இப்படியும் சில பெற்றோர்கள்

பெற்றோர்கள் நம்மை பாராட்டி, சீராட்டி வளர்க்கின்றனர். தங்களுக்கு உணவு இல்லையென்றாலும் இருக்கும் சோற்றை பிள்ளைகளுக்கு பகிர்ந்து கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடும் அழகை பார்த்து ரசிக்கும் பெற்றோர்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் கொஞ்சம் கூட பிள்ளைப் பாசம் இல்லாத பிள்ளைகளை ஏதோ கடமைக்கு வளர்க்கும் பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்களை அடிக்கடி நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அவர்களைப் பார்க்கும்போது விலங்குகளைப் பார்ப்பதுபோல் இருக்கும். விலங்குகளுக்கு இருக்கும் பாசம் கூட இவர்களுக்கு இல்லையே என்றுகூட தோன்றும். அவர்களைப் பற்றிதான் இந்த பதிவு. என் கிராமத்தில் உள்ள இப்படிப்பட்ட 5 பெற்றோர்களைப் பற்றி குறிப்பிடுகிறேன்.

பெற்றோர் 1

இவர் மிகவும் கஞ்ச தகப்பன். நிறைய சொத்து சேர்த்துவைத்திருக்கிறார். ஆனால், செலவு செய்யமாட்டார். எப்படியென்றால், பிள்ளைகள் காசு கேட்டால் ஏன், எதற்கு என்று கேள்விகேட்டே கொள்ளுவர். ஒரு மிட்டாய் வாங்கவேண்டும் என்று கேட்டால் கூட இவர் கேட்கும் கேள்வியில் பிள்ளைகள் வேண்டாம் என்றே சொல்லிவிடும்.

ஒருநாள், அவரது 10 வயது மகள் பத்து ரூபாய் கேட்டாள். எதற்கு என்று கேட்டதற்கு பள்ளியில் மாறுவேடப்போட்டி நடப்பதாகவும், அதற்குத் தேவையான சில பொருட்கள் வாங்கவேண்டும் எனவும் கூறினாள். ஆனால் அந்த பத்து கொடுப்பதற்குள் இருபது கேள்விகளைக் கேட்டுவிட்டு கடைசியில் “இம்… நான் படிக்கும்போதெல்லாம் பத்து பைசா செலவில்லை.” என்று சொல்லிக்கொண்டே கொடுத்தார்.

குழந்தைகளின் மனதைப் புண்படுத்தி சொத்து சேர்த்துவைத்து என்ன புண்ணியம்? சரி, எப்படியாக இருந்தாலும் பிள்ளைகளுக்குத்தான் சொத்து சேர்த்துவைக்கிறார். பரவாயில்லை.

பெற்றோர் 2

மேலுள்ளவராவது வார்த்தையால் பிள்ளைகளை புண்படுத்துகிறார். ஆனால் இந்த தகப்பன் தனது மகனை சிறுபிள்ளையென்றுகூட பாராமல் மிருகத்தனமாக அடித்துக் கொண்டிருந்தார். தூக்கிப்போட்டு பந்தாடிக்கொண்டிருந்தார். அவன் வலியில் கதறிக்கொண்டிருந்தான். ஊர்மக்கள் அவரை தடுத்து நிறுத்தி காரணம் கேட்டதற்கு தன் மகன் தனக்குத் தெரியாமல் ஒரு ரூபாய் திருடுவிட்டதாக கூறினார்.

என்னக் கொடும இது? இப்படியும் ஒரு மனிதனா?

பெற்றோர்(கள்) 3

இந்த பெற்றோர்கள் கூலிக்காரர்கள்தான். இருந்தாலும் தேவையான அளவு வருமானம் ஈட்டுகிறார்கள். இப்போது தன் மகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டார்கள். ஒன்பதாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த நன்றாக படிக்கும் அந்த பெண்ணை படிப்பைவிட்டு நிறுத்திவிட்டார்கள். ஏனென்றால் அவர்கள் இருவரும் நாள் முழுக்க வேலை செய்யச் சென்றுவிடுவதால் சமைக்க மற்றும் வீட்டு வேலைகளைப் பார்க்க உதவியாக இருக்க அவளின் வாழ்க்கையை பாழாக்கிக்கொண்டிருக்கிறார்கள். பிள்ளைகள் என்ன பெற்றோர்களுக்கு அடிமையா? தங்கள் வேலைகளுக்காக பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் இப்படிப்பட்ட பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

பெற்றோர்(கள்) 4

இவர்கள் பிள்ளைகளை எதற்காக பெற்றார்களென்றே தெரியவில்லை. என்நேரம் பார்த்தாலும் சொத்து சேர்த்துவைப்பதைப் பற்றிய எண்ணம் மட்டுமே இவர்களுக்கு இருக்கிறது. பிள்ளைகளின் நலனில் சிறிதுகூட அக்கறையில்லை. இவர்கள் கிறிஸ்துவர்கள். பிள்ளைகள் பட்டப்படிப்பு படிக்கவைத்தால் நிறைய செலவாகும் என்பதால் தங்கள் மூன்று மகன்களையும் பாதிரியாராக்க குரு மடத்தில் சேர்த்துவிட்டுவிட்டார்கள். ஏனெனில் அங்கு அனைத்தும் இலவசம்.

