உலகம் எப்படி இப்படி?

குறிப்பு: இது ஒரு கற்பனைக் கதை. யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டது அல்ல.

ஒரு நாள் கடவுளுக்கு தான் தனியாக இருப்பதைப் போன்று ஒரு உணர்வு வந்தது. அதுவும் உண்மைதான். ஏனெனில் இந்த அண்ட சராசரத்தில் அவர் மட்டுமே தனியாக இருந்தார். எனவே அவர் தன்னைப் போன்று ஒரு படைப்பை உருவாக்க நினைத்தார். அந்த படைப்பிற்கு மனிதப்பிறவி என்று பெயரும் வைத்தார். அவர்களைப் படைத்து அவர்களுக்கு பூமியைத் தாரைவார்த்து கொடுக்கவும் எண்ணினார்.

எனவே பூமிக்கு வந்து படைக்க ஆரம்பித்தார். முதலில் பூமியை ஒரு உயிர்கோளமாக ஆக்கினார். அதாவது விலங்குகள், தாவரங்கள் மற்றும் அவைகள் வளர்வதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கினார். பின், தன்னைப் போன்று உருவத்தை களிமண்ணில் செய்தார். அதன் பிறகு அவைகளை சூளையில் வைத்து வேகவைத்தார். வேலை செய்த சோர்வில் கொஞ்ச நேரம் தூங்கிவிட்டார். அதனால் அவர் எழுந்தபோது சூளையில் இருந்த மனிதர்கள் தீஞ்சிபோய் இருந்தார்கள். அதனால் அவர்களை விட்டுவிட்டு வேறு மனிதர்களை செய்யலாம் என்று இருந்தார். இருந்தாலும் மனசு கேட்கவில்லை. அவர்களுக்கு உயிர் கொடுத்து ஆப்ரிக்கா கண்டத்தில் விட்டுவிட்டார். அவர்கள் அங்கு வாழ ஆரம்பித்தார்கள்.

அடுத்தமுறையும் அதேபோன்று மனிதர்களைச் செய்தார். மனிதர்களைப் பதமாக வேக வைக்கவேண்டும் என்பதற்காக மிகவும் உன்னிப்பாக இருந்தார். அதனால் ஒரு ஆர்வக்கோளாரில் முன்னமே எடுத்துவிட்டார். எனவே மனிதர்கள் சரியாக வேகவில்லை. வெள்ளை வெளேரென்று இருந்தார்கள். அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள், கைவிடுவதற்கு? எனவே, அவர்களுக்கும் உயிர் கொடுத்து ஐரோப்பா கண்டத்தில் விட்டுவிட்டார்.

பின் அடுத்தமுறை மனிதர்களை செய்யும்பொது மிகுந்த கவனமாக இருந்தார். எனவே சரியான பதத்தில் மனிதர்கள் வெந்தவுடன் அவர்களை சூளையிலிருந்து எடுத்தார். அந்த மனிதர்களைப் பார்த்து அவருக்கு ஆச்சர்யம் தாங்கமுடியவில்லை. ஏனெனில் அவர் எப்படி நினைத்தாரோ அப்படியே மனிதர்கள் இருந்தனர். அவர்களுக்கு உயிர் கொடுத்து இந்தியாவில் விட்டார். இப்படியாக மனிதர்கள் உலகில் பல பகுதிகளில் வாழ ஆரம்பித்தனர்.

