பழமொழிகள் மற்றும் கருத்துக்கள் பகுதி–14

பழமொழிகள் பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13

1. விறகு தூக்குபவனுக்கு தலைவலி வந்தால் விறகால் அடித்தால் சரியாப்போயிடும்.

அடித்தால் வலிக்கத்தானே செய்யும்? எப்படி தலைவலி சரியாகும்? அதுதான் அந்த விறகு தூக்குபவன் தன் தொழிலின் மீது கொண்ட பற்று மற்றும் ஆர்வத்தின் அடையாளம். அந்த தொழிலின் மீது அவன் கொண்ட நாட்டமே அவனுக்கு உயிர்நாடி. அதனால் தலைவலி வந்துவிட்டதே என்று ஒரு மூலையில் அமர்ந்துகொண்டால் அது சரியாகாது. மாறாக, அவன் அந்த விறகு தூக்கும் தொழிலைத் தொடரவேண்டும். அப்போது தலைவலி இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

2. பங்காளி சொத்து பாதாளம் போனாலும் விடாது.

பங்காளிகளை ஏமாற்றித் தின்பவர்கள் என்றாவது ஒருநாள் அந்த பாவத்திற்கு தண்டனையை அனுபவிப்பர். அதிலிருந்து அவர்களால் தப்பிக்க இயலாது. என்ன பரிகாரம் செய்தாலும், எங்கு சென்றாலும், ஏன் நரகமே சென்றாலும் அவர்களை அது விடாது.

3. அடுப்பே குலதெய்வம்; ஆம்படையானே திருப்பதி.

இது வீட்டை விட்டு வெளியுலகை வந்து ரசிக்க முடியாதவர்களின் கூற்று, பொதுவாக பெண்கள் கூறுவது. வழக்கமாக மக்கள் அடிக்கடி தங்கள் வீட்டு சுப நிகழ்வுகளில் குலதெய்வத்தைக் கும்பிடுவார்கள். திருப்பதி என்பது மக்கள் தங்கள் வாழ்நாளில் கண்டிப்பாக ஒருமுறையாவது செல்லவேண்டிய திருத்தலம். ஆனால், இதையெல்லாம் பார்க்க சூழ்நிலை அமையாத பெண்களுக்கு அடுப்பே குலதெய்வம், ஆம்படையானே திருப்பதி.

உதாரணத்திற்கு கீழ்வரும் உரையாடலை கவனியுங்கள்.

“செண்பகம், இந்த மே மாதம் ரொம்ப மகிழ்ச்சியா கழிந்தது. நானும் என் வீட்டுக்குக்காரரும் ஊட்டி, சிம்லா போன்ற பல ஊர்களுக்கு சென்று வந்தோம். நீ எங்க எங்கடி போயி வந்த?”

“அடிப் போடி மஞ்சுளா. நான் எங்கையும் போகல. வீட்டுல தலைக்கு மேல வேல. என்ன பண்றது, அடுப்பே குலதெய்வம் ஆம்படையானே திருப்பதின்னு மனச தேத்திக்க வேண்டியதுதான்.”

4. என்னைக்கும் சிரிக்காதவ திருநாளுல சிரிச்சாளாம்.

அவள் ரொம்ப நல்லவள்; உம்மணா மூஞ்சி. அவளும் எவ்வளவு நாளைக்குத்தான் தன் சிரிப்பை அடக்கிவைத்திருப்பாள். அதான், திருவிழாவில் நடந்த கூத்தைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள். ஆனால், பாவம் அவள். எப்போதெல்லாம் அவள் சிரித்தாளோ அப்போதெல்லாம் தங்களைத்தான் பார்த்து சிரிப்பதாக ஆண்கள் நினைத்துக்கொண்டனர். அதனால், அனைவரும் அவளை தவறானவளாகக் கருதினர். அவளுக்குப் பிரச்சினைகளும் வந்தன. இது கதை. பின்வருவது நிஜம்.

