தமிழ் பழமொழிகள் மற்றும் சொல்லாடல்கள் பகுதி–13

பழமொழிகள்

பழமொழிகள் பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12

1. வைக்கப்போரில் ஊசியைத் தேடுவதுபோல.

மிகச்சிறியதான ஊசி வைக்கப்போரில் விழுந்தால் அது எங்கிருக்கிறது என்று கண்டுபிடிப்பது மிகக்கடினம். அதுபோல, இந்தக் காலத்தில் நல்லவர்களைத் தேடுவது மிகக் கடினமாகிவிட்டது.

2. மானம் போனாப் போகுது, என் தொப்ப ரொம்பனா போதும்.

சிலர் சாப்பிடும்போது நாகரீகமாக நடந்துகொள்ள மாட்டார்கள். காணாததைக் கண்டதைப்போன்று தின்பர்கள். வேறுசிலர் ஓசியில் உறவினர் வீட்டில் சாப்பிடுவார்கள். சிலர், அவர்களை யார் என்னத் திட்டினாலும், சாப்பாடுக் கொடுத்தால் சுரணை இல்லாமல் சிரித்துக் கொண்டே சாப்பிடுவார்கள். இப்படிப்பட்டவர்களின் உயரிய கொள்கைதான் இந்த பழமொழி. தனக்கு என்ன அவப்பேர் வந்தாலும் பணம் சம்பாதிப்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்களையும் சாடுகிறது இந்த பழமொழி.

3. வீரியம் பெரிதல்ல; காரியம்தான் பெரிது.

கோபப்படுவதால் மனிதர்கள் பல சந்தோசங்களை இழக்கிறார்கள். கோபப்பட்டு பேசுவதைவிட பொறுமையாக பேசினால் நமக்கு ஒரு காரியம் நிறைவேறுமென்றால், அந்த காரியத்தால் நமக்கு அனுகூலம் என்றால் அந்த இடத்தில் நமது வீரியம் பெரிதல்ல, காரியம்தான் பெரிது.

4. தனக்குத் தனக்குன்னா புடுக்கும் களை வெட்டும்.

கொச்சையான பழமொழியாக இருந்தாலும் முற்றிலும் உண்மையான பழமொழி. எப்பேர்ப்பட்ட சோம்பேறியாக இருந்தாலும் தனக்கு என்று ஒரு பிரச்சனை வரும்போது அவன் தன்னை மறந்து முழுமூச்சாக செயல்பட்டு அந்த பிரச்சினையிலுருந்து வெளிவருவான். அதாவது, தனக்காக ஒருவர் உழைக்கும்போது, அவரின் உடல் உறுப்புகள் அனைத்தும் வேலை செய்யும், அடுத்தவர்களுக்காக ஏதேனும் வேலை செய்தால் அதில் அந்த அளவு ஈடுபாட்டுடன் செய்யமாட்டார் என்பதுதான் இந்த பழமொழியின் அர்த்தம்.

5. ஒப்புக்கு சித்தாத்தா உறவுமுறைக்கு நெய் வார்த்தா.

சித்தாத்தா (சின்ன ஆத்தா/ சின்னாயி / சின்னத்தாயி / சின்னம்மா / சிற்றன்னை / சித்தி) உறவு நெருக்கமான உறவுதான். ஆனால், அவர்கள் உண்மையில் அந்த அளவுக்கு நெருக்கமாக இல்லை. அதனால்தான் மனதார இல்லாமல் ஏதோ ஒப்புக்கு தன் அக்கா பிள்ளைக்கு நெய் வார்க்கிறாள் சித்தாத்தா. அதைப் போன்று ஒப்புக்கு உள்ள சொந்தங்களைக் குறிப்பிட இந்த பழமொழியைப் பயன்படுத்துவார்கள்.

6. யார் ஆற்றுவார்? நாள் ஆற்றும்.

Time is the best healer என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. நமக்கு வாழ்கையில் பிரச்சினைகள் வரும்போது நமக்கு உதவி செய்ய யாரும் இல்லையென்றால் என்ன செய்வது? இதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும். ஏனெனில் நமது பிரச்சினைகள் தீராமலேயே இருந்துவிடாது. உதாரணமாக நமக்குப் பிரியமானவர்கள் யாரேனும் இறந்தால் நம்மால் அவர்களது பிரிவைத் தாங்கமுடியாதுதான். ஆனால், காலப்போக்கில் காலம் நம்மை அந்த நிகழ்வை மறக்க வைக்கிறது என்பதுதான் உண்மை.

7. எரியிற கொள்ளியில எந்த கொள்ளி நல்ல கொள்ளி.