மனிதர்கள் வீடுகளிலும் விலங்குகள் காடுகளிலும் வாழ்ந்துகொண்டிருந்தனர். உலகில் உள்ள ஒவ்வொன்றுக்கும், உலகின் நடக்கும் ஒவ்வொன்றுக்கும் ஒரு வரலாற்றுப் பின்னணி இருக்கிறது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஒருநாள் கடவுள் விலங்குகளை மேலும் அழகாக்க அவைகளுக்கு வால் கொடுப்பதாக அறிவித்தார். அவைகளுக்குத் தேவையான வால் மொத்தத்தையும் செய்து தனது ஊழியர்களிடம் மிருகங்களுக்கு பகிர்ந்து கொடுக்கும் பணியை வழங்கினார். அவர்கள் செய்த ஊழலால் ஒருசில மிருகங்களுக்கு நீண்ட வால் கிடைத்தது. கரடி சோம்பேறி, தூங்கிக்கொண்டிருந்தது. எனவே இந்த செய்தியை தாமதமாகத்தான் கேள்விப்பட்டது. எனவே அது தனக்குத் தேவையான வாலை வாங்கச் சென்றபோது கடவுள் கொடுத்த வாலில் ஒரு சிறு பகுதியையே அவரின் ஊழியர்கள் வைத்திருந்தார்கள். அதனால் கரடிக்கு கிடைத்தது மொட்டைவால்தான். இப்படியாக மிருகங்களும் மனிதர்களும் தனித்தனியே வாழ்ந்துகொண்டிருந்தார்கள்.

ஒருநாள் மனிதர்கள் கடவுளை வந்து சந்தித்தார்கள். அவர்கள் தாங்கள் வீட்டுவேலைகள் மற்றும் விவசாயம் செய்ய சில மிருகங்களை உதவிக்கு அனுப்புமாறு கடவுளிடம் வேண்டிக்கொண்டனர். அவரும் அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். மிருகங்களை வரவைத்து எது எதற்கு மனிதர்களிடம் செல்வதற்கு விருப்பம் இருக்கிறது என்று கேட்டார். உடனே நாய், பூனை, ஆடு, மாடு, குதிரை, கழுதை போன்ற மிருகங்கள் சம்மதம் தெரிவித்தன. இப்படியாக அவை மனிதர்களுக்கு செல்லப்பிராணிகள் ஆயின.

ஒருநாள் எறும்புக் கூட்டங்கள் மிகுந்த கோபத்துடன் கடவுளை சந்திக்க வந்தன. தங்கள் ஆதங்கத்தை உரையாடலில் வெளிப்படுத்தின.

“கடவுளே! இந்த மனிதர்கள் எப்போது பார்த்தாலும் எங்கள் வழியில் குறுக்கே வருகிறார்கள். எங்கள் இனத்தில் பலரை மிதித்தே கொன்றுவிடுகிறார்கள். இப்படியே போனால் எங்கள் இனமே அழிந்துவிடும். எங்களுக்கு ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள்.”

“சொல்லுங்கள். நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்?”

“எங்களுக்கு ஒரு வரம் கொடுக்கவேண்டும்.”

“என்ன வரம்?”

“நாங்கள் மனிதர்களைக் கடித்தால் சாகவேண்டும்.”

“சரி அப்படியே ஆகட்டும்.”

வரத்தை வாங்கிய சந்தோசத்தில் சென்ற எறும்புகள் பூமிக்கு சென்று மனிதர்களைக் கடித்து சோதனை செய்து பார்த்தன. ஆனால், மனிதர்கள் அவைகளைத் தங்கள் கைகளால் தேய்த்து சாகடித்தனர். பெற்ற வரம் பலிக்கவில்லையென்று கடவுளிடம் எறும்புகள் முறையிட்டன. ஆனால் கடவுள் பின்வருமாறு கூறினார்.

“நீங்கள் கேட்டது ‘நாங்கள் மனிதர்களைக் கடித்தால் சாகவேண்டும்’ என்பதுதானே? அதுதான் நடந்துள்ளது.” என்று கூறினார்.

அப்போதுதான் எறும்புகள் தாங்கள் செய்த தவற்றை உணர்ந்தன. கடவுளிடம் வரத்தை மாற்றிக்கொடுக்க கேட்டன. ஆனால் அவர் மறுத்துவிட்டார். அதனால் இன்றும் எறும்புகள் மனிதர்களைக் கடிப்பதும், அவர்கள் அவைகளைக் கொல்வதுமாக இருக்கிறது.

