பழமொழிகள்

சில தமிழ் பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

பழமொழிகள்

பழமொழிகள்1. நீர்ல பார்த்தேன் உன் சீரை, உப்புல பார்த்தேன் உன் துப்பை.

பொதுவாக இது புகுந்த வீட்டிற்கு செல்லும் பெண்களுக்கான பழமொழியாகும். அதாவது பெண்கள் புகுந்த வீட்டிற்கு எடுத்துச் செல்லும் சீர் என்பது நகையோ பாத்திரங்களோ இல்லை. மாறாக பொறுப்பும் சிக்கன குணமும்தான். அதாவது நீரை எவ்வாறு செலவு செய்கிறார்கள் என்பதே அவர்களின் சிக்கன குணத்தை விளக்கும். மேலும் உப்பு என்பது ஒரு உயிர் நாடி போன்றது. அதனை பாதுகாக்கும், பயன்படுத்தும் மற்றும் கையாளும் முறையை வைத்து ஒரு பெண்ணின் குடும்ப நிர்வாகத் திறமையை (துப்பு) கண்டறியலாம்.

2. தென்ன மரத்துல தேள் கொட்டினா பன மரத்துல நெரி ஏறுதாம்.

ஒருவர் ஒரு தவறு செய்துள்ளார் என்று வைத்துக் கொள்வோம். நாம் அந்த தவறை சுட்டிக் காட்டவில்லையென்றாலும், வேறு ஒருவர் அந்த தவறை செய்திருப்பார். அதைபற்றி நாம் பேசினாலும் இவரைப் பற்றிதான் சொல்கிறோம் என்று சில நேரங்களில் சண்டைக்கு வருவதுண்டு. அதாவது வேறு விதமாக, ஒருவர் ஒரு தவறுக்கு தண்டனை அனுபவிக்கிறார் என்றால், வேறொருவர் தான் செய்த வேறொரு தவறை நினைத்து பயப்படுவதை இந்த பழமொழி உபயோகித்து கூறலாம்.

3. பழய முறத்துக்கு சாணி, கிழ பொணத்துக்கு சோறு.

எதற்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயல்படவேண்டும் என்பதற்காக சொல்லப்பட்ட பழமொழி. அதாவது பழுதடைந்த முறம்(பெரியவங்க பிஞ்சு போன முறத்தால அடிப்பேன்னு சொல்வாங்களே,அந்த முறம்) சரி செய்ய சாணம் பூசி முழுகுவார்கள். அதுதான் ‘பழய முறத்துக்கு சாணி’ என்பது. ஒரு வயதானவற்கு தேவை அவரை உயிரோடு வைத்திருக்க வேளா வேளைக்குச் சோறு. அதுதான் ‘கிழ பொணத்துக்கு சோறு’ என்பது. இவ்வாறாக தேவையை உணர்ந்து செயல்படவேண்டும்.

4. கெவிலி சொல்ற பல்லி கழநி பானையில விழுந்துச்சாம்.

நாம் ஒன்று கூறும்போது பல்லி “உச்” கொட்டும். அப்போது “பல்லியே சொல்லிடுச்சி. நான் சொல்றதுதான் சரி” என்போம். பல்லி நாம் கூறுவதை ஆமோதிப்பது போன்ற சத்தம் போடுவதுதான் கெவிலி சொல்லுதல். மற்றவர்களுக்கு கெவிலி சொல்லும் பல்லியே அதனுடைய வாழ்கையில் என்ன நடக்கப் போகிறது என்று தெரியாமல் கழநி பானையில் விழுந்து இறக்கிறது. அதுபோல அறிவுரை கூறுபவர்களே தவறு செய்யும்போது இந்த பழமொழியைக் கூறுவோம்.

5. ஊருக்கு பொது, ஏரிக்கு மது

ஏரியின் மதுவில்தான் அதிக பயன்பாடு இருக்கும். மீன்கள் அதிகம் கிடைக்கக் கூடிய இடமும் அதுதான். அது ஊருக்குப் பொதுவானது. அதுபோல யாராவது மிகவும் ஏமாளியாக ஊர் மக்கள் அனைவரிடமும் ஏமாறுபவராக இருந்தால், அவரை எப்படி வேண்டுமானாலும் ஏமாற்றலாம், தனக்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதால் அவரை இந்த பழமொழி வைத்துக் குறிப்பிடுவோம்.

