அது என்ன வீங்கி சாவது?

Spread the love

குறிப்பு: நான் கேள்விப்பட்ட சில உண்மைகளைத் தொகுத்து ஒரு கதை போன்று எழுதுகிறேன். மேலும், இந்த கதையில் தென்னாற்காடு மாவட்ட வட்டார மொழி பயன்படுத்தப்பட்டுள்ளது. புரியாதவர்கள் பின்னூட்டமிடவும்.

 

சூர்யா தன் நண்பன் அரசு வை வாயில் நீர் சொட்டச் சொட்டப் பார்த்துக்கொண்டிருந்தான். ஏனெனில், அவன் ஏதோ நொறுக்குத்தீணி சாப்பிட்டுக்கொண்டிருந்தான். ஆனால், அவனுக்கு சூர்யாவிடம் பகிர்ந்து கொடுக்கவேண்டும் என்ற எண்ணம் வரவில்லை.

“டேய்! எனக்கும் கொஞ்சபோரம் குடுடா!” என்று அரசுவிடம் கேட்டான் சூர்யா.

“அதெல்லாம் முடியாதுடா.” என்று கூறிய அரசு, தன் சுட்டு விரலை கொக்கி போன்று மடக்கி, அதனை மேலும் கீழும் ஆட்டி கேலி செய்துகொண்டிருந்தான் (நாப்பு காட்டுதல் என்று அதனைக் கூறுவார்கள்).

eating

சூர்யா ஒரு ஏக்கத்துடன், அவன் சாப்பிடுவதை வைத்தக் கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான்.

இந்த நேரத்தில்தான் சூர்யாவின் அம்மா செல்வி அங்கு வந்தார். நடந்ததைப் பார்த்து கோபமுற்று தன் மகனிடம், “டேய்! இட்ரம் புடிச்சவன! உனக்கு என்னடா இல்ல. அந்த கேதேரி திங்கறத வெறிக்க வெறிக்கப் பாத்திட்டிருக்க? என்னுட்ட கேட்டா நான் வாங்கி தரமாட்டனா?” என்று அவனை அதட்டினார்.

பின், அரசுவைப் பார்த்து, “என்னடா! பைய்ச்சி காட்டிட்டு திங்கற? அவன் என்ன வீங்கியா செத்துடுவான்? போடா. ஒங்க வீட்டுப்புறம் போயி திண்ணு. எப்ப பாத்தாலும் என் பையங்கிட்ட நாப்பு காட்டறதே பொழப்பா போச்சி.” என்று அவனை விரட்டிவிட்டார்.

அதன்பின் தன் மகனிடம், “டேய்! துப்பு கெட்டத! உனக்காகத்தான கஷ்ட்டப்படறன். ஒன்னால அவமானமா இருக்குடா எனக்கு. வாடா கடைக்குப் போலாம். என்ன வேணுமோ வாங்கிக்க.” என்று அழைத்துச் சென்றார்.

சந்தோசத்தில் சூர்யா செல்வியுடன் சென்றான். போகும்போது தன் மனதில் உள்ள சந்தேகத்தைக் கேட்டான்.

“அம்மா, அது என்னம்மா வீங்கி சாவது?”

“அது ஒன்னும் இல்லடா. சிலருக்கு தாங்க நெனச்சது கெடைக்கலனா, ஏக்கத்துல உடம்பு வீங்கியே செத்திடுவாங்க.”

“ஏக்கத்துலேயே சாவாங்களா?”

“ஆமாங் கண்ணு.”

“அந்த மாதிரி யாரியாவது நீ பாத்திருக்கியா?”

“செத்தத பாத்ததில்ல. ஆனா, நோவு வந்தவங்களப் பாத்திருக்கன்.”

“ஐ! அப்ப அந்த கதய சொல்லு. சொல்லு! சொல்லு!”

“சொல்றன்! சொல்றன்!” என்று தன் மகனுக்கு உண்மைக் கதைகளைக் கூற ஆரம்பித்தார்.

“நம்ம, செல்லாயி பாட்டி இல்ல?”

“ஆமாம்.”

“அவங்களுக்கு ஒருநாளு திடீர்னு ஒடம்பு முழுசும் வீங்கிப்போயி படுத்தப் படுக்கையாயிட்டாங்க. வைத்தியர் வந்து பத்தாரு. ஆனா, என்ன பிரச்சினையின்னு கண்டுபிடிக்க முடியில.”

“அப்புறம் என்ன ஆச்சிம்மா?”