எந்த கொள்ளிய வச்சி பத்த வச்சாலும் ஊரே எறிஞ்சி சாம்பலாயிடும். அதில் எதை நல்ல கொள்ளி, யாருக்கும் எந்த தீங்கும் செய்யாது என்று சொல்லமுடியும்? அதுபோல, மனிதர்களிலும் சில எரிகின்ற கொள்ளிகள் இருக்கிறார்கள்.

நான் ஒரு மூதாட்டியிடம் கேட்டேன்.

“என்ன பாட்டிம்மா, எப்படியிருக்கீங்க?”

“ஏதோ இருக்கேன் சாமி.”

“என்ன இப்படி அலுத்துக்கிறீங்க? ஏன் உங்க பையன் உங்கள சரியா கவனிக்கறதில்லையா?”

“இல்லப்பா. அவன் பொண்டாட்டி பேச்ச கேட்டுக்கிட்டு சரியா சாப்பாடு கூட குடுக்க மாட்டேங்குறான்.”

“அடக் கொடுமையே! உங்க சின்னப் பையன் கூடவா கவனிக்கமாட்றான்?”

“இஹும்… எரியிற கொள்ளியில எந்த கொள்ளி நல்ல கொள்ளி?

இவ்வாறாக அவர் கூறியது எனக்கு எனக்கு மிக வருத்தமாக இருந்தது. இந்த பழமொழியின் விளக்கத்தை நீங்கள் அறிந்துகொள்ளும்பொருட்டு இங்கு அதைக் குறிப்பிடுகிறேன்.

8. வாழந்து கெட்டவங்க வறுவோட்டுக்குக் கூட ஆகமாட்டாங்க.

ஒரு சட்டி உடைந்தால் அதன் அடிப்பகுதி ஓட்டை பயிறு வறுக்கப் பயன்படுத்துவார்கள், அதுதான் வறுவோடு. ஆனால், நன்றாக வாழ்ந்து கெட்டவர்கள் சமுதாயத்தால் ஒதுக்கிவைக்கப் படுகிறார்களே. சட்டிகூட உடைந்தால் வறுவோடாகப் பயன்படுகிறது. ஆனால், இந்த வாழ்ந்து கெட்டவர்களை இந்த சமுதாயம் ஏசுகிறது; அவர்கள் செய்த பாவத்தால்தான் அப்படி ஆனார்கள் என்று தூற்றுகிறது.

9. கண சிநேகிதம் என்றாலும் கருவாட்டுக் கூடையில் கை வைக்காதே.

ஆமாங்க. அப்படி வச்சா நாம கருவாட்டத் திருடிட்டதா சொல்லுவாங்க. இந்த உலகம் அந்த மாதிரி. அதாவது, இந்த பழமொழியின் அர்த்தம் என்னவென்றால், என்னதான் நெருங்கிய நண்பராக இருந்தாலும் அவர்களது தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடக்கூடாது என்பதுதான்.

இந்த பழமொழி வேறு ஒரு அர்த்தத்திலும் வருகிறது. நமது நண்பர் வாய்க் குளிர பேசுவார். ஆனால், உதவி என்று கேட்டால் எச்ச கையால கூட காக்கா ஓட்டமாட்டார். இப்படிப்பட்டவரின் கூற்றாகவும் இதனை எடுத்துக்கொள்ளலாம்.

10.ஏறி விழுந்து போனவளே! ஆதங்கத்த தோத்தவளே!

ஏறி விழுந்து போதல் என்றால் ஒருவர் நம்மை கண்டுகொள்ளாதபோது, நாமாக வலிய சென்று அவர்களிடம் பேசுவது அல்லது அவர்களுக்கு உதவி செய்வது என்று அர்த்தம். ஒருவர் நம்மை அவமானப் படுத்திவிட்டார், பலமுறை அவமானப் படுத்துகிறார், நம்மை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என வைத்துக் கொள்வோம். அதனால் அவரைப் பழிவாங்கவேண்டும் என்றெல்லாம் இல்லை. குறைந்தபட்சம் அடுத்தமுறை அவரால் அவமானப்படாமல் இருக்க அவரது காரியங்களில் தலையிடக்கூடாது என்ற ஒரு ஆதங்கம் இருக்கவேண்டும். ஆனால், அதை விட்டுவிட்டு வலிய அவருடன் உறவாடி அவருக்கு உதவி செய்தால் நமது ஆதங்கத்தைத் தோற்றதாகத்தானே அர்த்தம். அதனால், அவர் மேலும் நம்மை இளக்காரமாக பார்ப்பார்.

11.உன் கால நீயே கும்பிடக்கூடாது.