நான் சிறு வயதில் பெற்றோர் இட்ட வேலையை மட்டும்தான் செய்வேன். தானாக உணர்ந்து வேலை செய்யவேண்டும் என்று தோன்றாது. ஆனால் ஒருநாள், யாரும் சொல்லாமலேயே மாங்காய் வற்றல்களை மெத்தையில் காய வைத்தேன். என் பெற்றோர்களுக்கு மிகவும் ஆச்சர்யம். பின் அனைவரும் பள்ளிக்குச் சென்றுவிட்டோம். ஆனால், அன்று மழை பெய்து வற்றல்கள் பாழாய்ப்போய்விட்டன. பின் மாலையில் என் அம்மா “இவன் சொன்னாலே செய்யமாட்டான். இன்னைக்கு என்னம்மோ தானா செய்யிறானேன்னு பாத்தேன். என்னைக்கும் சிரிக்காதவ திருநாவுல சிரிச்சாளாம், அந்த கதையாட்டமில்ல ஆயிடுச்சி!” என்று என்னை கடிந்துகொண்டார்.

5. வண்ணான் முன்னால சீலைய போட்டுட்டு கொக்கு பின்னால போனா, அது எப்படிக் கொடுக்கும்?

பலர் இந்த உலகில் இப்படித்தான் இருக்கிறார்கள். தங்கள் சந்தோசங்களை எங்கோ ஒரு இடத்தில் தொலைத்துவிட்டு வேறு எங்கோ தேடிக்கொண்டிருக்கிறார்கள்.

6. வாழ்ந்து அறுத்தாலும் தப்பில்ல; காய்ஞ்சி இடிஞ்சாலும் ஒன்னுமில்ல.

அதாவது ஒருவன் இறந்துவிட்டான் என்றால் அவனது மனைவி விதவையாகிவிடுகிறாள். எனவே, அவளது தாலியை அறுத்துவிடுவார்கள். அவள் ஒருவேளை ஒரு 55 வயது மதிக்கத்தக்க பெண்மணியென்றால் அவள் நன்கு வாழ்க்கையை வாழ்ந்தவள். மேலும் அவளது பிள்ளைகளும் ஒரு நிலைக்கு வந்திருப்பர். அதனால், அவளது கணவனின் இறப்பு பெரிய இழப்பாக இருக்காது. அதுதான் வாழ்ந்து அறுத்தாலும் தப்பில்ல என்பது.

ஒரு மனிதன் இறக்கிறான் என்றால் அந்த மரணம் அகால மரணமாக இருக்கக்கூடாது. அது அவன் வயதானதால் வந்த இயற்கை மரணமாகத்தான் இருக்கவேண்டும். அதுதான் காய்ஞ்சி இடிஞ்சாலும் ஒன்னுமில்ல என்பது.

7. அடி காட்டுக்கு; நடு மாட்டுக்கு; நுனி வீட்டுக்கு.

அந்தக் காலத்தில் மிக உயரமான நாட்டு நெல் வகைகளை பயிரிடுவர். அதன் நுனிப்பகுதியை அறுத்து களத்திற்கு கொண்டுவந்து அடிப்பர். நடுப்பகுதியை அறுத்து தங்கள் மாடுகளுக்குப் போடுவர். அடிப்பகுதியை அப்படியே நிலத்தில் விட்டுவிடுவர். அதனால் அடுத்தப் பயிரிடும்போது அது உரமாகும்.

ஆனால், இன்றோ குட்டையான செயற்கைரக நெற்பயிர்கள் விளைவிக்கப்படுகின்றன. எனவே, அடி காட்டுக்குக் கிடைக்கிறது, நுனி வீட்டிற்கு கிடைக்கிறது, ஆனால் நடுப்பகுதியை காணோமே! அதனால் மாடுகள் வளர்ப்பது குறைந்துவிட்டது. மாட்டுச் சாணத்திலிருந்து கிடைக்கும் இயற்கை உரமும் கிடைப்பதில்லை. அதனால் செயற்கை உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. நிலங்கள் மலடாகிவிட்டன. உணவுப்பொருட்கள் விஷமாகின்றன.

8. ஊரார் பேச்சைக் கேட்டால் உள்ளதும் போயிடும்.

