சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும் பகுதி-4

 

பழமொழிகள்

பகுதி-3 ஐப் படிக்க இங்கு சொடுகவும். 

1. ஆதியில வந்தவ வீதியில நிக்கிறாளாம், நேத்து வந்தவ நெல்லு குத்துராளாம்.

தன் மனைவியை பதறடித்துவிட்டு புதிதாக சேர்த்துக்கொண்ட பெண்ணுக்கு (வைப்பாட்டி) உரிமை கொடுத்து கொண்டாடும்போது, இவர்களைப் பார்த்து ஊரார் சொல்லும் பழமொழிதான் இது.

2. குத்தாலத்தில குளிக்க போக கும்பகோணத்திலேயே துணி அவுக்கறான்.

ஆர்வக்கோளாறு மற்றும் ஒரு விஷயத்தில் அதிகப்படியான ஆர்வம் காட்டுகிறவர்களுக்கு சொல்லப்படும் பழமொழி.

3. ஆயிரம் முறை போய் ஒரு கலியாணத்த பண்ணனும்.

இந்த பழமொழி ‘ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கலியாணத்தப் பண்ணனும்’ என்று தவறாக கூறப்பட்டு வருகிறது. ஒரு திருமணம் செய்வதற்கு முன்பு மாப்பிள்ளையோ பெண்ணோ எப்படிப்பட்டவர்கள் என்பதை ஆயிரம் முறை அவர்கள் வீட்டிற்கு போய் அலசி ஆராய்ந்து பிறகு திருமணத்தை நடத்தவேண்டும் என்பதே உண்மையான பழமொழியின் அர்த்தம்.

4. கோயில் பூ நெய் தேவனுக்கு அம்சம் ஆகாது.

இந்த பழமொழியையும் கோவில் பூனை தேவனுக்கு அஞ்சாது’ என்று தவறாகத்தான் பயன்படுத்துகிறார்கள். கோயிலில் சாமிக்கு நெய் பூ வைத்து அர்ச்சனை செய்தால் அது இறைவனிடம் போய்ச் சேரவா போகிறது? மாறாக, நாம் நம் எண்ணத்தில் மற்றும் செயலில் இறை பக்தியுடன் வேண்டுவதும் புகழ்வதும்தான் அவருக்கு உண்மையான அர்ச்சனை.

5. பணம் பத்தா இருக்கணும், பொண்ணு முத்தா இருக்கணும், முறையும் அத்தை மகளா இருக்கணும்.

நிச்சயதார்த்தம் என்பதை பரிசம் போடுதல் என கூறலாம். அதாவது ‘பரிசு கொடுத்தல்’ என்பதுதான் மருவி பரிசம் என்றாகிவிட்டது என்று பெரியவர்கள் கூறுகிறார்கள்.
நிச்சயதார்த்தத்திற்கும் பரிசு கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்?
அந்த காலத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்யவேண்டுமானால், ஆண்மகன் தன் சம்பாத்தியத்தில் பொருள் சேர்த்து ஒரு பெரிய தொகையை பெண் வீட்டார்க்கு கொடுக்கவேண்டுமாம். தனக்கு மனைவியாக தன் வீட்டிற்கு வரப்போகிறவளை பேணி வளர்த்த குடும்பத்திற்காக ஒரு ஆண் கொடுக்கும் பரிசுதான் அந்த தொகை.
அப்படி பரிசு கொடுக்க நம்மிடம் நிறைய பணம் இருக்கவேண்டும். ஏனெனில் பெண்ணின் அழகு மற்றும் குடும்ப சூழ்நிலை பொறுத்து அந்த தொகை அதிகரிக்கும். அதனால்தான் பணம் பத்தா இருக்கணும். பின் பெண் முத்துபோல அழகாக மற்றும் நல்ல குணங்களை கொண்டவளாக இருக்கணும். முறை அத்தைமகளாக இருந்தால் பணம் கூட கொடுக்கவேண்டும் என்று அவசியமில்லை.
இந்த காலத்தில் இந்த பழக்கம் தலைகீழாக மாறி பெண்கள் ஆண்களுக்கு வரதட்சணை கொடுக்கிறார்கள்.