ஒரு ஊரில் பனிக்கட்டி, தக்காளி மற்றும் வெங்காயம் ஆகிய மூவரும் நண்பர்களாய் இருந்தார்கள். ஒருநாள் அவர்கள் கடற்கரைக்கு சுற்றிப் பார்க்கச் சென்றார்கள். வெயில் தாங்க முடியாமல் பனிக்கட்டி கரைந்துவிட்டது. அதனைப் பார்த்த தக்காளியும் வெங்காயமும் வேதனைப்பட்டு அழுதன. கொஞ்சநேரம் கழித்து தங்கள் மனதைத் தேற்றிக்கொண்டு தங்கள் வீடுகளுக்கு செல்ல முற்பட்டன. ஆனால், போகும் வழியில் ஒருவன் காலில் மிதிப்பட்டு தக்காளி இறந்தது. வெங்காயம் மிகுந்த வருத்தத்தில் அழத்தொடங்கியது. மணிக்கணக்கில் அழுதது. அது அழுவதைப் பார்த்து வருந்திய கடவுள் அதன் முன் தோன்றி காரணத்தைக் கேட்டார்.

“கடவுளே! பனிக்கட்டி இறந்தபோது நானும் தக்காளியும் அழுதோம். தக்காளி இறந்தபோது நான் அழுதேன். ஆனால், நான் இறந்தால் அழ யாருமே இல்லையே! அதை நினைத்துதான் அழுதுகொண்டிருக்கிறேன்.” என்றது வெங்காயம்.

“கவலைப்படாதே. நீ இறந்தால் உன்னைச் சுற்றி உள்ளவர்கள் அனைவரும் அழுவார்கள்.” என்று கடவுள் வரம் கொடுத்தார். அதனால்தான் வெங்காயத்தை உரிக்கும்போது மனிதர்களின் கண்களில் கண்ணீர் வருகிறது.

இப்படியாக உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் வரத்தை வாரி வழங்கியக் கடவுள் அந்த வரங்களினால் ஏற்பட்ட விளைவுகளையும் பார்த்து மிகுந்த எரிச்சலுடன் இருந்தார். அவ்வமையம், பேன் கடவுளிடம் வந்தது.

“கடவுளே எனக்கு போக்கிடமே இல்லை. எனக்கு வாழ ஒரு இடம் கொடுங்கள்” என்று கேட்டது.

எரிச்சலுற்ற கடவுள் “போய் மயிரில் புகுந்துகொள்.” என்று கூறினார். எனவே அது மனிதர்களின் தலை மயிற்றில் புகுந்துகொண்டது.

உலகத்தில் எப்படி நல்லவர்கள் கெட்டவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கும் ஒரு வரலாறு இருக்கிறது. துவக்கத்தில் அனைவரும் நல்லவர்களாகவே இருந்தார்கள். கடவுளுக்கு மிகவும் சலிப்பு ஏற்பட்டது. அதனால் அவர் நன்மை தீமை எனும் இரட்டைப் பிறவிகளைப் படைத்தார். அவர்கள் இருவரும் அச்சு அசல் ஒரே மாதிரி இருந்தனர். அவர்களுக்குள் உள்ள வித்தியாசமே அவர்களின் உடைகளின் நிறம்தான்.

கடவுள் நன்மை தீமை இரண்டையும் உலகிற்கு அனுப்பி தங்களுக்கென ஒரு கூட்டத்தை சேர்க்க உத்தரவிட்டார். நன்மைப் பேச்சைக் கேட்டவர்கள் நல்லவர்கள் எனப்பட்டனர், தீமைப் பேச்சைக் கேட்டவர்கள் கெட்டவர்கள் என அழைக்கப்பட்டனர். கடவுள் உலகத்தில் நல்லவர்களாக வாழ்ந்தவர்களுக்கென சொர்க்கம் என்று ஒன்றை உருவாக்கி அவர்கள் இறந்தவுடன் அங்கு அவர்களுக்கு ஒரு வீடு கொடுத்தார். கெட்டவர்களுக்கு நரகம் என்று ஒன்றை உருவாக்கி அவர்கள் இறந்தபிறகு அங்கு இடம் கொடுத்து அவர்களுக்கு தண்டனைக் கொடுத்தார். இதுதான் இன்றும் நடக்கிறது.

