வள்ளுவனின் இறை பக்தி

திருவள்ளுவர்தெய்வ பக்தி உள்ள ஒவ்வொருவரும் ஒரு செயலை தொடங்கும்முன் கடவுளைத் தொழுவது நாம் பார்க்கின்ற உண்மை. கவிஞர்களும் அதைத்தான் செய்துள்ளார்கள். திருவாசகத்தை எழுதிய மாணிக்க வாசகரின் “வானாகி, மண்ணாகி” என்ற கடவுள் வாழ்த்து மனதை உருக்குகிற ஒரு பாடல். தெய்வ பக்தி கொண்ட திருவள்ளுவரும் 10 குறள்களைக் கொண்ட ஒரு அதிகாரத்தையே கடவுள் வாழ்த்துப் பகுதியாக எழுதியுள்ளார்.

திருக்குறளின் பெருமை உலகம் அறிந்ததே. உலகப் பொதுமறை எனச் சொல்லப்படுவதே அதன் சிறப்பின் சிறப்பை தெளிவுபடுத்துகிறது. பொய்யாமொழிப் புலவர், தெய்வப் புலவர் என்றெல்லாம் திருவள்ளுவர் அழைக்கப் பெறுவது அவரது பெருமையை பறைசாற்றுகிறது. இரண்டு இரண்டு வரிகளில் இரத்தின சுருக்கமாக கருத்துக்களை, கருத்துக் கனிகளை வாரி வாரி வழங்கியிருக்கிறார்.

நிச்சயமாக மனத்தூய்மை இல்லாதவராக இருந்திருந்தால், இறைஞானம் இல்லாமல் இருந்திருந்தால் இப்படிப்பட்டக் கருத்துக்களை உலகிற்கு அளித்திருக்க முடியாது. திருக்குறள் என்னும் புதையல் நமக்கு கிடைத்திருக்கவும் வாய்ப்பில்லை. குறள் தெளிவுரைகள் அனைத்தும் அவனின் தூய சிந்தனை, இறைஞானம் மற்றும் முற்போக்கு சிந்தனை என அவரின் பல நற்குணங்களையும் நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

உலகம் இறைவனை முதலாகக் கொண்டுள்ளது என ஆணித்தனமாய்

1.அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

என்று முதல் குறளில் சொல்லிவிட்டு, அதனை நம்பாதவற்கு சவுக்கடியாக எழுதப்பட்டதுதான்,

10.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

என்னும் குறள்.

இறைவனை வணங்குவோர் மட்டும் பிறவியாகிய பெருங்கடலை நீந்துவர், இறைவனை வணங்காதோர் பிறவியாகிய பெருங்கடலை நீந்தமாட்டார் என்பதுதான் அதன் விளக்கம்.

பிள்ளைகள் பெற்றோரைப் போன்றிருப்பது உண்மை. அவர்கள் வளரும் விதங்களில், குணாதிசயங்களில் சிலர் மாறிப்போவதும் உண்மை. அதுபோலத்தான் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டுள்ள மனிதனும், அவரைப் போல மாற, அவரை வணங்கித்தான் ஆகவேண்டும். அவர் நல்ல குணங்களை பின்பற்றிதான் ஆகவேண்டும். அப்போதுதான் மானிடப் பிறவியாகிய பெருங்கடலை மேற்கொள்ள முடியும்.

எண்ணிப் போற்றும் நற்குணங்களை உடையவர் கடவுள். அவரை நாம் தினமும் தொழுதுகொள்ள வேண்டும் எனக் கூறும் வள்ளுவர் இறைபக்தி இல்லாதவரை சாடும் வகையில் எழுதியுள்ளதுதான் ஒன்பதாவ்து குறள்.

9.கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

அதாவது எண்ணிப் போற்றும் நல்ல குணங்களை உடையவன் இறைவன். அவன் திருவடிகளை வணங்காத் தலைகள் உணர்வில்லா பிணத்திற்கு சமம் என்கிறார். இன்னும் தெளிவாக்க வேண்டும் என்றால், உணர்வில்லாத மெய்,பேசாத வாய், காணாத கண்கள், முகராத மூக்கு, கேளாத செவி, மொத்தத்தில் அவன் ஒரு பிண்டம் என்கிறார்.

இறைவனின் படைப்புகளில் சிறந்தவன் மனிதன். அவன் ஏன் இறைவனைப் போல ஆக முயற்சிக்கவேண்டும் என்பதற்கு இறைவனைப் பற்றிய விளம்பரமும், அவன் எப்படிப்பட்டவன் என்பதையும் 3,4,6 மற்றும் 7 ஆகிய குறள்களில் தெளிவாக்கியிருக்கிறார் என்பதுதான் உண்மை.

