்க வீட்டிற்கு ஒரு பூஜைக்கு போகும்போது வீட்டை நோட்டம் போட்டேன். வீட்டின் பின்புறத்தில் ஒரு எடத்துல மட்டும் பூமிக்கு அடியில டோங்கு இருப்பதுபோன்று சத்தம் கேட்டது. அத வச்சிதான் நான் ஒரு முடிவுக்கு வந்தேன். பிறகு, ஒரு பெரிய புள்ளியோட துணை இருந்தாதான் நமக்கு புதையல் கிடைக்கும்னு நம்ம கந்தன கேட்டேன்.”
“அப்பப்பா! அந்த வீட்ட நம்ம வேலைக்கு பயன்படுத்த எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? பண்ணையார் அவனோட அவசரத்தேவைக்கு என்னிடம் அவனது வீட்டை அடமானம் வைத்து பத்து லட்சம் வாங்கினான். அதுதான் சந்தர்ப்பம் என்று வீட்டை அபகரிக்க வட்டிமேல வட்டி போட்டேன். இருந்தாலும் அவன் எப்படியோ பணத்த கொடுத்திட்டு வீட்ட மீட்டுட்டான்!”
“அப்புறம், நான்தான் பேய் இருக்கு பிசாசிருக்குன்னு புரளிய கெளப்பிவிட்டேன். அவன் அதுக்கெல்லாம் பயப்படவே இல்ல. அதனால, கந்தன் அவனையும் அவனது மனைவியையும் கொன்னுட்டாரு. நான், பேய்தான் கொன்னுதுன்னு ஊர நம்பவச்சிட்டேன். ஆனா, அந்த மூர்த்தி பையன் அந்த வீட்டுக்கு குடிவந்துட்டான். அவனையும் கொள்ளவேண்டியதா போச்சி.”
“பலே, கில்லாடிங்க நீங்க. ஆமாம் சாமி, மன்னர் காலத்துல வெறும் தங்கம்தான் இருந்ததா?”
“இங்க இருப்பது வெறும் தங்கம்தான். இங்கிருந்து ஒரு சுரங்கப்பாதை காட்டுல வேறு ஒரு இடத்திற்கு செல்லும். அங்க வேறு பல விலை மதிப்பற்ற பொருட்கள் இருக்கும். அப்படியாக காட்டில் ஏழு இடங்களில் புதையல் இருக்கு.”
“ஆ! இதுவே பலகோடி தேரும். அவ்வளவு புதையலும் கெடச்சா? அந்த சொரங்கப்பாத எங்க இருக்கு?”
“அலையாதீங்க! இத மொதல்ல வெற்றிகரமாக முடிக்கணும். அப்பறமா அத தேடுவோம்.”
“அதுக்கு இன்னும் எத்தன பேர கொல பண்ணனுமோ?”
“இதுக்கே நாம எத்தன பேர கொன்னிருக்கோம். சமீபத்தில கூட அந்த பயந்தாங்கொள்ளி குமாரை கொன்னோமே!”
“சாமி, அவன தேவையில்லாம கொன்னுட்டீங்க. நான் அவன் பண்ணையார் வீட்டுக்கு வந்தப்ப பேய் போல பேசி பயமுறுத்தி அனுப்பிவச்சேன். அவன் நம்ம பக்கமே வந்திருக்க மாட்டான்.” என்று கந்தன் குறுக்கிட்டான்.
“நீங்க வேற, பண்ணையார் வீட்டுக்கு போய் உயிரோட ஒருத்தன் இருந்தான்னா அங்க பேய் இருக்குன்னு யாரும் நம்ப மாட்டாங்க. அதான் அவன என் ஆளுங்கள வச்சி கொன்னுட்டேன். இனிமே ஒரு பயன் பண்ணையார் வீட்டுக்கிட்ட திரும்பி பாக்கமாட்டான்.”
இந்த உரையாடல்களை கேட்ட பாரிக்கு அவர்களை அப்படியே அடித்து கொள்ளவேண்டும் என்று இருந்தது. ஆனால், அங்கு நிறைய பேர் இருக்கிறார்கள். அவன் வீரம் அங்கு எடுபடாது. எனவே வந்த வழியே திரும்பி வீட்டிற்கு சென்றான். நடந்தவற்றை வீட்டில் கூறி தனது அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களை சேர்த்துக்கொண்டு இருளர் கல்லிற்கு சென்றான். அங்கிருந்த அனைவரும் ஊர் மக்களிடம் வசமாக மாட்டிக்கொண்டனர். அடுத்தநாள், கட்டி வைக்கப்பட்டிருந்த அனைவரையும் காவலர்கள் கைது செய்தனர். தனது அண்ணனைக் கொன்றவர்களை பழிவாங்கிய சந்தோசத்தோடு கல்லூரிக்குத் திரும்பினான் பாரி.
அரசாங்கம் புதையலை எடுக்க ஆணை பிறப்பித்தது. மேலும் காவலர்கள் ஊரில் உள்ள அனைவரது வீட்டிலும் சோதனை செய்து திருடி வைத்திருக்கும் தங்கங்களை பறிமுதல் செய்தனர். புதையலை எடுத்த அரசாங்கம் அதன் மதிப்பை கணக்கிட்டது. அவைகளின் மதிப்பு இருபது லட்சம் கோடிகள் என்று செய்தித்தாள்களில் படித்தான் பாரி.
தற்போது……
பாரி, மிகப்பெரிய தொழிலதிபர். இப்போது சென்னையில் இருக்கிறான். உலகில் எல்லா இடங்களிலும் அவனுக்கு சொத்துகள் இருக்கின்றன.
எப்படி இவ்வளவு சொத்துக்களுக்கு அதிபதியானான்?
 
