கூடி வாழ்ந்தால் கோடி நன்மை

Spread the love

ஒத்த பழமொழிகள்:

1. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

2. ஒற்றுமையே பலம்.

3. ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம்.

4. தனிமரம் தோப்பாகாது.

ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்ந்தால் நமக்குள் சண்டை வரவே வராது.ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதை பெரியோர்களும் கவிஞர்களும் காலம் காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.உதாரணத்திற்கு பின்வரும் கூற்றை நாம் கேள்விப்பட்டிருப்போம்.

“ நான்,நீ என்று சொன்னால் உதடுகள் ஒட்டாது.நாம் என்று சொன்னால்தான் உதடுகள் ஒட்டும். ”

நமது உடல் உறுப்புகளே நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன.

“தனிமரம் தோப்பாகாது”.பல மரங்கள் ஒன்று சேர்ந்ததுதான் தோப்பு.அது போல தனி ஒரு மனிதனே எல்லா செயல்களையும் வெற்றிகரமாக செய்துவிட முடியாது.மற்றவர்களது உதவி அவசியம்.அதற்கு நம்முள் ஒற்றுமை மிக முக்கியம்.

இந்தியா ஒரு வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு.இருப்பினும் அன்று நாம் பிற நாட்டவர்களிடம் அடிமைபட்டுக் கிடந்ததற்கான காரணம் நாம் ஒற்றுமையாக இல்லாதிருந்ததே.

பின்வரும் கதைகள் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றன.

முட்டாள் பூனைகள்:

இரண்டு பூனைகள் ஒரு வீட்டிலிருந்து சிரமப்பட்டு ஒரே ஒரு பணியாரத்தை திருடி வந்தன.வெளியில் வந்து பங்கு பிரிக்கும் போது அவைகளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

“நான்தான் உள்ளே சென்று எடுத்து வந்தேன்.நீ வெளியில் தானே இருந்தாய்.எனக்குத்தான் அதிகமாக பங்கு வேண்டும்.”

“நான்தான் வெளியில் இருந்து உன்னை எச்சரிதேன்.இல்லையென்றால் நீ வீட்டுக்காரரிடம் அடி வாங்கியிருப்பாய்,இந்த பணியாரமும் கிடைத்திருக்காது.அதனால் எனக்குத்தான் அதிக பங்கு வேண்டும்.”

“சரி,இருவரும் சமமான வேலைகளை செய்திருக்கிறோம்.அதனால் இதை சரிபாதியாக பிரித்துக்கொள்வோம்.நானே பிரித்துத்தருகிறேன்.”

“உன் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.என்னிடம் கொடு.நான் பிரிக்கிறேன்”

“அது முடியாது.உன் மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை.”

இப்படியாக சண்டை முற்றிக்கொண்டே போனது.அந்த வழியாக ஒரு குரங்கு வந்தது.அது பிரச்சினையைப் பற்றி விசாரித்தது.

“என்ன இங்கு பிரச்சினை?”

பூனைகள் நடந்தவற்றை கூறின.குரங்கு கேட்டது,“உங்களுக்கு என்ன,இதை சரிபாதியாக பிரிக்க வேண்டும் அவ்வளவுதானே?” என்று.

“ஆமாம் குரங்கண்ணே! நீங்களே இதை பிரித்துக் கொடுத்துவிடுங்கள்” என்று பூனைகள் கூற குரங்கு தராசை எடுத்து பணியாரத்தை இரண்டு துண்டுகளாக பிட்டு இரண்டு பக்கமும் வைத்து எடை போட்டது.ஆனால் ஒருபக்கம் மட்டும் அதிகமாக இருந்தது.

“பூனைகளே,இந்த பக்கம் சிறிது அதிகமாக இருக்கிறது.அதை மட்டும் நான் பிட்டு சாப்பிட்டுக்கொள்ளட்டுமா? ஏனென்றால் அந்த சிறிய துண்டை உங்களுக்கு சரி பாதியாக பிரிப்பது கடினம்.”

“சரி,அண்ணே.நீங்கள் எங்களுக்கு பிரித்து கொடுக்கிறீர்கள்.அதற்கு கூலியாக அதை சாப்பிட்டுக்கொள்ளுங்கள்.”

குரங்கு அதை பிட்டு சாப்பிட்டப்பின் மீண்டும் தராசை வைத்து எடை போட்டது.இப்பொழுது மற்றொரு பக்கம் அதிகமாக இருந்தது.

“இப்போ இந்த பக்கம் அதிகமாக இருக்கிறது.இந்த அதிகமாக இருக்கும் சிறிய துண்டை நான் பிட்டு சாப்பிட்டு விடுகிறேன்…” என்று கூறிய குரங்கு இந்த முறை அவர்களது பதிலை எதிர்பார்க்காமலேயே தின்றது.

பூனைகளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.குரங்கு பெரியவர் என்பதால் அமைதியாக இருந்தன.

ஆனால் குரங்கு எடை போடும்போதெல்லாம் ஏதேனும் ஒரு பக்கம் அதிகமாகவே இருந்தது.அதனால் அதிகமாக இருக்கும் பக்கங்களில் இருந்து சிறிது பிட்டு சாப்பிட்டுக்கொண்டே இருந்தது.கடைசியில் இருபக்கமும் மிகச்சிறிதளவே இருந்தது.