3.மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

மனமாகிய மலரில் தங்கியிருக்கும் அன்புள்ளம் கொண்டவன் இறைவன் என்றும்,

4.வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

விருபுதலும் வெறுத்தலும் இல்லாத இறைவன் என்றும்,

6.பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

ஐம்புலன் ஆசைகளை ஒழித்தவன் இறைவன் என்றும் இறைவனின் புகழினை அடுக்குகிறார்.

7.தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

தனக்குவமையாக வேறு யாரும் இல்லாத இறைவன் என்றும் இறைவனின் நல்ல குணங்களுக்கு சான்றிதழ் தருகிறார்.

ஆக, அனைவரும் கடவுளை வணங்கவேண்டும் என்பதுதான் அவருடைய ஒட்டுமொத்தக் கருத்து.

நம்மை மனிதனாக படைத்த இறைவனை புகழ்வதை மறந்தால், நாம் நன்றி கெட்ட ஜென்மம் அல்லவா?

இறைவனைப் புகழ்வதால் நமக்கு என்ன பயன் என 5வது குறளில் சொல்லியிருக்கிறார்.

5.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

இறைவனை புகழ்ந்து போற்றுபவர்களை வாழ்கையில் தீமை அணுகாது.நம்மைப் படைத்தவனுக்கு நமது நன்றிக் கடனைக் காட்டும்போதுகூட, பதிலுக்கு நம்மை ஆசீர்வதிக்கும் வள்ளலாக இறைவனைச் சித்தரிக்கிறார்.

படிக்காதவர்கள் யாரும் கடவுள் இல்லை என பறை சாற்றவில்லை, அன்றே இக்கருத்தை வள்ளுவர் உணர்ந்திருக்கிறார். அதனால்தான் படித்தவர்களையும் நேரடியாகத் திட்டாமல்,திட்டுகிறார்.

2.கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

தூய அறிவினை உடைய இறைவனின் திருவடிகளை தொழாவிட்டால் கற்றதனால் ஒரு பயனும் இல்லை என்பதை நறுக்கென்று சொல்லிவிட்டு மனிதர்கள் அனைவரும் அறக்கடலாய் விளங்கும் இறைவனின் திருவடிகளை வணங்கினால்தான் அவர்களது பிற ஆசைக் கடல்களை நீந்திக் கடக்க முடியும் என 8வது குறளில் நமக்கு புத்தி புகட்டுகிறார்.

8.அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

இறைவனை வணங்குபவன் , மதிப்பவன் அவனை பிரதிபலிக்கிறான், நல்ல பண்புகளை உடையவனாக இருக்கிறான். அவனுடைய சாயலாகவும் இருக்கிறான்.

எத்தனை பேரை ஏமாற்றி, தான் பிழைக்க முடியும் என வாழ்பவன் மனிதன் அல்ல, மிருகம். எத்தனை பேரை வாழவைக்க முடியும், எத்தனை பேருக்கு உதவிட முடியும் என நினைப்பவன் மனிதன் அல்ல. அவன் இறைவன், இறைவனின் சாயல் மற்றும் இறைவனின் நிழல்.

மேலும் திருவள்ளுவர் இறைவன் என்று பொதுவாகத்தான் அனைத்துக் குறள்களிலும் குறிப்பிட்டுள்ளார். தனிப்பட்ட ஒரு கடவுளின் பெயரை குறிப்பிடவில்லை. இதிலிருந்து இறைவன் ஒருவனே என்னும் கருத்தை வலியுறுத்துகிறார்.

எனவே அந்த ஒரே இறைவனை வணங்குவோம். ஏனெனில் “அவனின்றி ஓர் அணுவும் அசையாது”.

வள்ளுவனே இறைவனுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கும்போது, “நமது வாழ்வில் இறைவவனுக்கு நாம் தரும் பங்கு என்ன?” என்பதை சிந்திப்போம்.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
Subscribe
Notify of
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
திண்டுக்கல் தனபாலன்
நவம்பர் 3, 2012 8:15 காலை

சிறப்பான பகிர்வு… நல்ல விளக்கம்…

விரும்பிப் படித்தேன்… நன்றி… வாழ்த்துக்கள்…

s suresh
நவம்பர் 3, 2012 8:27 காலை

நல்ல தெளிவான கருத்துக்கள்! இறை நம்பிக்கைவைப்போம்! நன்றி!

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.