“அப்புறம் அவர், ‘இது, உடம்பு பிரச்சினயில்ல. மனசு பிரச்சன. பாட்டிம்மா! ஏதாவது ஏக்கம் வச்சிருக்கியா?’ அப்படீன்னு கேட்டாரு. அதுக்கு அந்த பாட்டி, ‘அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா.’ இன்னாங்க. வைத்தியரு நல்லா யோசிச்சி சொல்லச் சொன்னாரு. ‘ஏக்கம்லா ஒன்னும் இல்லப்பா. மல்லாட்டச் சட்னி சாப்பிடணும்போல இருந்துச்சி. அவ்வளவுதான்.’ அப்படீன்னு அவங்க சொன்னத வச்சி, வைத்தியர் அவங்க புள்ளைய திட்டனாரு. ‘ஏம்பா! கல்யாண பண்ணின ஒடனே ஒன் அம்மாவ மறந்திட்டியே. அவங்க வீங்கியே செத்திடுவாங்க போலருக்கே! ம்.. ம்… சீக்கிரம் அவங்கள கவனியுங்க.’”

“அப்புறம், என்னம்மா பண்ணினாங்க?”

“அப்புறம், இட்லி வச்சி, மல்லாட்ட சட்னி அரச்சி, வடவம் போட்டு தாளிச்சி அந்த பாட்டிக்கு சாப்பிடக் கொடுத்தாங்க. அன்னைக்கு ராத்திரியே அவங்க ஒடம்பு வீக்கம் சரியாகி அவங்க நல்லாயிட்டாங்க.”

“மெய்யாலுமா? நாம மனசுல நெனிக்கிறதுக்கு அவ்வளவு சக்தியாமா!”

“ஆமாங் கண்ணு. நம்ம மனசு நல்லாயிருந்தாதான் உடம்பும் நல்லா இருக்கும். இதுக்கே இப்படி வாயப் பொலந்துக்கிட்டுப் பாக்கிறியே. என் அம்மாவுக்கு நடந்தத கேட்டா என்ன சொல்லுவியோ!”

“யாருக்கு, நம்ம பாட்டிக்கா? அம்மா! அம்மா! அதயும் சொல்லும்மா.”

“எங்க அம்மா பன்னண்டாவது கொழந்தய வைத்துல வச்சிருக்கும்போது….”

“ஐய்யையோ! பன்னண்டாவது கொழந்தையா?”

“டேய்! என்ன அதிசயமா பாக்கிற? அப்பெல்லாம் இது சகஜம்.”

“அம்மாடியோ! ஒரு டஜன் கொழந்தைகளா! நீ எத்தனாவது கொழந்தம்மா?”

“நான் ஒன்பதாவது; ஒனக்கு நாலு மாமா, நாலு பெரிம்மா இருங்காங்க.”

“ஒனக்கு அடுத்து இருக்கறவங்க என்னாச்சி? அத சொல்லலியே!”

“எனக்கு அடுத்து பத்தாம் பிறவு ரட்ட கொழந்தைகளாம்.”

“ஐய்யோ!”

“அதுங்க ரெண்டும் ஒரு மாதம் உயிரோட இருந்துசிங்களாம். என்ன நோவுன்னு தெரியல. ஒரு நாள், காலையில தம்பி செத்துட்டுருக்கான். எல்லாம் துக்கம் கொண்டாடி பொதச்சிட்டு வந்து பாத்தா தங்கச்சி பாப்பாவும் செத்திருந்துதான்.”

“ஐயோ! பாவமே! ஏம்மா சின்னம்மாவ காப்பாத்தாம விட்டுட்டாங்க?”

“அப்ப அந்த அளவுக்கு மருத்துவ வசதியும் இல்ல, ஜனங்களுக்கும் அறிவு போதல.”

“சரிம்மா, அப்புறம்?”

“அப்புறம், பன்னண்டாவது கொழந்த ஆறு மாசம் வைத்துல இருந்தப்ப, எங்க அம்மாவுக்கு திடீர்னு காய்ச்சல் வந்து கை காலெல்லாம் வீங்கி போச்சி. நாட்டு வைத்தியர் வந்து தெனமும் மருந்து கொடுத்துட்டு போனாரு. ஆனா, உடல் வீக்கம் கொறயவே இல்லயாம்.”

“அப்புறம் என்னம்மா ஆச்சி?”

“அப்புறம் என்ன, தம்பி செத்து கற்பப்பையோட வெளிய வந்ததுதான் மிச்சம். அதனாலதான் எனக்கு அப்புறம் யாரும் இல்ல.”

“பாட்டிக்கு ஒடம்பு சரியாயிடுச்சாம்மா?”

