பழமொழிகளும் விளக்கங்களும் பகுதி-15

பழமொழிகள்

பழமொழிகள் பகுதிகள்: 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14

1. ஜென்மத்தில் பிறந்தது செருப்பால அடிச்சாலும் போகாது.

ஒருவன் சிறுவயதிலேயே கற்றுக்கொண்ட தீய பழக்கவழக்கங்கள், அவைகளால் அவனுக்கு எவ்வளவு அவமானங்கள் ஏற்பட்டாலும் அவனை விட்டு நீங்காது. அதாவது பிறவியிலிருந்தே கெட்டவர்களாக வளர்ந்தவர்களை பெரும்பாலும் திருத்த முயற்சித்தாலும் திருந்தமாட்டார்கள். அப்போது சொல்லும் பழமொழிதான் இது.

2. சுப்பனுக்குக் குப்பை; சொக்கனுக்குத் தங்கம்.

சுப்பனுக்குக் குப்பையாகத் தெரிவது சொக்கனுக்குத் தங்கமாக தெரிகிறது. ஏனெனில் அந்த குப்பை அவனுக்கு வாழ்வாதார முதலீடாக மாறுகிறது. எனவே ஒரு பொருளின் மதிப்பு அவரவர்கள் பார்வையிலும் செயல்பாடுகளிலுமே இருக்கிறது.

3. ஒய்யாரக் கொண்டையாம், தாழம் பூவாம்; உள்ளே பார்த்தால் ஈரும் பேனுமாம்.

இந்த பழமொழி தற்போது எந்த அளவுக்கு பிரபலம் என்பது அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் ஒரு சிறு விளக்கம். வெளியே செய்துள்ள அலங்காரங்களைப் பார்த்தால் அழகாக இருந்தாலும் கொண்டையினுள் ஈரும் பேனும் இருப்பதுபோல், போலியாக நல்லவர்களைப் போன்று நடித்தவர்களின் முகத்திரை கிழிக்கப்படும்போது இந்த பழமொழியைப் பயன்படுத்தலாம்.

4. மாளாதவனுக்கு மையனூர்.

இது ஒரு வட்டார பழமொழிக்கு எடுத்துக்காட்டு. இது எங்கள் ஊர்ப்பக்கம் கூறப்பட்டு வருவது. எங்கள் ஊர் அருகில் மையனூர் என்னும் ஊர் உள்ளது. பல ஊர்களுக்கு சென்று வரன் கிடைக்காத ஆண்கள் கடைசியில் இந்த ஊருக்குச் சென்றுதான் தங்கள் வாழ்க்கைத் துணைவியைத் தேடிக்கொள்கின்றனர். அதாவது, பல பெண்களைப் பார்த்து ஜோடிப் பொருத்தம் இல்லாமலோ அல்லது வேறு ஏதாவது காரணங்களாலோ திருமணம் தடை உள்ளவர் அலுத்துப் போய் கடைசியாக அந்த ஊரில்தான் பெண் பார்ப்பாராம்; உடனே திருமணம் கைகூடிவிடுமாம் (அதாவது, கண்டிப்பாக அவருக்கு ஏற்ற பெண் அந்த ஊரில்தான் இருப்பாராம்).

5. சிங்கத்திடம் இருந்து தப்பித்து சிறுத்தையிடம் மாட்டியாச்சி.

பல நேரங்களில் மனிதர்கள் இப்படித்தான் கஷ்டப்படுகிறார்கள். ஒரு பெரிய பிரச்சினையிலிருந்து விடுபட அவர்கள் சக்தியையெல்லாம் பயன்படுத்தி முயன்று தப்பிப்பார்கள். ஆனால், கடைசியில் வேறு ஒரு பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொள்வார்கள். அப்போது அவர்கள் புலம்புவதுதான் இந்த பழமொழி.

6. மழை நின்றும் தூரல் நிற்கவில்லை.

ஒரு பெரிய கஷ்டம் வந்து அந்த கஷ்டம் மறைந்தபின்பும் அதனுடன் தொடர்புடைய துன்பங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கும்போது இவ்வாறு கூறுவார்கள்.

7. பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம்.

ஒருவர் செய்த தவற்றுக்காக மற்றவர்களின் தவறான தீர்ப்பாலோ அல்லது புரிதலாலோ வேறொருவர் தண்டனை அனுபவிக்கும்போது இவ்வாறு சொல்லப்படும். தவறு செய்தவர் தானே முன்வந்து தவறை ஒப்புக்கொண்டால் மட்டுமே உண்மை வெளிவரும்.

8. புள்ள குட்டி இல்லாதவன் பஞ்ச காலத்துல ராஜா, ஆடு மாடு இல்லாதவன் மழை காலத்துல ராஜா.

மக்களைப் பெறாதவர்கள் பஞ்சக் காலத்தில் பிள்ளைகளுக்காக செலவழிக்க வேண்டியதில்லை; மீதப்பட்டு சேர்த்தும் வைக்கலாம். மழைக்காலத்தில் ஆடு மாடுகளை பராமரிப்பது எவ்வளவு கடினம் என்பதும் அவைகளுக்காக தீவனங்களைச் சேகரிப்பது எவ்வளவு கடினம் என்பதும் அனைவரும் அறிந்ததே. எனவே, ஆடு மாடு இல்லாதவர்கள் அந்த சிரமங்களையெல்லாம் படவேண்டிய அவசியம் இல்லைதானே?

9. மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்.

மாங்காய் ஊறுகாய் எவ்வளவு சுவையானது என்பதையும் இந்தியர்கள் எந்த அளவுக்கு மாங்காயின் அருமையை உணர்ந்திருக்கிறார்கள் என்பதையும் இந்த பழமொழி மூலம் அறியலாம். காய்ச்சல் உள்ளவர்கள் கஞ்சி குடிக்க கஷ்டப்படுவார்கள். ஏனெனில் வாய் கசப்பாக இருக்கும். ஆனால், அவர்களுக்கு ஒரே ஒரு மாங்காய் ஊறுகாய் கொடுத்தால் அதன் சுவையால் கஞ்சி முழுவதையும் சாப்பிட்டுவிடுவார்கள்.

10.தாய்க்கு தலச்சன் பிள்ளை; தந்தைக்கு கடைப்பிள்ளை.

ஒரு பெண்ணுக்கு அவள் மலடி இல்லை என்பதை நிரூபிக்க பிறக்கிறது தலைச்சன் பிள்ளை. ஆணுக்கு, அவனுடைய பேரை சொல்ல கடைசி வாரிசாக இருக்கிறது கடைப்பிள்ளை. எனவேதான் தாய்மார்கள் தன் முதல் பிள்ளையிடம் மிகுந்த பாசமாகவும், தந்தைமார்கள் கடைசி பிள்ளையிடம் அளவுகடந்த பாசத்துடன் நடந்துகொள்கின்றனர்.

11.கடலாழம் கண்ட பெரியாரும் பெண்ணாழம் கண்டதில்லை.

ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. Men have sights, women have insights.” அதாவது, ஆண்களுக்கு இருப்பது சாதாரண பார்வை; பெண்களுக்கு இருப்பது ஊடுருவி பார்க்கும் பார்வை. பெண் என்ன நினைக்கிறாள், ஒரு பிரச்சினையை எப்படி அணுகுவாள் போன்றவைகளை யாராலும் கணிக்க இயலாது. அவர்கள் ஆண்களைக் காட்டிலும் ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ந்து செய்வதில் வல்லவர்கள். எனவே, பெண்களின் மனதின் ஆழத்தை கடலாழம் கண்டவர்களால் கூட காண்பது எளிதல்ல.

12.வாழாது வாழ்ந்தாலும் வடக்கே தலைவைத்து படுக்கக் கூடாது.

என்னதான் பெரிய அதிசயமான சொகுசான வாழ்க்கை கிடைத்து வாழ்ந்தாலும் வடக்கே தலை வைத்து படுக்கக் கூடாது என்பது பெரியவர் கூற்று. அறிவியல்படி வடக்குத் தெற்காக பூமியில் காந்தப் புலம் இருப்பதால் அது நமது உடலுக்கு பிரச்சினை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது.

13.எண்ணெய் பூசிக்கொண்டு புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்.

நமக்கென்று எது கிடைக்கவேண்டும் என்று இருக்கிறதோ அது மட்டும்தான் நமக்கு நிரந்தரம். எப்பேற்பட்ட முயற்சிகள் மேற்கொண்டாலும் நம்மக்காக படைக்கப்படாத ஒரு பொருள் நம்மிடம் நிரந்தரமாக இராது. ரஜினி அவர்கள் பாணியில் சொல்லவேண்டுமென்றால், “கிடைப்பது கிடைக்காமல் இருக்காது; கிடைக்காமல் இருப்பது கிடைக்காது.”

14.கை பட்டாதான் கண்ணாடி.

எந்த ஒரு பொருளும் பயன்பாட்டில் இருந்தால்தான் அதற்கு மதிப்பு. இல்லையென்றால் அது தானாகவே தன் பொலிவை இழந்து வீணாய்ப் போகும்.

15.காது காது என்றால் லேது லேதுன்னு கேட்குது.

சிலர் நாம் சொன்னதை தவறாக புரிந்துகொண்டு நமக்கு பதில் அளிப்பார்கள். ஒன்று அவர்களுக்கு கேட்கும் திறனில் கோளாறு இருக்கலாம் அல்லது நாம் பேசுவதை அவர்கள் சரியாக கவனிக்காமல் இருக்கலாம். அப்படி அவர்கள் நம் கேள்விக்கு முற்றிலும் சம்பந்தமே இல்லாத பதிலைக் கூறும்போது, “ஆமாம், உனக்கு காது காதுன்னா லேது லேதுன்னு கேட்கும். உங்கிட்டப் போய் சொன்னேன் பாரு. என்ன சொல்லணும்.” என்று அலுத்துக்கொள்வோம்.

தொடரும்…

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
Subscribe
Notify of
guest
3 Comments
Inline Feedbacks
View all comments
திண்டுக்கல் தனபாலன்
டிசம்பர் 16, 2014 1:49 காலை

அறிவியல் உண்மையோடு பல விளக்கங்கள் அருமை…

chandraa
chandraa
ஜூன் 14, 2015 4:22 மணி

it is always good to remember THESE WISE SAYINGS and lead our life jones ji

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.