ஆனால், இடையில் ஒரு குழப்பம் நடந்துவிட்டது. ஒருநாள் நன்மை தீமை இரண்டும் குளத்தில் குளிக்கச் சென்றன. தங்களது ஆடைகளை கழற்றி கரையில் வைத்துவிட்டு குளித்துக் கொண்டிருந்தன. அப்போது தீமை முன்னதாகவே குளித்து முடித்துவிட்டு கரைக்கு வந்து நன்மையினுடைய ஆடையை போட்டுக்கொண்டது. நன்மை எவ்வளவோ கெஞ்சிக் கேட்டும் நன்மையினுடைய ஆடையை திருப்பித் தரமுடியாது என தீமை மறுத்துவிட்டது. வேறு வழியில்லாத நன்மை தீமையினுடைய ஆடையை போட்டுக் கொண்டது. இன்றுவரை தீமை நன்மைக்கு உடையைத் திருப்பித் தரவேயில்லை.

இந்த உடை மாறிய நிகழ்வு மனிதர்களின் குணங்களை மாற்றக்கூடியதாக அமைந்துவிட்டது. ஏனெனில் நல்லவர்கள் தீமையை நன்மை எனக் கருதி அது கூறியபடியே கெட்டது செய்ய ஆரம்பித்தார்கள். கெட்டவர்கள் நன்மையை தீமை எனக் கருதி நல்லது செய்ய ஆரம்பித்தார்கள். இதனால்தான் இன்று மக்கள் இரு முகங்களோடு இருக்கிறார்கள். நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்று கண்டே பிடிக்கமுடியவில்லை. ஏனெனில் மக்கள் நன்மை தீமையை பிரித்தறிய முடியாமல் தவிக்கிறார்கள்.

தனியாக இருந்த கடவுள் இவ்வளவு மனிதர்கள் தனக்குக் கீழ் இருப்பதால் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறார். மனிதர்களை அவர் போக்கில் விட்டுவிட்டார். அவர்களை நிர்வகிக்கும் பொறுப்பை தனது ஊழியர்களிடமும் அவர்களுக்குத் தலைமைப் பொறுப்பை நன்மை தீமையிடமும் கொடுத்துவிட்டார். அதனால் அவருக்கு வேலைச் சுமை குறைவு.

எனவே அவருக்கு பொழுது போவது கொஞ்சம் கஷ்டம்தான். அதனால்தான் அவர் இரண்டு வேலைகளை செய்கிறார். ஒன்று நெடுந்தொடர் பார்ப்பது, மற்றொன்று விளையாடுவது. நெடுந்தொடர் பல உள்ளன. அவைகளின் கதாநாயகர்கள் கடவுளின் உண்மையான பக்தர்கள் மற்றும் மிக நல்ல குணம் கொண்டவர்கள். நன்மை தீமைதான் தொடர்களின் இயக்குனர்கள். ஒவ்வொரு குறிப்பிட்ட நேரத்திற்கும் கடவுள் ஒரு குடும்பத்தில் நடக்கும் பிரச்சினையை நெடுந்தொடராக பார்த்துக் கொண்டிருப்பார்.

நெடுந்தொடரில் என்ன நடக்கும்? நல்லவர்கள் எப்போதும் கஷ்டப்பட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் வீட்டில் எப்போதும் ஒரே அழுகைதான். அவைகளைப் பார்த்து கடவுளும் அழுதுகொண்டே இருப்பார். நன்மை தீமை இரண்டும் கடவுளை திருப்திப்படுத்த தினமும் பல சுவாரசியமான திருப்பங்களுடன் தொடர்களை இயக்குகின்றன. எவ்வளவு பெரிய நெடுந்தொடராக இருப்பினும் அதன் கடைசி கட்டம் (climax) ஒரே நாளில் முடிந்துவிடும். சில நேரங்களில் ஜவ்வு போன்று இழுத்துச் செல்லும் தொடர்களை முடிக்க கடவுளே களத்தில் இறங்குவார். அந்த சமயங்களில் அந்த தொடர்களின் climax சோகமாக முடிந்துவிடும்.