ஊரில் ஆளாளுக்கு ஒன்றைக் கூறுவார்கள். ஒருவர் ஒரு விஷயத்தைச் செய்வது தவறு என்பார். மற்றொருவர் அதே விஷயம் நல்லது என்பார். இவைகளை வைத்து எந்தவொரு முடிவு எடுத்தாலும் அது நம்மிடம் இருப்பதையும் இழக்கச் செய்யும். அதற்குத்தான் கேட்பார் பேச்சைக் கேட்கக் கூடாது என்று கூறுவார்கள். ஏனெனில் அவர்கள் தாங்கள் கேள்விப்பட்டதை மட்டுமே சொல்கிறார்கள். எனவே, நாம் ஊரார் பேச்சைக் கேட்காமல் நாம் நம் வாழ்கையில் பார்த்தவைகள் மற்றும் அனுபவித்தவைகளை வைத்து முடிவெடுக்கவேண்டும்.

9. வாய்க் கொழுப்பு சீலையால ஒழுவுது.

தங்களது அதிகமான வாய்க் கொழுப்பால் சும்மா இல்லாமல் எப்போது பார்த்தாலும் பிரச்சினையைக் கொண்டுவருபவர்களை இவ்வாறு கூறுவார்கள்.

10.புளியமூலையில மின்னினால் பொழுது முளைப்பதற்குள் மழை பொழியும்.

நான்கு மூலைகள் கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளன.

திசைகள்-மற்றும்-மூலைகள்

இவை ஒவ்வொரு பகுதிக்கும் மாறலாம் என்று நினைக்கிறேன். இவற்றில் புளிய மூலையில் தூரத்தில் பெய்தாலும் விடிவதற்குள் நமது ஊரில் மழை வந்துவிடும். இந்த பழமொழி உண்மைதான். நானே பலமுறை பார்த்திருக்கிறேன். ஆனால், ஒரே ஒரு பிரச்சினைதான். புளிய மூலையில் பலத்த மழை பெய்தால் எங்கள் ஊருக்கு வரும்போது வெறும் தூரல்தான் போடுகிறது. இயற்கையை பராமரிக்கவில்லையென்றால் அது நம்மை எவ்வாறு பராமரிக்கும்?

11.வடக்கே வாழ்வு, தெற்கே தேய்வு.

அதாவது காலம் காலமாக வடக்கே சென்று நம் இருப்பிடத்தை அமைத்துக்கொண்டால் நாம் செழிப்பாக வாழ்வோம் என்றும், தெற்கே அமைத்துக்கொண்டால் நமது வாழ்க்கைத் தேய்ந்துவிடும் என்றும் கூறிவருகிறார்கள். நமது முன்னோர்கள் திசைகளுக்கென்று பலன்களை வைத்திருக்கின்றார்கள். இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. ஆனால், அவர்கள் கூறுவதை நான் கூறுகிறேன் அவ்வளவுதான்.

மேலும் சில திசைப் பழமொழிகள்:
  • கெட்டு கெழக்கப் போலாம்; வாழ வடக்கப் போலாம்; மீந்தத எடுத்துட்டு மேற்கப் போகக்கூடாது.
  • மங்கும் திசை மேற்கு.

நாம் இருக்கும் இடத்தில் நமது வாழ்வாதாரம் சரியில்லையென்றால் கிழக்கே சென்றால் நமக்கு வளம் பெருகும். வடக்கே போய் வாழ்வதும் நல்லதே. ஆனால், நமது வாழ்வாதாரம் என்னதான் உயர்வாக இருந்தாலும் மேற்கே சென்று நமது இருப்பிடத்தை அமைத்துக்கொண்டால் நாம் அடிமட்டத்துக்குத்தான் செல்வோம்.