ஆனால் பாதிரியாராக திருமணம் செய்துகொள்ளக்கூடாது. குடும்பத்தின்மீது அதிக பற்று இருக்கக்கூடாது. கிட்டத்தட்ட குடும்பத்தைவிட்டு பிரிந்த நிலைதான். மகன்களை பெற்று, படிக்கவைத்து, திருமணம் செய்து அவர்களின் பேரக்குழந்தைகளைக் கொஞ்ச சொத்து சேர்த்துவைத்தால் பரவாயில்லை. ஆனால், பிள்ளைகளை துறவியாக்கிவிட்டு யாருக்காகத்தான் இவர்கள் சொத்து சேர்த்துவைக்கிறார்களோ என்பதுதான் விளங்கவில்லை. மேலும் அவர்களது மகன்களுக்கு துறவிகளாவதில் விருப்பம் இல்லை. பெற்றோர்களின் வற்புறுத்துதலுக்காகவே அவர்கள் சம்மதித்துள்ளனர். இப்படி விருப்பம் இல்லாதவர்களை துறவிகளாகச்சொன்னால் போலி சாமியார்களாத்தான் மாறுவார்கள்.

பெற்றோர் 5

இவர் தாயார். தன் மகன் மீது சிறிதுகூட பாசம் இல்லை. கணவர் கஷ்டப்பட்டு உழைக்கிறார். ஆனால் இவர் வீட்டில் சும்மா உட்கார்ந்துகொண்டு தொலைக்காட்சியில் நெடுந்தொடர்களைப் பார்த்துக்கொண்டிருப்பார். தன் ஒரே ஒரு மகனைக் கூட கவனிப்பதில்லை. எனவே அந்த சிறுவன் எங்காவது விளையாடிக்கொண்டிருப்பான்.

ஒருநாள் கணவன் வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்போது தன் மகன் சாலையோரமாக விளையாடிக்கொண்டிருப்பதை பார்க்கிறார். வாகனங்கள் வந்து போகும் சாலையில் விளையாடினால் விபத்து நேரிடும் என்பதால் அவனை வீட்டிற்கு அழைத்து வந்து நாடகம் பார்த்துக் கொண்டிருக்கும் தன் மனைவியை சாடினார்.

“அடியே! ஒனக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்குதா? பையன் ரோட்டுல விளையாடுறான். ஏதாவது விபத்து ஏற்பட்டு பையனுக்கு ஏதாவது ஆச்சின்னா என்ன பண்றது?” என்று அவர் மனைவியை திட்டினார்.

அதற்கு அவர் மனைவி “அப்படி ஏதாவது ஆச்சின்னா விபத்து ஏற்படுத்தினவனை சும்மா விட்டிடுவேனா? நஷ்டயீடு வாங்கிவிடமாட்டேன்?” என்று கூறினார்.

இது அவரை மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இப்படி தன் பிள்ளையையே பாரமாக நினைக்கும் மற்றும் பிள்ளை செத்தால் கூட கவலைப்படாத ஒரு தாயா என்று அவர் ஊர் முழுக்க புலம்பிக்கொண்டிருக்கிறார்.

இப்படிப்பட்ட பெற்றோர்கள் பலர் நம் நாட்டில் உள்ளனர். இது தவறு. பிள்ளைகள் பெற்றோர்களுக்கு கிடைத்த செல்வங்கள். அவர்களை நல்லவர்களாக வளர்ப்பது, அவர்களுக்கு அறிவுரை கூறுவது, அவர்களுடைய நண்பர்களாக இருப்பது பெற்றோர்களின் கடமை. எனவே பெற்றோர்கள் தங்கள் கடமையை செய்தால் பிள்ளைகள் தங்கள் கடமையை உணர்வார்கள். நாட்டிற்கும் தங்கள் பங்களிப்பைத் தருவார்கள்.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
திண்டுக்கல் தனபாலன்
மார்ச் 29, 2013 11:55 காலை

இன்றைக்கு இன்னும்… தனது கடமை என்னவென்று தெரியாத… இதை விட மோசமான பெற்றோர்கள் உண்டு… …ம்… காலக் கொடுமை…

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.