6. மூளை செய்யாததை முழங்கால் செய்யும்.

இது பொதுவாக கிறிஸ்துவர்கள் கூறுவது. ஏனெனில் அவர்கள் முழங்கால் படியிட்டு பிராத்திக்கிறார்கள். நம்மால் ஒரு செயலை வெற்றிகரமாக செய்ய முடியாதபோது, நம்மைவிட மேலான கடவுளை வேண்டிக் கேட்கும்போது அவர் நமக்கு அந்த செயலை வெற்றியுடன் முடித்துக் கொடுப்பார் என்பதே இதன் அர்த்தம். நாம் கடவுளைப் பற்றிக் கொள்ளவேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது.

7. நாற்றும் பிடுங்கணும், நடவும் நடணும்.

ஒருவர் ஏகப்பட்ட வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டியவராக, வேலை பளு அதிகம் கொண்டவராக இருந்தால், “எனக்கு ஏகப்பட்ட வேல இருக்குது. நாற்றும் பிடுங்கணும், நடவும் நடணும்” எனபார்.

8. வர்மம், வைராக்கியம் தர்மத்தின் பலனையும் விழுங்கும்.

நாம் என்னதான் நல்லவர்களாக அனைவருக்கும் தர்மம் செய்பவர்களாக இருந்தாலும், நமக்கு கெடுதல் செய்தவர்கள் மீது பகை உணர்வு கொண்டு வாழ்ந்தால், “செய்த தர்மம் தலை காக்கும்” என்ற பழமொழி பொய்த்துப் போகும். அதாவது நாம் செய்த தர்மத்தின் பலனாக நமக்கு ஆபத்து ஏற்படாதென்றோ அல்லது நமக்கு சொர்க்கம் கிடைக்கும் என்றோ கூற இயலாது.

9. இத விட்டாலும் வேற கதி இல்ல, அப்பால போனாலும் நாதி இல்ல.

ஒரு பெண் ஒருவனை காதலித்து திருமணம் செய்திருக்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். இதனால் அவள் குடும்பம் அவளை தலை முழுகிவிட்டது. யாரும் தேவையில்லை தன் கணவன் மட்டும் போதும் என்று அவனுடன் வாழ்கிறாள். ஆனால் அவனோ கெட்டவனாக மாறிவிட்டான். அவளை தினம் தினம் கொடுமைப்படுத்துகிறான். அவளுக்கு அவனை விட்டு ஓடிவிடலாம் என்றுகூட தோன்றுகிறது. ஆனால் அவள் காதல் திருமணம் செய்ததால் தன் ஆதரவாளர்களை இழந்துவிட்டாள். என்ன செய்வது? அவளுக்கு இத விட்டாலும் வேற கதி இல்ல, அப்பால போனாலும் நாதி இல்ல.

10.படுத்தாலும் புரண்டாலும் ஒட்டுவதுதான் ஒட்டும்.

நாம் என்னதான் உழைத்தாலும், சொத்து சேர்த்து வைத்தாலும், சொத்தைக் காப்பாற்ற முயற்சி எடுத்தாலும் நமக்கென்று நம் தலையில் என்ன எழிதியிருக்கிறதோ அதுதான் கடைசிவரை நிலைக்கும்.

11.ஆன மேல போறவன் அந்து காலன், குதிரை மேல போறவன் குந்து காலன்.

புனைப்பெயர், பட்டப்பெயர் வைப்பதைப் பற்றிய பழமொழி இது. நமது ஊர்களில் ஒவ்வொருவருக்கும் ஒரு பட்டப்பெயர் இருக்கும். அது உருவ தோற்றத்தின் காரணமாக இருக்கலாம் அல்லது அவர்கள் குணம் அல்லது தொழில் இவைகளால் ஒருவரின் பட்டப்பெயர் வைக்கப்படுகின்றது. உதாரணத்திற்கு, குள்ளமாக இருந்தால் குள்ளையன், உயரமாக இருந்தால் நெட்டையன், வெள்ளையாக இருந்தால் வெள்ளையன், கருப்பா இருந்தால் கருப்பால்டி.
எங்க ஊருல வினோதமான பட்டப்பெயர்கள் உண்டு. ஒரு வாத்தியார் பேசும்போது அடிக்கடி “சரிதாம்பா… சரிதாம்பா…” என்று சொல்லுவாராம். அதனால் அவருக்கு ‘சரிதான் வாத்தியார்’ என்று வைத்துவிட்டனர். இன்னொருவர் தனது நண்பன் அயர்ந்து தூங்குவதைப் பார்த்து, “என்னப்பா செத்த பொணம் மாதிரி தூங்குறியே?” என்று கேட்டாராம். அதற்கு நண்பர், “பொணம் என்றாலே செத்ததுதான். அது என்ன செத்த பொணம்?” என்று கேட்டவர் அவருக்கு ‘செத்த பொணம்’ என்று பட்டப்பெயர் வைத்துவிட்டார். இப்படியாக நாம் பட்டப்பெயர் வைப்பதைப் பற்றி கூறுவதுதான் இந்த பழமொழி.

12. உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியாது.

சோற்று உலையை அனல் குறைவாக வைத்து மூடி போட்டு வெளியில் பொங்கி வராமல் அதனை சமைத்துவிடலாம். ஆனால் நம்மைப் பற்றிய ஒரு ரகசியத்தை ஒருவரிடம் கூறினால், அவர் அதனை பத்து பேரிடமாவது கூறினால்தான் அவருக்கு தூக்கம் வரும். அந்த பத்து பேர் மேலும் பலரிடம் கூறுவர். இப்படியாக ஊர் முழுக்க அந்த விஷயத்தைப் பற்றிதான் பேசுவார்கள். அதனை தடுத்து உங்கள் ரகசியத்தைக் காக்க முடியுமா? ஊர் வாயை மூட முடியாது.

13.ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சினேகம் இழுக்கும்.

ஊசியை காந்தம் இழுப்பதுபோல, உத்தமனின் அன்பு கண்டு அனைவரும் அவனிடம் நட்பு கொள்ள விரும்புவர்.

14.மண்ணைத் திண்ணாலும் மறையத் திங்கணும்.

பிள்ளைகள் வீட்டில் செய்த திண்பண்டங்களை வீட்டிற்கு வெளியில் அல்லது தெருவில் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் பெரியவர்கள் அவர்களை அதட்டி வீட்டிற்கு உள்ளே சென்று சாப்பிடுமாறு கூறுவார்கள். ஏனென்றால் யாராவது பார்த்தால் ‘என்ன ஏதோ சாப்பிடுகிறானே!’ என்று நினைத்துவிட்டாலே அந்த எண்ண அலையாகப்பட்டது பிள்ளைகளுக்கு உடல்நல பாதிப்பை ஏற்படுத்தலாம். அதினால்தான் மண்ணைத் திண்ணாலும் மறையத் திங்கணும் என்று கூறுவார்கள்.

15.ஊரான் போவ பலபட்டர ஏன் தெண்டம் கொடுக்க?

யாரோ ஒருவர் அனுகூலம் அடைய நாம் ஏன் பணம் செலவு செய்யவேண்டும்? அல்லது யாரோ ஒருவர் செய்த குற்றத்திற்கு நாம் ஏன் தண்டனை அனுபவிக்கவேண்டும்? என்பதுதான் இதன் அர்த்தம்.

தொடரும்…

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

மரிய ரீகன் ஜோன்ஸ்

தமிழ் நாட்டின் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பழையனூர் என்னும் சிறிய ஊராட்சியில் வசிக்கிறேன். ஒரு BE பட்டதாரி. தமிழை நேசிப்பதால், தமிழில் எழுதி இணையத்தில் அதனை நிறுத்த வலைப்பூவில் பதிவிடும் நூற்றுக்கணக்கான தமிழ் வலைப்பதிவர்களில் நானும் ஒருவனாக இணைந்திருக்கிறேன்.

http://www.tamilpriyan.com

2
Leave a Reply

avatar
2 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
0 Comment authors
s sureshதிண்டுக்கல் தனபாலன் Recent comment authors
  Subscribe  
newest oldest most voted
Notify of
திண்டுக்கல் தனபாலன்
Guest
திண்டுக்கல் தனபாலன்

நல்ல விளக்கம்… தொடர்க…

s suresh
Guest
s suresh

அருமையான விளக்கம்! தொகுப்பிற்கும் பகிர்வுக்கும் மிக்கநன்றி!