6. வயசு வைக்கோலா போகுதாம், கிழவி கிண்ணரம் வாசிக்குதாம்.

கிண்ணரம் என்பது ஒரு இசைக்கருவி. இசைக்கருவி வாசிக்கும் அளவுக்கு உடல் வலிமை உள்ள கிழவி பற்றிய பழமொழி இது. அதாவது சில வயதானவர்கள், அறுத்து அடித்து வைத்த நெற்கதிர்கள் வைக்கோலாக மாறுவதுபோல, எவ்வளவுதான் முதுமை அடைந்தாலும் வலிமை குறையாது தாங்களே உழைத்து, ஓடி ஆடி வேலை செய்து சாப்பிடுவார்கள். அவர்களை இவ்வாறு கூறலாம்.

7. கொழம்பன குட்டையில்தானே மீன் பிடிக்கலாம்!

ஏரியிலோ அல்லது குட்டைகளிலோ மீன் பிடிக்கும்போது பத்து பதினைந்து பேர் இறங்கி நாலா புறமும் நடந்து நீரை குழப்பிவிடுவார்கள். குட்டை குழம்பியுள்ளதால் மீன்கள் திக்கு தெரியாமல் எளிதாக வளைகளில் மாட்டிக்கொள்ளும். அதுபோல, ஒருசிலர் நம்மை இல்லாதது பொல்லாது கூறி நம்மை குழப்பி அதனால் ஆதாயம் தேடுவார்கள்.

8. பிள்ளையார பிடிக்கப்போயி கொரங்க பிடித்த கதையாயிடுச்சி.

களிமண்ணில் பிள்ளையார் சிலை செய்ய எண்ணி நம் கைகளால் பிடித்து செய்து பார்த்தால் அது குரங்கு போல் இருக்கிறது. நாம் செய்ய நினைத்ததோ பிள்ளையார் சிலை. ஆனால், இறுதியில் கிடைத்ததோ குரங்கு சிலை. இதைப்போலதான் வாழ்க்கையிலும். நல்லது செய்ய எண்ணி ஒரு செயலை செய்தால் கடைசியில் அது தீயதாக வந்து முடிகிறது.

9. உண்ட மயக்கம் தொண்டருக்கும் உண்டு.

வேலை செய்தால்தான் களைப்பு வரவேண்டும் என்று அவசியமில்லை. நல்ல வயிறு முட்ட சாப்பிட்டால் கூட மயக்கம் மற்றும் களைப்பு வரும். சாப்பாடு விஷயத்தில் தலைவர் சீடர் என்ற பிரிவில்லை. எல்லாருக்கும் உண்ட களைப்பு இருக்கத்தான் செய்யும்.

10.கொண்டவன் சரியா இருந்தா கூரை ஏறி சண்டை பிடிக்கலாம்.

கணவன் நல்லவனாக மனைவிக்கு எப்போதும் பக்கபலமாக இருந்தால், மனைவி யாருக்கும் பயப்படவேண்டும் என்று அவசியமில்லை. தன்னை எதிர்ப்பவர்களை பதிலுக்கு எதிர்க்கலாம். அவர்களும் அடங்கிவிடுவார்கள். ஒரு வேளை, கணவன் மனைவியின் நலனில் அக்கறை இல்லாமல், அவள் எப்படிப்போனால் என்ன என்ற மனப்போக்குடன் இருந்தால், மனைவி மற்றவர்களிடம் சண்டை பிடிக்க இயலாது. அமைதியாகத்தான் இருக்கவேண்டும். ஏனெனில், மனைவியை மற்றவர்கள் ஏறி மிதித்தால் கூட அவர்களை அவன் கேள்வி கேட்கமாட்டான்.