அவன் படித்து முடித்ததும் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. நன்றாக வேலை பார்த்து வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று பொருள் ஈட்டினான். அதை வைத்து தொழில் தொடங்கினான். இப்போது அவன் பெரிய தொழிலதிபர். – இது மக்கள் கூறுவது.
ஆனால், உண்மை – அவன் அன்று இருளர் கல்லுக்கு சென்று வீட்டிற்கு திரும்பும்போது பண்ணையார் வீட்டில் இருந்த மூட்டைகளில் இரு தங்க மூட்டைகளை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துவிட்டான். பிரச்சினைகள் ஓய்ந்த பிறகு தன் வீட்டிற்கு எடுத்து வந்துவிட்டான். ஆனால், அதை என்ன செய்வது? பல வருடங்கள் காத்திருந்தான். தொழிலில் ஓரளவு வெற்றிகண்ட பிறகு இந்த தங்கங்களை வெளிநாட்டில் விற்று பெரிய பணக்காரனாக மாறிவிட்டான். இவை அனைத்திற்கும் அவனது பெற்றோர்களும் உடந்தை.
இப்போது அவன் தன் பெற்றோர்கள், தன் மனைவி மற்றும் இரு பிள்ளைகளுடன் வாழ்கிறான். ஆனால், சந்தோஷமாக இல்லை. அன்று அவன் பேய்க்கு பயப்படவில்லை. ஆனால், இன்று ஒரு பேய் அவனை பிடித்துக்கொண்டது. அதுதான் பணப்பேய். அதனால் அவனுக்கு நிம்மதியான தூக்கம் இல்லை. அளவுக்கு அதிகமாக பணத்தாசை பிடித்ததால் பல எதிரிகளை சம்பாதித்துவிட்டான். அதனால் அவனது உயிருக்கு உத்திரவாதம் இல்லை.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
இராஜராஜேஸ்வரி
மே 18, 2013 7:26 காலை

பணப்பேய் ..!

திண்டுக்கல் தனபாலன்

எப்படி இருக்கும் சந்தோசம்…! என்றும் அழியா பேராசைப் பேயும் கூடவே இருந்தால்…!

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.