“இந்த சிறிதளவு பணியாரத்தை வைத்து என்ன செய்யப்போகிறீர்கள்? இதையும் நானே சாப்பிட்டுவிடுகிறேன்.” என்று கடைசியில் அனைத்தையும் குரங்கே சாப்பிட்டுவிட்டது.

“ஆஹா! என்ன சுவை! இப்படிப்பட்ட பணியாரத்தை சாப்பிடடாமல் எனக்கே கொடுத்துவிட்டீர்களே! நன்றி பூனைகளே,வருகிறேன்.” என்று குரங்கு நடையை கட்டியது.

பூனைகள் தங்கள் தவற்றை உணர்ந்தன.

“டேய்! நம்ம ரெண்டு பேரும் ஒற்றுமையாக இருந்திருந்தால் நாமே பணியாரத்தை சாப்பிட்டு இருக்கலாம்.இப்போது அந்த குரங்கு நம்மை ஏமாற்றிவிட்டது.”

“ஆமாண்டா! ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்று பெரியவர்கள் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்! இனிமேலாவது நாம் ஒற்றுமையாக இருப்போம்.”

“சரிடா!”

என்று பூனைகளும் நடைகட்டின.

இந்த கதையிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் நாம் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதே.

நான்கு மாடுகளும் ஒரு சிங்கமும்:

இந்த கதையை நீங்கள் சிறு வயதில் படித்திருப்பீர்கள்.

நான்கு மாடுகளும் ஒரு சிங்கமும்

ஒரு காட்டில் நான்கு மாடுகள் இருந்தன.அவைகள் இணைபிரியாத நண்பர்கள்.எப்போதும் ஒன்றாகவே இருந்தன.புல் மேயச் செல்லும்போதுகூட ஒன்றாகவே சென்றன.

அந்த காட்டில் ஒரு சிங்கமும் இருந்தது.அது ஒருநாள் வேட்டைக்கு வந்தபோது இந்த மாடுகள் அதன் கண்ணில் அகப்பட்டன.உடனே ஒரு மாட்டின் மீது பாய்ந்தது.அந்த மாடு சிங்கத்திடம் இருந்து தப்பிக்க பலமுறை முயன்றது.சிங்கத்தின் பலத்திற்கு ஈடு கொடுக்க முடியுமா? அதனால் மற்ற மாடுகளின் உதவியை கேட்க கத்தியது.

தன் நண்பர்களில் ஒன்று சிங்கத்திடம் அகப்பட்டு இருப்பதைப் பார்த்த பற்ற மூன்று மாடுகள் ஒன்றாக வந்து சிங்கத்தை கொம்புகளால் குத்தி விரட்டிவிட்டன.

அன்று அடிபட்டு போன சிங்கம் “எப்படியாவது இந்த நான்கு மாடுகளையும் சமயம் வரும்போது அடித்து சாப்பிடவேண்டும்.இல்லையென்றால் அது நம் சிங்க குலத்திற்கே அவமானம்” என்று தனக்குள் எண்ணிக்கொண்டு அன்றிலிருந்து தக்க சமயத்தை எதிர்பார்த்துக்கொண்டிருந்தது.

அது எதிர்பார்த்த நாளும் வந்தது.ஏனென்றால் இன்று அந்த மாடுகள் தனித்தனியாக வெவ்வேறு இடங்களில் மேய்ந்துகொண்டிருந்தன.காரணம் அவைகளுக்குள் எது பலம் வாய்ந்தது என்ற சண்டையில் பிரிவு ஏற்பட்டுவிட்டது.

“ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம்.” என்று கூறுவார்கள்.அதாவது கிராமங்களில் ஏதேனும் திருவிழா என்றால் தெருக்கூத்து கட்டச்சொல்வார்கள்.தெருக்கூத்துக்காரர்கள் இரவில் விடிய விடிய நாடகம்,பாடல்கள் மற்றும் பல கலை நிகழ்ச்சிகள் என திருவிழாவை கோலாகலப்படுத்துவார்கள்.ஊர் ரெண்டு பட்டால் இரண்டு திருவிழா;இரண்டு கூத்து;இருமடங்கு வருவாய்.அவர்களுக்கு கொண்டாட்டம்தான்.

அதுபோல மாடுகளுக்குள் சண்டை என அறிந்த சிங்கத்திற்கு ஒரே மகிழ்ச்சி.ஏனென்றால் முன்போல ஒரு மாடை வேட்டையாடும்போது மற்ற மாடுகள் காப்பாற்ற வராதல்லவா? எனவே,ஒவ்வொரு மாடும் தனித்தனியே இருந்ததால் தினமும் ஒவ்வொன்றாக அடித்து தின்றது.ஒற்றுமையாக இல்லாததால் அந்த மாடுகள் அழிந்தன.

‘ஒற்றுமையாக இருப்பதே பலம்’ என்பதை நாம் உணர்ந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அன்போடு வாழ பழகிக்கொள்வோம்.

What’s your Reaction?
+1
5
+1
2
+1
2
+1
0
+1
2
+1
1

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.


Spread the love

1
Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
avatar
1 Comment threads
0 Thread replies
0 Followers
 
Most reacted comment
Hottest comment thread
0 Comment authors
remo ranjith Recent comment authors
  Subscribe  
Notify of
remo ranjith
Guest
remo ranjith

so well friends in all boys and girls

Content Protected

மின்னஞ்சல் வழியாக பின்பற்ற
Follow Via Email

உறுப்பினராக இணைந்து புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே பெற்றிடுங்கள்.