அதாவது நம்மை நாமே புகழக்கூடாது. ஏனெனில் தற்புகழ்ச்சி அகம்பாவம், கர்வம் என்ற இரு பெரிய பாவங்களுக்கு நம்மை வித்திடும்.

12.பழிப்பவனுக்கு பங்கு ரெண்டு.

இது தர்மம் விதித்தச் சட்டம். நாம் தேவையற்று அடுத்தவர்களைப் பழிக்கும்போது அதே பழிச்சொல் நமக்கோ நமது சந்ததிக்கோ இரண்டு பங்காக வந்துசேரும். உதாரணமாக, ஒருவர் ஊரில் உள்ள வாலிபப்பிள்ளைகளைப் பற்றி “அந்த பையன் இப்படி, இந்த பொண்ணு அப்படி” என்று அவர்களை அவதூறாகப் பேசுவதில் ஒரு தனிப்பிரியத்துடன் இருந்தார். கடைசியில் அவர் பெண்ணே அவருக்குத் தெரியாமல் வீட்டை விட்டு ஓடினபோதுதான் அவர் செய்த தவற்றை உணர்ந்தார்.

13.காலுக்கு மனைக்கட்டையா இருப்பதைவிட கைக்கு வளையலா இருக்கலாம்.

சிம்மாசனத்தில் அமர வாய்ப்பில்லை. ஆனால், காலுக்கு மனைக்கட்டையாக இருக்கலாம் அல்லது கைக்கு வளையலாக இருக்கலாம் என்று இரண்டு வாய்ப்புகள் இருக்கின்றன. இதில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? மற்றவர்கள் காலில் மிதிபடுவதைவிட அவர்களது கைகளுக்கு வளையலாகி அழகுசேர்க்கலாம் அல்லவா? அதாவது இந்த பழமொழியின் அர்த்தம் நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளில் கண்ணியமான வாழ்க்கைமுறை வாழ உதவும் வாய்ப்பைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பதுதான்.

14.ஊரெல்லாம் சுட்டு ஒடம்ப புண்ணாக்கிக்காதே.

தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி தேவையில்லாமல் அவதூறாகப் பேசி அவர்களது வெறுப்பை சம்பாதித்துக் கொள்வது தவறு என்கிறது இந்த பழமொழி.

15.சின்ன நாய்க்கிட்ட இடவாதே, சேம்பில புளிய ஊத்திக் கடையாதே.

சேம்பு என்பது சேனைக்கிழங்கு. அதனை குழம்பு வைக்க லேசாக புளி சேர்க்கலாம். ஆனால் பருப்பு மாதிரி கடையக்கூடாது. அதுபோல சின்னவங்கக் கூட இடவக்கூடாது. சின்னவர்கள் என்பவர்கள் வயதில் குறைந்தவர்கள் அல்லது தரம் மற்றும் கொள்கைகளில் மட்டமானவர்கள்.

தொடரும்…

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
Subscribe
Notify of
guest
13 Comments
Inline Feedbacks
View all comments
திண்டுக்கல் தனபாலன்
ஜூலை 5, 2014 2:54 காலை

11 – சிறப்பு :

8 – வாழ்ந்து கெட்டவர்கள்…! – Visit : http://dindiguldhanabalan.blogspot.com/2013/11/Noble.html

Jeevalingam Kasirajalingam
ஜூலை 5, 2014 4:41 காலை

பழமொழி கூற வந்த அறிஞரே
சமகால நடப்பைச் சுட்டியே
சிறந்த வழிகாட்டலையும் கூறினீர்
பாராட்டுக்கள்!

Bagawanjee KA
ஜூலை 5, 2014 5:20 காலை

உங்கள் விளக்கங்களை ரசித்தேன் !

ரூபன்
ஜூலை 6, 2014 1:05 காலை

வணக்கம்
பழமொழிக்கு தங்களின் நவீன கருத்து சிறப்பாக உள்ளது பகிர்வுக்கு நன்றி

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

srikanth
ஜூலை 6, 2014 6:26 காலை

nice

சிவகுமார்
சிவகுமார்
மார்ச் 23, 2016 4:07 மணி

வாழ்த்துகள் மிக கடின முயற்சி உங்களுக்கு ஒரு சாபாஷ்

சிவகுமார்
சிவகுமார்
மார்ச் 23, 2016 4:08 மணி

நல்வாழ்த்துகள்

சதிஷ் குமார்
சதிஷ் குமார்
ஜனவரி 29, 2017 12:56 மணி

தமிழ் பழமொழிகள் எடுத்து வினவியதற்கு நன்றி, இன்னும் இது தொடர வாழ்த்துக்கள்

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.