“இல்லப்பா, அவங்களுக்கு காய்ச்சலும் வீக்கமும் அப்படியேத்தான் இருந்துது.”

“அப்ப, எப்படித்தான் சரி பண்ணாங்க?”

“வைத்தியர் கை விரிச்சிட்டாராம். ஆனா, எங்க அப்பாவ தனியா இட்டுட்டுப் போயி, ‘ஒன் பொண்டாட்டி என்ன ஆசப்படறாளோ, அத வாங்கிக்குடு. கடைசியா ஆசப்பட்டத திண்ணுட்டாவது சாகட்டும்.’ அப்படீன்னு சொல்லிட்டாரு. எங்க அப்பாவுக்கு ரொம்ப கஷ்டம். இருந்தாலும், சோகத்திலேயே எங்க அம்மா கூட பேசிக்கிட்டு இருந்தாரு. அன்னிக்கு சாயங்காலம் அவங்க ரெண்டுபேரும் பேசிட்டு இருந்தாங்க.”

“என்ன, பேசிட்டு இருந்தாங்க?”

“ ‘ஏங்க! அந்த திருவேங்கடம் வீட்ல, ரெண்டு வாரத்துக்கு முன்னாடி, புதுசா கெணத்துல மோட்டார் போட்டத பாக்க போயிருந்தம, ஞாபகம் இருக்குதா?’

‘ஆமாண்டி. இப்ப என்ன அதுக்கு?’

‘அவங்க வீட்டுத் திண்ணையில செவப்பு செவப்பா பழம் இருந்துது பாத்தீங்களா?’

‘ஆமாம், செவப்பு செவப்பா இருந்திச்சி.’

‘அந்த பழம் சாப்பிட்டா தேவலாம்.’

‘சரி, அப்படியா! நான் வாங்கிட்டு வரன்.’

அப்படீன்னு சொன்ன எங்க அப்பா, அந்த பழத்தப் பத்தி அந்த வீட்ல விசாரிச்சாராம். அப்புறம், அது ஆப்பிள் பழம்னு தெரிய வந்துச்சாம். ராவோட ராவா, பத்து கிலோ மீட்டர் நடந்துபோயி வாங்கியாந்தாராம். அத எங்க அம்மா தினமும் ஆச தீர சாப்பிட்டாங்களாம். மூனு நாள்ல அவங்களுக்கு காய்ச்சலும் சரியாயிடுச்சாம், உடம்பு வீக்கமும் மறஞ்சி போயிடுச்சாம்.”

“ரொம்ப ஆச்சர்யமா இருக்கும்மா!.”

“ஆமாம், எல்லாருக்குமே ஆச்சர்யமாதான் இருந்துச்சான். அப்பதான் ஆப்பிள் பழத்து மேல இருந்த ஏக்கந்தான், எங்க அம்மா உடம்பு சரியில்லாம போனதுக்குக் காரணம்னு புரிஞ்சிக்கிட்டாங்களாம்.”

“இப்ப, பாட்டிக்கு எத்தன வயசு?”

“95.”

“சரியான நேரத்துல குடுத்த ஆப்பிள் பழத்தால இன்னைக்கு 95 வயசு வரைக்கும் உயிரோட இருக்கு பாட்டி!”

“ஆமாங் கண்ணு. நம்ம மனசுல எந்த ஏங்கமும், கவலையும் இல்லன்னா, நூறு வயசு வரைக்கும் கூட வாழலாம். அதான் சொல்றன், உனக்கு என்ன ஆசையோ, அத என்கிட்ட கேளு; எப்பாடு பட்டாவது வாங்கி கொடுக்கறன். அத விட்டுட்டு அடுத்தவன பாத்து ஏங்காத.”

“சரிம்மா.”

“சரி, கடையில என்ன வேணுமோ வாங்கிக்க.”

தன் தாய் அவன் ஆசைப்பட்டதை வாங்கித்தருவதாக கூறியதால், கடையில் சூர்யா “அது, இது” என்று பொருட்களைச் சுட்டுக் காட்டிக்கொண்டிருந்தான்.

முற்றும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.


Spread the love

1
Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
0 Comment authors
திண்டுக்கல் தனபாலன் Recent comment authors
  Subscribe  
Notify of
திண்டுக்கல் தனபாலன்
Guest
திண்டுக்கல் தனபாலன்

உண்மை தான்… எந்த ஏக்கமும் கவலையும் இல்லையென்றால் சுகம் தான்… சுபம் தான்… இதற்கு காரணமான ஆசையைக் கடந்தால்…!

அருமையான கதைக்கு வாழ்த்துக்கள்…

Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.