11.இருக்கிறவன் அள்ளி முடிஞ்சிக்கிறான், இல்லாதவன் தடவி பாத்துக்கறான்.

அந்த காலத்தில் ஆண்கள் பெண்களைப்போன்று நீளமான முடி வைத்திருப்பார்கள். எனவே அவர்கள் அதனை அள்ளி கூந்தல் போட்டுக்கொள்வார்கள். தலை வழுக்கை உள்ளவர்கள் நீளமான முடி வைத்திருப்பவர்களின் கூந்தலை தடவிதான் பார்த்துக்கொள்ளவேண்டும்! அதுபோல, வசதி படைத்தவர்கள் விலையுயர்ந்த பொருட்களை வாங்குவார்கள். இல்லாதவர்கள், இருப்பவர்கள் யாராவது வாங்கியிருந்தால் அதனைப் பார்த்து கற்பனையில் மகிழ்ச்சி கொள்வார்கள்.

12.செய்வன திருந்தச் செய்.

இது நமக்கு எளிதில் விளங்கக்கூடிய பழமொழிதான். எந்த ஒரு வேலையை செய்தாலும் அதை ஒரு ஈடுபாட்டுடன் செய்து, முழுவதுமாக செய்யவேண்டும். அரைகுறையாக விட்டுவிட்டு பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் ஏனோ தானோ என்று செய்யக்கூடாது.

13.இல்லாதவனுக்கு இலுப்பை பூ சர்க்கரை.

அந்த காலத்தில், சர்க்கரை வாங்க வசதி இல்லாதவர்கள் இலுப்பை பூக்களை மூட்டை மூட்டையாக பறித்துவந்து, காய வைத்து பின் உரலில் இடித்து சர்க்கரை செய்வார்கள். உண்மையைச் சொன்னால் கரும்பு சர்க்கரையைவிட இலுப்பைப்பூ சர்க்கரை அருமையாக இருக்கும். இந்த காலத்தில் இலுப்பை மரங்களை பார்ப்பதே அரிது. அந்த காலத்தில் இல்லாதவனுக்கு இலுப்பைப்பூ சர்க்கரை. ஆனால் இந்த காலத்தில் இருப்பவன் கூட வாங்க இயலாது. நம்மில் 90% பெயருக்கு இலுப்பைப்பூவில் சர்க்கரை எடுக்கலாம் என்றே தெரியாது.

14.குப்ப காட்டு நாய்க்கு தெரியுமா கொய்யாப்பழ வாசனை?

இது ‘கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?’ என்பதற்கு இணையான பழமொழி. ஒரு பொருளின் முக்கியத்துவத்தை ஒருவர் உணராதபோது இவ்வாறு கூறி அவரைத் திட்டலாம்.

15.ஆச இருக்குதாம் அரசனாக, அம்சம் இருக்குதாம் கழுத மேய்க்க.

நாம் ஆசைப்பட்டால் மட்டும் நமது லட்சியத்தை அடைய இயலாது. நமது கடின உழைப்பும், கடவுளின் அனுக்கிரகமும் கூடவே கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். ஆசை மட்டும் கொண்டுவிட்டு அதற்கான முயற்சியை எடுக்கவில்லையென்றால், கண்டிப்பாக ஊரார் நம்மைப் பார்த்து இப்படித்தான் கூறுவார்கள்.

 

தொடரும்….

பகுதி-5 ஐப் படிக்க இங்கு சொடுகவும். 

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
Subscribe
Notify of
guest
1 Comment
Inline Feedbacks
View all comments
திண்டுக்கல் தனபாலன்
ஏப்ரல் 10, 2013 11:58 காலை

மனிதர்கள் அவர்கள் விருப்பத்திற்கேற்றவாறு எப்படியெல்லாம் மாறி… மாற்றி விட்டார்கள் என்பதை ஐந்து (5) நன்றாக விளக்குகிறது… விளக்கங்களுக்கு நன்றி…

மேலும் தொடர வாழ்த்துக்கள்…

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.