சூரியன் மங்கும் திசை மேற்கு. எனவே, மேற்குப்புறம் சென்றால் நமது வாழ்வும் மங்கும். இவைகள் எல்லாவற்றிக்கும் பொருந்தும். உதாரணமாக ஒருவன் தான் செய்யும் வேலையில் பணிமாறுதல் கிடைத்து மேற்கே உள்ள ஊருக்கோ அல்லது தெற்கே உள்ள ஊருக்கோ செல்கிறான் என்றால் அவனுக்கு அதற்குமேல் பணியிலும் வாழ்விலும் கஷ்டம்தான்.

12.நல்லது வளர்வது குடிசையில்.

நூற்றுக்கு நூறு உண்மையான பழமொழி. பெரும்பாலும் ஏழ்மையில் உள்ளவர்கள்தான் உழைப்பாளிகளாகவும், அடுத்தவர்கள் மீது அன்பு காட்டுபவர்களாகவும், கைமாறு கருதாமல் உதவி செய்பவர்களாகவும், கண்ணியமான வாழ்க்கை நடத்துபவர்களாகவும் இருக்கிறார்கள் என்பது பல வகைகளில் கண்டறிந்த உண்மை. அதற்காக மாடி வீட்டில் உள்ளவர்களெல்லாம் நல்லவர்கள் அல்ல என்ற அர்த்தத்தில் எடுத்துக்கொள்ளக் கூடாது.

13.மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

மண் குதிரை ஆற்றில் கரைந்துவிடும். நாமும் இறந்துவிடுவோம். அதுபோல, சில மண்குதிரை மனிதர்களை நம்பி எந்த செயலிலும் இறங்கக்கூடாது.

14.ஒரு கை ஓசை போல.

இரண்டு கை வைத்து தட்டினால்தான் ஓசைக் கேட்கும். ஒரு கை ஓசை கேட்காது. அதுபோல நமது வாழ்கையில் ஒரு பெரிய தீய சக்தியை எதிர்த்துப் போராடும்போது நாம் ஒருவர் மட்டும் எதிர்த்துக் குரல் கொடுப்பதால் எந்தப் பயனுமில்லை.

உதாரணமாக கெட்ட நபர்கள் பத்துப்பேர் சேர்ந்து ஒரு நல்ல மனிதனுக்குத் தொந்தரவு கொடுக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அந்த நல்ல நபர் தனியாக கெட்ட நபர்களை எதிர்த்து அவர்கள் கெட்டவர்கள் என்பதை ஊர் மக்களிடம் கூறினால் யாரும் நம்பமாட்டார்கள். ஏனெனில் அந்த பத்து நபர்களும் சேர்ந்து அந்த ஒருவர்தான் கெட்டவர் எனக் கூறுவர். பத்து பேர் ஒருவருக்கு எதிராக சாட்சி சொல்வதால் ஊரும் அதைத்தான் நம்பும்.

15.பாம்பு திங்கிற ஊருக்குப் போனா நடுக்கண்டம் நமக்குத்தான்னு திங்கணும்.

ஒரு ஊரில் உள்ளவர்கள் அனைவரும் அசைவப் பிரியர்கள், அங்கு பிரதான உணவு பாம்பு என்று வைத்துக்கொள்வோம். நாம் சுத்த சைவம். ஆனால், அந்த ஊருக்கு நாம் சென்று குடிபுகுந்தால் நமக்கும் அசைவ உணவுதான் கிடைக்கும், குறிப்பாக பாம்பு மட்டுமே கிடைக்கும் என வைத்துக்கொள்வோம். எனவே நாமும் அதை சாப்பிடக் கற்றுக்கொள்ளவேண்டும் அல்லது சாப்பிடுவதைப் போன்றாவது நடிக்கவேண்டும். இல்லையென்றால் அவர்கள் நம்மை எதிரியாக நினைத்து நம்மை தனிமைப்படுத்திவிடுவார்கள்.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
Iniya
செப்டம்பர் 9, 2014 3:21 காலை

பயனுள்ள பதிவு அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவை.
மிக்க நன்றி !தொடர வாழ்த்துக்கள் ….!

Yarlpavanan Kasirajalingam
செப்டம்பர் 10, 2014 12:35 காலை

சிறந்த கருத்துப் பகிர்வும் தமிழில் பொருள் விளக்கமும்
தொடருங்கள்

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.