Gods Watching Serials

அடுத்து கடவுள் தனது பொழுதுபோக்கிற்கு செய்வது விளையாடுவது. அவர் விளையாடுவது நல்லவர்களின் வாழ்கையில். குறிப்பிட்ட சில நல்லவர்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு கெட்டவர்கள் மூலம் பல பிரச்சினைகள் கொடுப்பதுதான் அந்த விளையாட்டு. பலர் இவ்வாறு கேட்கலாம், “ஏன் நல்லதையே செய்பவர்களுக்கு பிரச்சினைகளும், கெட்டதையை செய்பவர்களுக்கு செல்வமும் பேரும் புகழும் வருகின்றன?” என்று. அதற்கு காரணம் கடவுள் விளையாடும் இந்த விளையாட்டுதான்.

விளையாட்டு வினையாகத்தான் முடியும். அதனால், செய்யாத தவறுகளுக்கு நல்லவர்கள் தண்டனை அனுபவிப்பார்கள், செய்யாத நல்லவைகளுக்கான பலனை கெட்டவர்கள் அனுபவிப்பார்கள். உதாரணத்திற்கு ஒருவன் மிக நல்லவன். ஆனால், கடவுள் விளையாடிய விளையாட்டால் அவன் இறந்து அவனது குடும்பம் அனாதையாக ஆகிறது என்று வைத்துக் கொள்வோம். இதைப் போன்று ஒரு சூழ்நிலை வரும்போது கடவுள் தான் செய்த தவற்றை எண்ணி மிகவும் வருத்தப்படுவார். அதனால் அதற்கு பிராயச்சித்தமாக, அவனது பிள்ளைகளுக்கு அவர்கள் கெட்டவர்களாகவே இருந்தாலும் தனது அருளை வாரி வாரி வழங்குவார். அதேபோன்று அவர் விளையாடும் விளையாட்டில் சில கெட்டவர்களை தண்டிக்க முடியாமல் போய்விடும். அதனால் அவர்களின் வம்சத்தை தண்டிப்பர். நல்லவர்கள் மிகுந்த கஷ்டப்படும்போது மற்றவர்கள் அவரைப் பார்த்து முற்பிறவிப் பயனால் கஷ்டப்படுகிறார்கள் என்று கூறுவார்கள்.

நெடுந்தொடர், விளையாட்டு இவைகளைத் தவிர்த்து கடவுள் எப்போதாவது ஆடிக்கொருமுறை அம்மாவாசைக்கு ஒருமுறை நிர்வாகத்தையும் கவனிப்பார். அப்போது மக்களுக்கு பல நலத்திட்டங்களை வகுத்து தனது ஊழியர்களிடம் செய்யச் சொல்லுவார். ஆனால் அந்த ஊழியர்களுக்கிடையில் ஊழல் அரசியல் நடக்கிறது. அதனால் அவர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களுக்கு அதிக நலதிட்டங்களைச் செய்கிறார்கள். இது போதாதென்று தீமையின் குறுக்கீடு வேறு. அது கெட்டவர்களுக்கு நிறைய நலத்திட்டங்களைப் பெற்றுக் கொடுக்கிறது. இதனால் நல்லவர்கள் பலருக்கு கடவுளின் நலத்திட்டங்கள் சென்று சேருவதேயில்லை. அப்படியே தப்பித் தவறி சென்றாலும் மனிதர்கள் சிலர் போட்டிப் பொறாமையினால் அதனைத் தட்டிப் பறித்து விடுகிறார்கள். இந்த கதைதான் உலகம் இப்படி இருப்பதற்கான காரணம்.

 

எது எப்படி இருந்தாலும் எல்லார் வாழ்விலும் ஒளி வீசவேண்டும் என்று விரும்பி, இறைவனை வேண்டி எனது தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
Yarlpavanan Kasirajalingam
அக்டோபர் 22, 2014 12:18 காலை

சிறந்த பகிர்வு
தங்களுக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

Yarlpavanan Kasirajalingam
அக்டோபர் 22, 2014 12:19 காலை

சிறந்த பகிர்வு
தங்களுக்கும்
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
http://yppubs.blogspot.com/2014/10/blog-post_21.html

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.